குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
காதல - தான் விழைந்தவைகளுள்
காதல் - அன்பு; காமவிச்சை; விரகம், பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.
அறியாமை - அறியாத்தன்மை; மடமை
உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்
பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.
உய்க்கிற்பின் - நடத்திக்கொள்பவர்களிடம்
ஏதில் - ētil - s. Strangeness, foreignness, not being one's own (people, &c.), அன்னியம். 2. Vicinity, neighborhood, proximity, nearness, அயல். (probably from ஏது, cause and இல்், neg.) (p.)
ஏதில - எண்ணம் நிறைவேறாது
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.
முழுப்பொருள்
ஒரு அரசர் (அல்லது ஒருவர்) தனது ஆசைகளை விரகங்களை இச்சைகளை விழைபவராக இருக்கலாம். அது மனித இயல்பு. ஆனால் அவை நமக்கு ஒரு விதத்தில் பலவீனமே. ஆதலால் நமக்கு பலவீகமாக அமையக்கூடிய ஆசைகளை இச்சைகளை நாம் விழைந்தாலும் அவற்றைப் பிறர் குறிப்பாக எதிரிகள் (நண்பர்கள் கூட ஏனெனில் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பகையாக மாறக்கூடும்) அறியாவண்ணம் நுகரமுடிந்தால் அத்தகைய அரசனை (அத்தகைய ஒருவனை) வெல்லக்கூடிய ஆயுதத்தை உடைய பகைவர் யாரும் இருக்க முடியாது.
விரகங்களை இச்சைகளை வைத்துக்கொள்ளுதல் தவறு தானே. அதையேன் வள்ளுவர் கண்டிக்கவில்லை? ஏனெனில், தனது இச்சைகளை பற்றிய அறிதலால் ஏற்படக்கூடிய வீழ்ச்சியை அறிந்தும், தன்னையும் தன் நாட்டையும் தன் குடும்பத்தையும் வீழ்த்தக்கூடிய இச்சைகளை எல்லோரும் அறியும் வண்ணம் செய்தல் பெரும் குற்றாமாகும். அதை அடிக்கோடிடவே திருவள்ளுவர் இக்குறளை கூறியுள்ளார்.
ஒப்புமை
கீ.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே,
“வேந்தர்தாம் விழைப வெல்லாம் வெளிப்படார் மறைத்தல்கண்டாய்
நாந்தக உழவர் ஏறே நன்பொருளாவ தென்றான்” (சீவக.2910)
பெருங்கதையிலிருந்து கீழ்காணும் வரிகள் மேற்கோளாகக் காட்டுகிறார்.
“......உட்காதொழுகின்
பகைவர் எண்ணம் பயமில் வென்னும்
நீதிப்பெருமை நூல் ஓதியும் ஓராய்” (பெருங் 2.1:24.6). இவை ஒரு ஆள்பவரைப்பார்த்து இடித்துரைகும் வீச்சிலிருப்பதை புரிந்துகொள்ளலாம். இதைத்தான் வள்ளுவரும் சொன்னதாகக் கொள்ளலாமா?
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.).
மணக்குடவர் உரை
காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர்கற்ற கல்வி.
மு.வரதராசனார் உரை
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
No comments:
Post a Comment