குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
பொருள்
பல்லார் - பலர்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.
கொளலின் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்
பத்து - ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர்முதலியோரிடத்துஉள்ளபத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில்பத்துப்பதிகம்கூடியபகுதி; சீட்டுக்கட்டில்பத்துக்குறியுள்ளசீட்டினம்.
அடுத்த - aṭutta aTutta அடுத்த next; (with time words) the one after the coming one
அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.
தீமைத்தே - தீமை- கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன.
நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்.
தொடர் - தொடர்கை; சங்கிலி; விலங்கு; பஞ்சு; வரிசை; பிசின்; பூமாலை; மரபுவழி; சொற்றொடர்; பழைமை; நட்பு; உறவு; உலோகங்களைஉருக்கஉதவும்மட்பாண்டம்.
கைவிடல் - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்
முழுப்பொருள்
ஒருவருக்கு பகை என்பது என்றும் தீயதையே நிகழ்த்தும். அதனால் துன்பமும் இழப்பும் தான் அதிகம். முகத்தில் புன்னகையும் மனதில் மகிழ்ச்சியும் மறையும். ஆனால் இவையாவும் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிந்த புறப்பகை. பகைவர்களை பெரியோர் துணைக்கொண்டு தவிர்க்கலாம், வீழ்த்தலாம்.
பல பகைவர்கள் இருந்தால் துன்பத்தின் அளவும் பன்மடங்கு உயரும். ஆனால் பல பகைவர்கள் இருக்கும் பொழுது வரும் பன்மடங்கு தீமையைவிட பத்துமடங்கு தீமை பயப்பது பெரியோர் சான்றோரின் உறவை/ தொடர்பை விட்டொழிதல் ஆகும். ஏனெனில் பெரியோரது துணையின்றிப் போகுமாயின், அகப்பகைகளும் வளர்ந்து, ஆட்கொல்லியாக மாறி அழித்துவிடும். அதனாலேயே பெரியோரின் அணுக்கமும், அறவழி நடத்துதலும் ஒருவருக்குத் / ஒரு அரசருக்குத் தேவை. புறப்பகையைக்கூட துணையின்றி வென்றுவிடலாம் ஆனால் அகப்பகையை பெரியோர் துணையின்றி வெல்லுதல் மிக கடினம். அதனால் தான் பெரியோர் துணைவிட்டொழுகல் பத்துமடங்கு தீமைத்தரும்.
பெரியோர்கள் உடன் இந்தால் நம்மை நல்ல கேள்விகள் கேட்டு சிந்திக்கவைப்பர். அதனால் அகப்பகையால் நாம் செய்த தவறுகளை அறிந்து உணர்ந்து அதன் வேர்களை அறுத்து மீண்டு வருவோம்.
இன்னா நாற்பது பாடல் (27), “பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா” என்று அதை ஒரு துன்பமாகவேச் சொல்லுகிறது.
நாலடியார் பாடலொன்று, பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே என்று அங்கலாய்க்கிறது. அப்பாடலாவது:
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
(பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.
மு.வரதராசனார் உரை
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
No comments:
Post a Comment