இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை குறள் 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு

 

குறள் 568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ]

பொருள்
இனத்து - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

எண்ணாத  -நினைக்காத, ஆலோசிக்காத, மதிக்காத, முடிவுசெய்யாத

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

சினத்து - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.

ஆற்றிச்ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

சீறின் - சீறுதல் - பாம்புமுதலியனசத்தத்துடன்வெகுளுதல்; குதிரைமுதலியனமூச்செறிதல்; மூர்க்கமடைதல்; தீமுதலியனமுழங்கிஎரிதல்; கோபித்தல்; அழித்தல்.

சிறுகும் - சிறுகு - குழப்பம்; துன்பம்; தடை.
சிறுகும் - சிறுகுதல் - சிறுகல், குறைதல்.

திருச் - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

முழுப்பொருள்
தன்னுடைய அமைச்சர்களுடன் கூடி கலந்து ஆலோசிக்காத அரசன், அமைசர்களிடம் கண்ணோட்டம் (தாட்சினியம்) இல்லாமல் சினந்து சீறும் அரசன் தன் செல்வம் சிறுக சிறுக குறைந்து ஆட்சி இழந்து நிற்பான்.

பிறர் செய்த குற்றங்களை தனது இனமானாரோடு ஆராய்வது அரசனின் கடமையாகும். அதை செய்யாத அரசனின்/நாட்டின் செல்வங்கள் நாளும் குறையும். உதாரணமாக சொன்னால் இயற்கை வளங்களை சூறையாடும் தன்நபர்கள் நிர்வாகங்கள், சுற்றுசூழலை அழிக்கும் நிர்வாகங்கள், பரவலான் லஞ்சம் முதலியவை கடும் குற்றங்கள். இவற்றை கலந்து ஆலோசித்து ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். இல்லையேல் அரசின் அளவு கடந்து அரசையும் நாட்டையும் தாக்கும் நோயாக மாறி சிறுக சிறுக அழிக்கும்.

அஞ்சத்தக்கவாறு ஆளுவோர் இருப்பதற்கான பல காரணங்களுள் தம் அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் இருப்பதும் காரணம். தம்மைத்தானே தன்னுடைய அஞ்சத்தகுந்த தோற்றத்தால் தனிமைப்படுத்திக்கொள்பவர் யாரும் தம் வளங்களைக் காத்துக்கொள்ளும் திறனற்றவர் ஆகிவிடுவார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் - காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன், சினத்து ஆற்றிச் சீறின் - அப்பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின், திருச்சிறுகும் - அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
(அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர், நீங்கவே,அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடியசொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்.
ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின் அவன்செல்வம் குறையுமென்றாவறு. இனம்- மந்திரி, புரோகிதர்.

மு.வரதராசனார் உரை
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

சாலமன் பாப்பையா உரை
தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain