குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
[பொருட்பால், அரசியல், கல்வி]
பொருள்
யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.
ஆனும் - ஆயினும்; ஆவது
யாதானும் - எதுவாயினும்
நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
ஆல் - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.
ஆமால் - போன்றதாம்
ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
ஆமால் - போன்றதாம்
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.
சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.
சாதல் - இறத்தல்
துணையும் - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
கல்லாதவாறு? - கற்காமல் இருப்பது ஏன்?
முழுப்பொருள்
நூல்களை கற்ற ஒருவனுக்கு அவன் செல்லும் இடமெல்லாம் அவனுடைய இடமாக அவனுடைய பிறப்பிடம் போன்று மாறிவிடும். ஏனெனில் கற்றோரை எல்லோரும் ஏற்பர். கற்றோருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு (என்பது பழமொழி). கல்விக்கு அவ்வளவு சிறப்பு உள்ளது. ஆனால் இவ்வளவு சிறப்பு இருந்தும் இறப்பு வரைக்கும் கற்காமல் பலர் இருப்பது ஏனோ? கற்காமல் ஏன் இருக்கிறாய் என்று திருவள்ளுவர் கேட்கிறார்.
கற்றவர்களுக்கு யாதுமூர் என்றாகிவிடும் ஏனெனில் அறிவு என்னும் ஒளி இருக்கும் பொழுது எத்தனை இருளானாலும் அதனை அவ்வொளி களைய முடியும். கற்றோர்களை எல்லோரும் ஏற்பர். அதுவே கல்லாதவர்கள் தான் அவ்விருளில் செல்ல பயப்படுவர்.
இதனை சில ஆண்டுகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்திவிட்டு பின்பு வாழ்வில் கற்காமல் தேங்கி நிற்கும் குட்டைப்போன்றவருக்கும் பொருத்திப்பார்க்கலாம் ஏனெனில் அவர்கள் எவ்வளவு கற்றார்களோ அவ்வளவே எல்லை. அதனைத் தாண்டி அவர்களால் செல்ல முடியாது.
எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.
இப்பழமொழியை வைத்து, எழுதப்பட்ட பழமொழிநானூறுப் பாடலொன்று இதோ.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னரிற் கற்றோன் சிறப்புடையன் –மன்னர்க்குத்
தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு.
மற்றுமொரு பழமொழிநானூறுப் (55) பாடலொன்றும் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறது.
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறநா.192.1)
“மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செவினும் அத்திசைச் சோறே” (புறநா.206:11-3)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?
(உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.).
மணக்குடவர் உரை
யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?. இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.
மு.வரதராசனார் உரை
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
சாலமன் பாப்பையா உரை
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.
No comments:
Post a Comment