குறள் 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
பொருள்
பொருள்
அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி
அல்ல - இல்லை, அன்று
செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
ஆங்கே - ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.
வீவர் - வீவு - அழிவு; சாவு; கெடுதி; முடிவு; குற்றம்; இடையீடு.
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி
அல்ல - இல்லை, அன்று
மற்றைய - குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று
தேற்று - தெளிவு; தெளிவிக்கை; தேற்றாமரம்.
தேற்றாதவர் - தெளிவு இல்லாதவர்
முழுப்பொருள்
அளவு என்பது ஞானம். ஆதலால் அளவு என்பது நல்ல எண்ணங்கள். நல்ல எண்ணங்களுக்கு எதிரான தீய எண்ணங்களை கொண்டவர் தீயச் செயல்களை செய்வார். அப்படிச் செய்கின்றவர் அங்கேயே அழிவார். அவர்கள் களவு / வஞ்சம் என்னும் தீய எண்ணங்களை தவிர வேறு ஏதும் அறியாத தெளிவு இல்லாதவர்கள். வஞ்சம் அல்லாத நல்லவற்றை நல்லவழிகளை அறியாதவர்கள்.
மனதில் தீய எண்ணங்களை விதைத்தால் அது சொற்களில் வெளிவரும் பின்பு செயல்களில் வெளிப்படும். ஆதலால் தீய எண்ணங்களை கொள்ளும் உடனேயே அவர் அழிந்தார் என்றும் புரிந்துக்கொள்ளலாம்.
எண்ணங்கள் மீது கண்காணிப்பும் கவனமும் கட்டுப்பாடும் அவசியம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், அளவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர். (தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர். இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.
மு.வரதராசனார் உரை
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
No comments:
Post a Comment