குறள் 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
பொருள்
ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
வருந்துதல் - துன்புறுதல்; உடல்மெலிதல்; மிகமுயலுதல்; வருந்திவேண்டிக்கொள்ளுதல்.
வருந்தா - முயலாமல்
வருத்தம் - துன்பம்; முயற்சி; களைப்பு; நோயாளியின்அபாயநிலை; அரிதல்நிகழ்வது.
பலர் - அநேகர்; சபை.
நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல்.
போற்றினும் - போற்றுதல் - pōṟṟu- 5 v. tr. 1. Topraise, applaud; துதித்தல். (பிங்.) போற்று மடியாருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60). 2. Toworship; வணங்குதல். (பிங்.) 3. To protect,cherish, keep with great care; பாதுகாத்தல். போற்றி னரியவை போற்றல் (குறள், 693). 4.To nourish; வளர்த்தல். (W.) 5. To guardagainst; பரிகரித்தல். புறஞ்சொற் போற்றுமின்(சிலப். 30, 188). 6. To adhere, hold fastto; கடைப்பிடித்தல். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் (குறள், 538). 7. To entertain; to treatwith regard; உபசரித்தல். எம்மைப் போற்றவே(கம்பரா. அரசியல். 40). 8. To desire;விரும்புதல். போற்றிக் கேண்மதி (பொருந. 60). 9.To consider; கருதுதல். பொச்சாவாக் கருவியாற்போற்றிச் செயின் (குறள், 537). 10. To understand; to pay attention to; மனத்துக்கொள்ளுதல்.கொண்டனர் நிரை போற்றெனக் கூறினான் (சீவக.430). 11. To gather together; கூட்டுதல். (பிங்.)
பொத்துப்படும் - பொத்துப்படுதல் - தவறுதல்; செயல்கைகூடாதுதீமைபயத்தல்.
முழுப்பொருள்
ஒரு செயலுக்குத் தேவையான ஆயுத்தப்பணிகளை முழுவதுமாக வருந்தி செய்யாமல் அதற்கு தேவையான எல்லாவகையான முயற்சிகளையும் துவக்கத்தில் செய்யாமல் அச்செயலை செய்தால்/ முயன்றால் அது துன்பத்தை மட்டும் தராது அதனை பலர் வந்து நின்று கூட்டாக உழைத்து உதவினாலும் பாதுக்காத்தாலும் அச்செயல் தவறாகவே முடியும் அல்லது முடங்கிவிடும். ஏனெனில் முதல் கோணல் முற்றிலும் கோணல்.
உதாரணமாக நாம் பல நிர்வாகங்கள் / கடைகள் / சினிமாக்கள் ஒரு உற்சாகத்தில் அதீத தன்னம்பிக்கையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி அல்லது முழு திட்டமிடலும் இன்றி துவங்கபடும். போகிற வழியில் கற்றுக்கொள்ளலாம் என்று துடங்கப்படும். ஆனால் பலர் ஜாம்பவான்கள் வந்து பணிபுரிந்தாலும் அவை பெரும்பாலும் முடங்கி போவதையே நாம் காண்போம்.
இன்று Agile Methodologies, Iterative method என்று ஒவ்வொருப் படியாக ஒரு பொருளை ஒரு செய்தியை கொள்கையை வளர்த்து எடுக்கின்றனர். அது தவறில்லை. சரியே (ஏனெனில் தவறான பாதையில் செல்வதை முன்னரே தவிர்க்கலாம்). ஆனால் அதற்கு ஒருவித திட்டம் வேண்டும். ஒவ்வொரு படியிலும் நாம் என்ன செய்யப்போகிறோம், தோல்விகளை எப்படி கையாளப்போகிறோம், அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் விளைவு இல்லையென்றால் நாம் ஒரு சுவரை முட்டிவிட்டதுப் போல் இருப்போமோ அல்லது அதில் இருந்து மீண்டுவர வேறு வழிகளை வைத்திருக்கிறோமா என்ற தெளிவான திட்டமிடல் அவசியம். ஒரு நடுவழியிலோ அல்லது பிரச்சனை என்று வந்த உடனோ பலர் வந்து உதவினாலும் அச்செயல் வெற்றிகரமாக முடிவது மிக மிக கடினம்.
பழமொழிப் பாடல்களிரண்டு இக்கருத்தையொட்டியன.
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.
அறிவிற் சிறந்தோர், தம்மால் முடியக்கூடிய செயலா என்று முதலில் ஆராய்ந்து, பின் தனக்குத் துணையானவர்களையும் ஆராய்ந்து, செய்யக்கூடிய செயலில் உள்ள பயனையும் ஆராய்ந்து, மேற்கொள்வர். அங்கனமின்றி, முறையறியாமல், ஏதேனும் செய்தால், தாம் நினைந்ததற்கு மாறான துன்பமே விளையும் என்கிறது மேற்கண்ட பாடல்.
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண்.
மேற்கண்ட பாடல் சோழன் செம்பியன் தேவர்களுக்காக அசுரர்களின் ஊரினை அழித்ததைச் சொல்லி, அம்பினை வலிவாகத் தொடுத்தால் கவசமும் பிளந்துவிடும், அதுபோல முடிந்த அளவு முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற கருத்தைச் சொல்லுகிறது. இப்பாடல் முயற்சியை முன்னிருத்திச் சொல்லப்பட்டது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
(முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை
மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.
மு.வரதராசனார் உரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
No comments:
Post a Comment