Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு

மனத்ததுமனம் அது

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

மாண்டார் - மாட்சிமையுள்ளவர்; இறந்தவர்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

ஆடி - கூத்தாடுபவன்; கண்ணாடி பளிங்கு நான்காம்மாதம்; உத்தராடநாள்பகலில்பன்னிரண்டுநாழிகைக்குமேல்இரண்டுநாழிகைகொண்டமுகூர்த்தம்; நாரை ஆணிவகை.

ஆடுதல் - அசைதல்; கூத்தாடுதல் விளையாடுதல் நீராடுதல் பொருதல் சஞ்சரித்தல் முயலுதல் பிறத்தல் சொல்லுதல் செய்தல் அனுபவித்தல் புணர்தல் பூசுதல் அளைதல் தடுமாறுதல் எந்திரமுதலியவற்றில்அரைபடுதல்; விழுதல் செருக்குதல்

மறைந்து - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

மாந்தர்  -  மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

பலர் - அநேகர்; சபை

முழுப்பொருள்
மாட்சிமை பொருந்திய துறவிகள் அகத்தே தூய்மையாக இருப்பவர்கள். அவர்கள் அகத்தூய்மைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை புறத்தூய்மைக்கும் கொடுத்தார்கள். ஆனால் மெய்யான துறவிகளின் புறத்தூய்மையை மட்டும் கண்களால் பார்த்து சிலர் வேளாவேளைக்கு நீராடி புறத்தே தூய்மைப்படுத்திக்கொண்டு அகத்தே தூய்மைப்படுத்துக்கொள்ளமால் இருப்பர். மேலும் தியானம்/ஊழ்கம் போன்றவற்றை ஒரு சடங்காக செய்து அகத்தே ஒரு மேன்மையையும் அடையாதவர்கள். 

இத்தகையோர் அகம் மாசுகளால் நிரம்பியிருக்கும். மாசு எனில் காம வெகுளி மயக்கங்கள். அகத்தே இருட்டுடையோர் எப்படி ஒளி வீசும் துறவியாக முடியும்? இத்தகைய அகத்தே மாசு கொண்டு புறத்தே தூய்மையாக இருந்து உத்தமர்ப்போல் காட்டிக்கொள்ளும் மாந்தர்கள்/மனிதர்கள் இவ்வுலகில் (சிலர் அல்ல) பலர் உள்ளனர். அத்தகையர்களிடம் எச்சரிக்கை வேண்டும். அதுப்போல பொய்யான வேடங்களை நாம் தரிக்கவும் கூடாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர். இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

சாலமன் பாப்பையா உரை
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

மனம் பற்றி
மனம், மனம், மனம். மனத்தைப் பற்றிக் கூறாத மனம் இல்லை. மனத்தின் பரிமாணங்களை இலக்கிய யோக ஞான தத்துவங்கள் எடுத்துரைக்கின்றன. 

மனத்தை அறிந்தவன் பேரறிஞன். மனத்தை அடக்கியவன் மகா ஞானி. மனித வாழ்க்கையின் தோற்றமும் முடிவும் மனத்தினால் உண்டாகும். 

மனம் என்பது, பழைமையான கலைவடிவம். மனம் அவரவர் எண்ணங்களின் தொகுப்பு. எண்ணங்கள் இருந்தால் மனம் இருக்கும். எண்ணங்கள் இல்லாவிட்டால் மனம் இருக்காது. அணுக்களின் தொகுப்பு பொருளாகிறது. அணுக்கள் தனித்தனியே பிரிந்தால் பொருளாவதில்லை. பொருளாகும் அணுக்கள் தனித்தனியே பிரிந்தால் பொருளாவதில்லை. 

பொருளாகும் அணுக்கள் அனைத்தும் ஒரே வகையான அணுக்களாக இருப்பதில்லை. அவற்றுள் பல வகை. அதே போல், மனத்தில் தொகுக்கப்படுகின்ற எண்ணங்கள் ஒரே வகையான எண்ணமாக இருப்பதில்லை. அவை பலவகை. மனதின் தொகுப்பான எண்ணங்களில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்பம், துன்பம், ஈகை, இழிவு, பகை, பாசம், பற்று, காதல், அன்பு, கல்வி, கேள்வி, அச்சம், துணிவு, ஆக்கம், கேடு, ஆணவம், அடக்கம், பரிவு போன்ற எல்லாம் அடங்கும். 

எல்லோர் மனமும் ஒரே வகையான எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. 
நல்ல எண்ணங்களைத் தொகுத்த மனம், நல்லவனாகிறது. 

தீய எண்ணங்களைத் தொகுத்த மனம், தீயனாகிறது. 

கலை சார்ந்த எண்ணங்களைத் தொகுத்த மனம், கலைஞனாகிறது.

அறிவு சார்ந்த எண்ணங்களைத் தொகுத்த மனம், அறிஞனாகிறது. 

மனம் தனது எண்ணம்போல் செயல்படத் தொடங்கினால், மனித வாழ்க்கை நிலைகொள்ளாது தடம் மாறிப் போய்விடும். 

மனம் தனது எண்ணம்போல் செயல்படுவதை கட்டுப்படுத்திக்கொண்டு வரவேண்டும். தீய எண்ணங்களைச் சிந்திக்கும் மனத்தை அடக்கி வைக்க வேண்டும். அடக்காத மனம் அலைந்து திரியும்.

தீய எண்ணங்களின் அளவு அதிகமாக அதிகமாக அவை மனதைப் பாதிக்கத் தொடங்கும். மனம் பாதித்தால் வாழ்க்கை பாதிக்கும். 

மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களினால் ஞானிகளும் அறிஞர்களும் பாதிப்படைவதில்லை. சராசரி நிலையிலுள்ள பாமரன் பாதிக்கப்படுகிறான். 

ஞானிகளின் மனத்தின் இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஞானிகளின் ஏவலைக் கேட்டே அவர்களின் மனமும் இயங்கும். 

பாமரனின் மனத்தின் இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், மனத்தின் ஆதிக்கம் அதிகமாகி, அவர்களின் தோளின் மீது அமர்ந்துகொண்டு, அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். 

உதாரணமாக, ஒரு பொருளின் மீது அளவற்ற ஆசையை ஏற்படுத்துகின்ற மனம், அப்பொருளை அதிக விலை கொடுத்தாவது வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அப்படி தூண்டச் செய்கின்ற மனம், அப்பொருளை வாங்கிய பின்பு அமைதியாவதில்லை. அப்பொருளை ஒவ்வொரு நிமிடமும் பார்த்துப் பார்த்து புதிய புதிய எண்ணங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. மனம் உருவாக்கும் புதிய எண்ணங்களினால் பாமரன் அலைக்கழிக்கப்படுகிறான். 

இவ்வாறு கட்டுப்பாட்டில் இல்லாத மனம் மனிதனை புதிய புதிய எண்ணங்களினால் ஆட்சி செய்வதுடன் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. 

மனிதனுக்கு இருக்கின்ற தேவைகளைப் போல, மனத்துக்கும் சில தேவைகள் இருக்கின்றன. 

மனம், தான் நன்றாக இருக்க வேண்டும். தான் எண்ணுகின்ற எண்ணத்தை மற்ற எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என்று விரும்பும். ஒன்று வேண்டும் என்று எண்ணிய அடுத்த நிமிடத்தில் ஒன்று வேண்டாம்! இரண்டு வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

மனத்தை மனிதன் நேசிக்க வேண்டுமென்று, புதிது புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள அலைந்து திரியும். தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ள விரும்பி, பாராட்டுகளைத் தேடும். நான், நான், நான், என்று எப்போதும் சொல்லிக்கொள்ளும். 

பிற மனத்தைத் தன் வயப்படுத்துவதற்காக, அம்மனத்தில் அன்பு விதையை முளையிடச் செய்யும். அன்பு கிடைக்காத மனத்திடமே அன்பைப் பிச்சையாகக் கேட்கும். 

ஒரு காட்சியைக் கண்டவுடன் அதன் தன்மைகளைப் படம் பிடிக்கும். அதைப் பற்றிய கருத்துகளை வருணனை கூறுவது போல எண்ணங்களை அடுக்கிக் கொண்டேயிருக்கும். 

ஒருவரைச் சந்திக்க வேண்டிய நேரம் வருகின்ற போது, அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகும். எவ்வகையிலாவது, அவரைச் சந்திக்காதவாறு சிக்கல்களை உருவாக்கும். அதையும் மீறி சந்திக்க நேர்ந்தால் அவருடன் இணங்காத செயல்களை உருவாக்கும், இணங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிலை தடுமாறுவதுபோல பாசாங்கு செய்யும்.

மனத்தின் இத்தகைய செயல்களுக்கெல்லாம் காரணம் எண்ணவெனில், தன்னைப் பற்றியே மனத்துக்கு ஏற்படும் தவறான எண்ணந்தான். 

மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று எண்ணும் மனம், மனிதனுக்குக் கட்டுப்படவேண்டும் என எண்ணுவதில்லை. 

மனிதன் தன்னை கைவிட்டு விடுவானோ என்று எண்ணும் அச்சம் மனத்துக்குள் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். இந்த அச்சத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. மனிதனிடம் அகமனம், புறமனம் என இரண்டு மனங்கள் இருக்கின்றன. புறமனத்தின் செயல்களையே இதுவரை கூறிவந்தோம். புற மனத்தின் சேட்டைகளைப் புரிந்து கொள்ளும் வரை, மனித வாழ்க்கையில் இன்பம் என்பது நிலையில்லாமல் இருந்து கொண்டிருக்கும். 

புற மனத்தை அடக்க நினைக்கும்போது, அதுவிசுவரூபம் எடுக்கும். தன்னை அடக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கும், ஒடுக்கும். அதையும் மீறி அடக்க முயன்றால், ஒடுங்கும். 

புறமனம் ஒடுங்கும் வரை அக மனம் வெளியே வராது. 

புறமனத்தின் செயல்கள் எதுவும் அகமனத்தின் பதிவுகளில் இருக்காது.

அகமனம், ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. உயர்ந்த எண்ணமும், நன்மையும் மட்டுமே செய்யவேண்டும் என்று நினைக்கத்தூண்டக்கூடியது. 

அகமனம் விழித்துக் கொண்ட பின்பு, புற மனத்தின் செயல்கள் எல்லாம் மறைந்துவிடும். அகமனத்தை எழுப்பிவிட்டவர்கள் சான்றோர் வரிசையில் உயர்ந்த புகழைப் பெற்றவர்களாக இருப்பார்கள். 

எவர் ஒருவர் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர், அக மனத்தை எழுப்ப முயற்சி செய்ய வேண்டும்.

புற மனத்தின் ஆட்டம் அடங்கும் வரை அகமனத்தை எழுப்ப எடுக்கும் முயற்சியைத் தளர்த்தக் கூடாது. 

அக மனத்தின் விழிப்புக்கு ஒரே வழி, சூழ்நிலை தியானந்தான். 

சூழ்நிலை தியானத்தை நாள்தோறும் செய்யச்செய்ய புறமனத்தின் வீறு குறைந்து கொண்டே வரும். இறுதியில் புறமனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

புறமனம் மறையத் தொடங்கியவுடன், அகமனம் விழித்தெழும்.

அகமன விழிப்புக்குப்பின், ஆனந்தம் நிலைபெறும். மனிதன் தன் தேவைகளை, ஆசைகளை விருப்பங்களை அதனிடம் கூறினால், அது அவற்றை நிறைவேற்றவைக்கும். மனிதனின் தேவைக்கு சேவை செய்யும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Great sages are internally pure in their thoughts, conscience, behavior etc. They gave importance to internal purity as much as they gave importance to external purity. However, some sages saw only the external purity and took bath every day to cleanse them. And they did meditation as a ritual only. This external purity and and ritualistic meditation didn't yield results because internally they did cleanse their thoughts and get better. Hence, one has to remove Kaamam/Desires, Veguli/Anger, Mayakkam/Distractions in their mind/thoughts/heart. Only by removing darkness in the heart, one can shine and emit light.

Questions that I ask to the kid
Many people who took bath and were clean were not successful. Why?

No comments:

Post a Comment