குறள் 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
பொருள்
கொடை - ஈகம், தியாகம், ஈகை; உதவிப்பொருள்; கைக்கொண்டஆநிரையைஇரவலர்க்குவரையாதுகொடுக்கும்புறத்துறை; ஊர்த்தேவதைக்குமூன்றுநாள்செய்யும்திருவிழா; வசவு; அடி.
அளி - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்
செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
நான்கும் - மூன்றுக்குமேல்ஒன்றுகொண்டஎண்; நாலில்ஒருபங்கு; வட்டிக்காகச்சேர்த்துஅறுவடையானதும்கொடுப்பதாகச்சம்மதித்துப்பெறும்தானியக்கடன்.
உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
வேந்தர்க்கு - வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.
முழுப்பொருள்
ஒரு அரசருக்கு புகழையும் / ஒளியையும் சேர்ப்பது எது? (அல்லது ஒரு அரசர் புகழுடன் விளங்க என்ன செய்ய வேண்டும்?)
1. கொடை செய்ய வேண்டும். மக்களுக்கு தானங்களை கொடுத்து உதவ வேண்டும்
2. அளி செய்தல் வேண்டும். அதாவது அருள் செய்தல் வேண்டும். முகம் மலர்ந்து இனியவற்றை கூற வேண்டும்
3. செங்கோல் புரிய வேண்டும் - நீதி நூல்களும் அரசாட்சி நூல்களும் கூறியப்படி நாட்டை நிர்வகிக்க வேண்டும்
4. குடியினை ஓம்புதல் வேண்டும் - அதாவது மக்களையும் அவர்களது குடிமைகளையும் காக்கத்துப் பேண வேண்டும். அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும். அவர்கள் பிணிகளை போக்க வேண்டும். நாட்டில் குற்றங்கள் நடக்காது மக்களை நிம்மத்தியில் வைக்க வேண்டும்.
இவை நான்கையும் ஒரு அரசர் செய்தால் அவரின் புகழ் ஒரு விளக்கின் ஒளிப்போல் பிரகாசிக்கும். அவர் விளக்கு எப்படி ஒரு அரைக்கு இருளை நீக்கி வெளிச்சம் தருகிறதோ அதுப்போல அவ்வரசரும் அந்நாட்டு மக்களுக்கு பிணிகளை நீக்கி வெளிச்சமும் வாழ்க்கையும் தருகிறார். விளக்கை தெய்வத்தின் ரூபமாக பூஜிக்கும் மக்கள் அரசரையும் வணங்குவர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”சாலக் குடியோம்பல் வல்லான் அரசன்” (திரி.13)
பரிமேலழகர் உரை
கொடை - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், அளி- யாவர்க்கும் தலையளி செய்தலும், செங்கோல் - முறை செய்தலும், குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, நான்கும் உடையான் -இந்நான்கு செயலையும் உடையான், வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம்.
(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு'என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.
கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.
No comments:
Post a Comment