குறள் 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]
பொருள்
இகழ்ச்சியின் - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு;
ikaḻcci n. id. 1. Detraction,disparagement, undervaluing; அவமதிப்பு (குறள்,995.) 2. Fault; குற்றம் (பிங்.) 3. Remissness,negligence, forgetfulness; அசாக்கிரதை இகழ்ச்சி
கெட்டாரை - அழிந்தார், வறுமையடைந்தார், பாழானார்,
உள்ளுக - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.
தாந்தம் - தாம் தம் ; ஒவ்வொருவரும் தம்முடைய
மகிழ்ச்சியின் - உவகை, சந்தோஷம்
மைத்தல் - கறுத்தல்; ஒளிமழுங்குதல்.
மதப்பு - களிப்பு; மிகுகாமம்; வெறிகொள்ளுகை; நிலம்முதலியவற்றின்செழிப்பு.
மைந்துறும் - மதப்படையும்
போழ்து - பொழுது
முழுப்பொருள்
நான் உயர்ச்சி அடைந்துவிட்டேன்! நான் வெற்றிப் பெற்றுவிட்டேன்! எனக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
நாம் மகிழ்ச்சியில் களிப்படைந்து மனஒளிமழுங்கும் பொழுது, (சோர்வடையும் பொழுது) மறதியால் கெட்டு அழிந்தவரை நினைவில் கொள்க. மறதி எப்படி ஒருவரை அழித்தது என்பதை நீ நினைத்துப்பார்த்தால் நீ மகிழ்ச்சியில் களிப்பில் இருந்து மீண்டு உன் செயல்களை சோர்வில்லாமல் ஆற்றுவாய். அதீத களிப்பு சோர்வை கொடுக்கும். சோர்வு மறதியை கொடுக்கும். தன்னுள் தான் மூழ்கி தன்னை இழத்தலுக்கு காரணம் மறதி என்பதை நினைவில் கொண்டு செயலில் கவனத்தை மறவாதே.
உதாரணமாக சினிமாவிலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் துறையிலும் நாம் பல நட்சத்திரங்களை பார்ப்போம். ஓவ்வொரு காலகட்டத்திலும் வெற்றிபெற்ற சில நட்சத்திரங்கள் இருப்பார்கள். சிலர் நடிகர்கள் தொடர்ந்து 3-4 ஆண்டுகள் பல வெற்றிகளை கொடுப்பர். சில விளையாட்டு வீரர்கள் சில ஆண்டுகள் நன்றாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் நாளடைவில் நடிப்பதில் இருந்தோ அல்லது விளையாட்டில் இருந்தோ காணாமல் போய் விடுவர். ஏனெனில் இவர்கள் எங்கோ தனது வெற்றிகளில் களிப்படைந்து தான் வெற்றிக்காக பல வருடங்கள் தொடர்ந்து செய்த உழைப்பை செய்ய மறந்துவிடுவர். அல்லது தன்னை புதிப்பித்துக்கொள்ள மறந்துவிடுவர். தங்கள் நடிப்பு முறையினையோ அல்லது கதைத் தேர்வு முறையினையோ அல்லது விளையாட்டில் தனது ஆட்டத்தின் முறையையோ காலத்திற்கு ஏற்ப மாற்ற மறந்துவிடுவர். அதனால் அவர்கள் தோல்வி அடைந்து அழிவர்.
இது பல நிர்வாகங்களுக்கும் பொருந்தும். எத்தனையோ நிர்வாகங்கள் (உதாரணமாக Kodak photo film) தங்களை தங்கள் நிர்வாக முறைகளை காலத்திற்கு புதுப்பித்துக்கொள்ள மறந்ததனால் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளனர்.
தனிநபர் வாழ்க்கையில் பள்ளிக்கூடங்களில் படிப்பில் கவனம் செலுத்திய அளவு கல்லூரிகளிலும், வேலைகளிலும் கவனம் செலுத்த மறந்துவிடுவர். பள்ளிக்கூடத்தில் அவர்கள் மிகச்சிறப்பாக செயலாற்றி இருப்பார்கள். பள்ளிப்பாடங்களைத் (state board syllabus ஐ) தாண்டி மற்ற நுழைவுத்தேர்வுக்கு படிப்பர். அங்கு 200% சதவிகிதம் உழைத்தவர்கள், கல்லூரியில் அப்படி உழைப்பதில்லை. கல்லூரிப்பாடங்களை pass செய்வதற்காக மட்டும் படிப்பவர்களே மிக அதிகம். கல்லூரியை கற்றல் இடமாக திறனை வளர்த்துக்கொள்ளும் அறிவை வளர்த்துக்கொள்ளும் இடமாக பார்க்க மறக்கின்றனர். கல்லூரியை வாழ்வின் வசந்தகாலமாக நினைத்துக்கொண்டு மெய்யாக கற்க மறந்துவிடுகின்றனர். வேலைக்கு சேர்ந்தப்பிறகு தன்னை மேம்படுத்திக்கொள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள தன்னை தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள மறந்துவிடுகின்றனர். வேலையை சம்பாதிக்கும் ஒரு பொருட்டாக மட்டுமே பார்க்கின்றனர். இன்னொரு விதமாக சொன்னால். “People start taking things for granted". பள்ளிக்கூடங்களில் காண்பிக்கும் excellence-ஐ வேலையில் காண்பிக்க கற்க மறந்துவிடுகின்றனர். முதல் 5-6 ஆண்டுகள் அது வேலையில் தெரியாது. ஆனால் 5-6 ஆண்டுகள் ஆனப் பிறகு வேலையில் மிகநன்றாக வேலை செய்பவருக்கும் சாதானாமகாக வேலை செய்பவருகும் ஒரு பெரிய வித்தியாசம் தெரியும் (marked difference). மிக நன்றாக வேலை செய்பவர் fast-track-இல் இருப்பார். மேலும் go-to-man ஆக ஒரு asset ஆக இருப்பார். இவர்கள் அனைவரும் பள்ளிக்காலங்களில் ஒரே அளவு அறிவுத்திறனையும் உழைப்பையும் கொடுத்தவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஒருவர் வேலையில் கற்றார் உழைத்தார். மற்றொருவர் வெறுமனே தேவையான அளவே உழைத்தார். பள்ளியில் 200% உழைப்பு கொடுத்த வெற்றியின் அளவை மறந்து வேலையில் வெறும் 100% சதவிகிதம் கொடுத்தால் தேக்கமே மிஞ்சும்.
யோகாசானம் பயில்வோருக்கு ஒன்று தெரியும் rhythm என்பது மிக முக்கியம். அதற்கு தேவை consistency. அதற்து தேவை மறவாமை. Don't take thing for granted. Don't get complacent. Don't forget things in the name of being busy, getting distracted etc.
ஒப்புமை
“செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம்மேல் புகழ்பிறர் பாரட்டத் - தம்மேல்தாம்
வீரம்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
சோரப் பொதியாத வாறு” (பழமொழி, 131)
“இகழ்ச்சியின் விட்ட இறைவன் போல
மகிழ்ச்சி யெய்தி மணிமுடி வேந்தன்” (பெருங். 1.44:65-6)
“மகிழ்ச்சி யெய்தி மாற்றார் இல்லெனும்
இகழ்ச்சி ஏதம் தலைத்தது எனக்கு (பெருங். 3.24:164-5)
“இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுள்
திகழ்ச்சி சென்ற செம் பொன்முடி மன்னனே” (சூளா.சீயவதை.56)
“அரசியற் பாரம் பூரித் தயர்ந்தனை யிகழா தையன்
மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி” (கம்ப.வாலி.137)
“மூவரை வென்றுமூன் றுலகு முற்றுறக்
காவலின் நின்றுதம் களிப்புக் மைம்மிக
வீவது முடிவென வீந்த தல்லது
தேவரை வென்றவர் யாவர் தீமையோர்” (கம்ப. இராவணன் மந்திரப்.70)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.
(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
மணக்குடவர் உரை
அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது. இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.
மு.வரதராசனார் உரை
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.
No comments:
Post a Comment