குறள் 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
இவறன்மை - கடும்பற்றுள்ளம்; அசட்டை ஆசை
எற்றுள்ளும் - எவற்றுள்ளும்
எண்ணப்படுவது - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.
முழுப்பொருள்
எச்சைக்கையால் காக்கயைக் கூட விரட்டாத கருமித்தனம் பற்றி கேள்விப்படுகிறோம். அதாவது எச்சையில் கையில் இருக்கிற சோறுப் பருக்கை கூட கீழே விழுந்து பிற உயிர்கள் உண்டு பயனற்றுவிடக்கூடாது என்னும் சுயநலத்தன்மை கருமித்தனம். அக்கருத்தை ஒட்டியே இக்குறள் சொல்லும் பொருளும்.
தன் செல்வத்தின் மீது அதீத பற்றுக்கொண்டு அச்செல்வத்தை தேவையானவற்றுக்கூட செலவு செய்யாமல் அச்செல்வத்தை பாதுக்காப்பது மற்ற எல்லாகுற்றங்களை காட்டிலும் செய்யக்கூடாத ஒன்று. ஏனெனில் அது ஒரு கொடுங்குற்றமாகும். இங்கே தேவையானவைக்கூட செலவு செய்யாது இருத்தலுக்கு உதாரணமாக சொன்னால் தந்தை தாயின் உடல் நலத்திற்கு உணவிற்கு இருப்பிடத்திற்கு, தன் சொந்தபந்தங்களின் நியாயமான தேவைகளான கல்வி, மருத்துவம், உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட செலவு செய்யாது இருத்தல் போன்றவற்றை கூறலாம். இன்னும் பல உதாரணங்களை கூறலாம்
கருமித்தனம் குணங்களை அழிக்கும் தீது என்பதை கம்பராமாயண, தாடகை வதப்படலப் பாடலொன்றும் தெரிவிக்கிறது.
“உளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே
அளப்பருங் குணங்களை அழிக்கு மாறுபோல்” (கம்ப.தாடகை 43).
“உட்டெறு வெம்பகை யாவது லோபம்
விட்டிட” (கம்ப.வேள்வி.32)
நடுக்குறச் செய்யும் செல்வத்தின் பிணைப்பாகிய கருமித்தனம் ஒன்றே ஒருவருக்கு மதிப்பிடமுடியாத குணநலன்களயும் அழிக்கக்கூடிய தீமை என்கிறார் கம்பரும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது.
(இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று. இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.
மு.வரதராசனார் உரை
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை
செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
No comments:
Post a Comment