குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]
பொருள்
கொலையில் - கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.
கொடியாரை - கொடியான் - கொடுமையானவன்
வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.
ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.
பைங்கூழ் - இளம்பயிர்; விளைநிலம்; நோய்.
கட்டதனொடு - களைகட்டல் - களைபிடுங்கல், களைபறித்தல்
நேர் - உடன்பாடு; உவமை; செவ்வை; நீதி; நல்லொழுக்கம்; திருந்தியதன்மை; மாறுபாடு; நீளம்; வரிசை; பாதி; நுணுக்கம்; கொடை; கதி; காண்க:நேர்விடை; தனிமை; மிகுதி; ஊர்த்துவநிலை; நிலைப்பாடு; காண்க:நேரசை; வலிமை; முன்; பிராகாரம்.
முழுப்பொருள்
பிற உயிர்களை மதிக்காது குறிப்பாக மனிதர்களை, காட்டு விலங்குகளை (புலி, யானை, சிறுத்தை, பறவைகள், மான் இன்னும் பல) எந்த ஒரு காரணத்திற்காவும் கொலை செய்தல் கொடுமையான ஒன்றாகும். அவர்களை ஒரு வேந்தன் விரைவாக ஆராய்ந்து அல்லது புகார் வந்தால் விரைவாக ஆராய்ந்து அத்தகையவர்களை மரண தண்டனை கொடுத்து அழித்தல் அல்லது அவர்களின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் வதைத்தல் /வருத்துதல் தவறே இல்லை. அது ஒரு விவசாயி உணவு பயிர்கள் விளையும் நிலத்தில், மற்ற பயிர்களின் ஆரோக்கியத்தை தடுக்கும் களைகள் உயிர் என்றாலும், ஈவு இரக்கம் தயை தாட்சினையை இன்றி அந்தக் களைகளை பிடுங்கி எறிவதற்கு சமம்.
விலங்குகளை கொலை செய்வதற்கு ஆயிர காரணங்கள் இருக்கலாம் 1) யானையின் தந்ததங்கள் 2) புலியில் தோல் 3) மருந்து 4) உணவு 5) கேளிக்கை 6) பாடம் செய்த மிருக உடல்கள் வீட்டில் அழகுப்பொருளாக அலங்கரிக்க 7) பல மிருகங்களின் தோல்கள், பறவைகளின் ரோமங்கள்/மயிர்கள் கைப் பைகளாக (handbag) என்று பல. ஆனால் அவையாவும் எல்லா விதத்திலும் நியாயம் அற்றவை.
அதேப்போல் கொலை செய்வது மட்டும் கொடியது அல்ல பெண்களை, குழந்தைகளை கடத்தி பாலியல் தொழில் செய்தல், உடல் உறுப்புகளை திருடுதலும் கொலை செய்யும் கொடுமைக்கு நிகர். இவர்களையும் கொலை செய்தல் முற்றிலும் சரியே.
”ஆவாஎன்னா துலகத்தை அலைக்கும் அசூரர் வாழ்நாள்மேல்
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா” (திருவாய் 6.10:4)
”..... அறவரம் பிகவா வண்ணம்
தீயன வந்த போது சுடுதியால் தீமை யோரை” (கம்ப.அரசியல்.34,
“நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்.” (கம்ப.கிட்கிந்தை 3,
”நஞ்சம் அன்ன வரைநலிந் தாலது
வஞ்சம் அன்று மனுவழக் காதலால்” (கம்ப.கிட்கிந்தை 5)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும். கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.
மு.வ உரை
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை
கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
No comments:
Post a Comment