குறள் 588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.
ஒற்றித் - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.
தந்த - கொடுத்த
பொருளையும் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
மற்றும் - மேலும்; மீண்டும்
ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.
ஓர் - (வி)ஆராய்; தெளி.
ஒற்றினால் - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.
ஒற்றி - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.
முழுப்பொருள்
ஒரு ஒற்றர் ஒரு நாட்டிற்கு அரசருக்குச் சேகரித்துக் கொடுத்த செய்தியின் உண்மையினை வேறு ஒரு ஒற்றர் கொடுக்கும் செய்தியை வைத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏன் வேறு ஒரு ஒற்றர் மூலம் சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும்?
பொதுவாக ஒற்றர் கூறும் செய்திகள் மிக ரகசியமான செய்திகள். வெளியே எளிதாக கசியாத செய்திகள். இவை பெரும்பாலும் மற்றொரு நாட்டின் விருப்பதிற்கு எதிராகவே இருக்கும். ஆதலால் ரகசியம் காக்கப்படுகின்றன. தக்க சமயத்தில் எதிர்பாராத விதமாக பகைவர் தாக்குவர். ஒற்றர் கூறும் இச்செய்திகளை நம்பியே ஒரு அரசர் முடிவுகளையும் திட்டங்களையும் எடுக்கிறார். இது தவறாக இருப்பின் அதன் விளைவுகளும் பயங்கரமாய் இருக்கும்.
பெரும்பாலும் திறன் படைத்தவர்களே ஒற்றர்களாக நியமிக்கப்படுவர். ஆயினும் சூழ்நிலைகளால் ஒரு ஒற்றர் சில தகவல்களை தவறாக அறிந்துணர்ந்திருக்க கூடும். அல்லது முழு செய்தி கிடைத்து இருக்காது. அல்லது பகைவர் தவறான செய்திகளை வெளியே கசியவிட்டிருக்கக் கூடும். அதில்லாமல் ஒற்றர் வேண்டுமென்றோ அல்லது பகைவரிடம் விலைக்குப்போயோ அல்லது பகைவரிடன் அகப்பட்டோ தவறான செய்தியை கொடுத்திற்கக் கூடும். ஆதலால் தான் இரு ஒற்றர்களை வைத்து செய்தியின் நம்பகதன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலக்கிய மேற்கோள்கள் பெருங்கதையிலும், சீவக சிந்தாமணியிலும் காட்டப்படுகின்றன. “ஒற்று ஒற்றியவரை ஒற்றின் ஆய்ந்தும்”, “ஒற்று மாக்களின் ஒற்றரிந் ஆயா” என்ற வரிகளை பெருங்கதையில் (3.23:53,25.48) காணலாம். “ஒற்றர்தங்களை ஒற்றரின் ஆய்தலும் கொற்றங் கொள்குறிக் கொற்றவர்க் கென்பவே” என்ற வரிகளை சீவக சிந்தாமணியிலும் காணலாம் (சீவக 1921).
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.).
மணக்குடவர் உரை
ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.
மு.வரதராசனார் உரை
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.
No comments:
Post a Comment