குறள் 569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]
பொருள்
செரு - போர்; ஊடல்.
வந்த - வருதல்
போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.
சிறை - காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று.
செய்யா - செய்யாமல்
வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
வெரு - அச்சம்; பயம்
வெருவந்து - அச்சம் வந்து
வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்.
கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
முழுப்பொருள்
போர் மற்றும் வெள்ளம் வறட்சி தொற்று நோய் நிதி நெருக்கடி போன்ற காலகட்டங்கள் வந்தால் எப்படி காப்பது என்று முன்னரே திட்டம் வகுக்காத ஆயுத்தமாக அரசு/ஆட்சி, போர் மற்றம் தவிர்க்கக்கூடிய நெருக்கடிகள் (நிதி பற்றாகுறை) வராத வண்ணம் முன்பே அதில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, போர் அல்லது நெருக்கடி வந்தபோது காக்காத அரசு, அரண் இல்லாத அரசு ஆகும். அத்தகைய அரசு போர் அல்லது நெருக்கடி காலங்களில் அதனை எதிர்க்கொள்ளத் திராணி இல்லாமல் அஞ்சி அந்த வெம்மையிலேயே அழிந்து விடும்.
பொச்சாவாமை அதிகாரத்தில் இதே போன்று மறதியின்மையின் தேவையை வலியுறுத்தி ஒரு குறள். “முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னூ றிரங்கி விடும்”. அக்குறளின் பொதுத்தன்மையும் இக்குறளைப் போன்றே உள்ளது. குற்றங்கடிதல் அதிகாரத்தில், “வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுப் போலக் கெடும்” என்று பரவலாக அறியப்பட்ட ஒரு குறளும் இதேபோன்ற பொருளில்தான்.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற முதுமொழி எல்லோரும் அறிந்ததுதான். இக்குறளும், பொச்சாவாமை, குற்றங்கடிதல் அதிகாரங்களில் சொல்லப்பட்டக் குறளும், “முற்பகல் செய்யாவிட்டால் பிற்பகல் விளயும்” என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளன.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.
(பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.
மு.வரதராசனார் உரை
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
சாலமன் பாப்பையா உரை
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.
No comments:
Post a Comment