குறள் 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
பொருள்
நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
பட்ட - இருக்கும்
வறுமையின் - துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை.
இன்னாதே - இன்னாது - தீது; துன்பு
கல்லார் - கல்வியறிவற்றவர், கீழ்மக்கள்.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
பட்ட - இருக்கும்
திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.
முழுப்பொருள்
கொடிது கொடிது வறுமை கொடிது என்றார் ஔவையார். நல்லோர்க்கும் அல்லோர்க்கும் வறுமை கொடியதே. கெட்டவன்/வரியவன் வாழலாம் ஆனால் நன்கு வாழ்ந்தவன் கெடக்கூடாது என்று கூட கூறுவர். அப்படி இருக்கையில் ஏன் திருவள்ளுவர் கல்லாதவரிடம் இருக்கும் செல்வம் தீதானது துன்பம் தருவது என்று கூறுகிறார்? ஏனெனில் கல்லாத பேதையர்களிடம் இருக்கும் செல்வம், செல்வம் செல்லக்கூடாத இடங்களுக்கு சென்று சீரழியும், அச்செல்வத்தைக் கட்டிக்காக்கவோ பெருக்கவோ தெரியாமல் அவர்கள் அச்சத்திலேயே இருப்பர். அச்செல்வத்தை அபகரிக்க பலர் வந்து உறவாடுவர். பின்னாட்களில் வஞ்சிப்பர். தமக்கும் பிறருக்கும் பயனுள்ள வழிகளில் செல்வத்தை செலவழிக்க மாட்டார்கள். ஆதலால் கல்லாதவரிடம் செல்வம் தீதையும் துன்பத்தையும் தரக்கூடியது.
கல்லாதார் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு மட்டும் துன்பம் அல்ல அதனை வஞ்சித்து அபகரித்தவர்களும் நேர்மையற்றவர்கள் அவர்களும் தவறான வழிகளில் செலவு செய்வதால் அதுவும் துன்பமே தரும். ஆனால் நல்லார் பட்ட வறுமை தரும் துன்பம் அவர்களுக்கு மட்டுமே. அதனால் தான் கல்லாதவரிடம் இருக்கும் செல்வம் நல்லவர்கள் பட்ட வறுமையைவிட கொடியது.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே” (புறநா.197:15-8)
“எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர்
மறுமை அறியாதான் ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை” (நாலடி.275)
“சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப்
பெர்யவர் நல்குரவு நன்றே” (பழமொழி 70)
பரிமேலழகர் உரை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.
மு.வரதராசனார் உரை
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
சாலமன் பாப்பையா உரை
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
No comments:
Post a Comment