குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]
பொருள்
மன - மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.
நலத்தின் - நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
ஆகும் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
மறுமை - மறுபிறவி; மறுவுலகம்.
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
அஃதும் - அதுவும்
இன - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்
நலத்தின் - நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.
உடைத்து - இருக்கும்
முழுப்பொருள்
நமது மனதின் நலம் நம்மை நல்ல செயல்களில் ஈடுபடுத்தும். நமது எண்ணங்கள் நாம் பெற்ற ஞானம் ஆகியவை நம்மை நல்வழிப்படுத்தும். நல்ல செயல்களை செய்து அறத்தை வளர்த்து சான்றோர்ப்பாதையில் சென்றால் இம்மையில் நல்லவற்றை கடைப்பிடித்ததனால் நமக்கு மறுமையில் நல்ல வாழ்வு அமையும். ஆயினும் நல்லதொரு மறுமையை அடைய இம்மையில் நமக்கு வலிமை சேர்பது நல்ல இனமே ஆகும். நமது நல்ல சுற்றம் நம்மை தக்க நேரத்தில் நம்மை பாதுக்காக்கும். அது இம்மைக்கு மட்டும் பயன் தராது, மறுமையில் நாம் நல்வாழ்வு வாழ்ந்திடவும் வழி வகுக்கும்.
ஆதலால் இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்வு வாழ்ந்திட மனதின் நலம் தேவை என்றாலும் இனத்தின் நலம் வலிமை சேர்க்கும் அரணாக நிற்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,
(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.).
மணக்குடவர் உரை
மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.
மு.வரதராசனார் உரை
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
No comments:
Post a Comment