குறள் 465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
பொருள்
வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.
அறச் - aṟa adv. அறு¹-. 1. Wholly, entirely,quite; முழுதும் வகையறச் சூழாது (குறள், 465). 2.Intensely, excessively; மிகவும் அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 3. Clearly; தெளிவாக அறமறக் கண்ட . . . அவையத்து (புறநா. 224). 4. Tho-roughly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.
சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
சூழாது - சூழாமல்
எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல்.
பகைவரைப் - பகைவர் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்எனஆன்மாவின்உட்பகைகளாயுள்ளஆறுகுற்றங்கள்.
பாத்திப்படுப்பது - பாத்திப்படுத்து-தல் - pātti-p-paṭuttu- v. tr. பாத்தி +. To establish, set up; நிலைபெறச்செய்தல். பகைவரைப் பாத்திப்படுப்பதோராறு(குறள், 465).
ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.
ஓர் - (வி)ஆராய்; தெளி.
ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை
முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன் அதனைப் பற்றி முழுவதுமாக ஆராயாமல், அச்செயலின் தன்மையை முழுவதுமாக அறியாமல், அச்செயலை செய்வதற்குத் தேவையான வலிமைகளையும், இடங்களையும் காலத்தையும் திறன்களையும் அறியாமல், செயலினால் வரக்கூடிய பயன்களை ஆராயாமல், செயலுக்கான திட்டத்தை திட்டாமல், செயலில் வரக்கூடிய இடர்களை முழுவதுமாக உணராமல், அதற்கான தந்திரங்களை சிந்தித்து தீட்டாமல், ஒருவர் ஒரு செயலை செய்தால் (அல்லது பகைவருக்கு எதிராக போருக்கு சென்றால்) அது பகைவரை நமது நிலத்திலேயே விதைத்து பாத்திக்கட்டி வளர்த்து நிலைபெற செய்வதற்கு ஒப்பாகும். பகைவர் கேடு விளைவிப்பர். ஆதலால் அச்செயலும் கெட்டு அழியும். செல்வம் அழியும். மனம் துன்பத்தில் உழலும்.
ஆதலால் எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன்பு முழுவதுமாக ஆராயவேண்டும். அரைகுறையாக ஆராய்ந்தால் ஆபத்து.
“பின்னின்றார் இனைய ரென்றும் உணர்கிலம் பிடித்த மாயம்
என்னென்றும் தெளிதல் தேற்றாம் யாவதீ தென்றும் ஓராம்
முன்னின்றார் முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்
பொன்னின்ற வயிரத் தோளாய் புகழுடைத்தாமன் றென்றான்” (கம்ப.மாரீசன்.234)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.
(அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.
இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.
மு.வரதராசனார் உரை
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை
முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.
No comments:
Post a Comment