குறள் 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
பொருள்
இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்
இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி
இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
இல் - இல்லை
பருவத்தும் - பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.
ஒப்புரவிற்கு - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.
ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.
ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்
கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.
அறி - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்
காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.
அவர்க்கு - அவருக்கு
முழுப்பொருள்
பிறருக்கு தானம் கொடுக்க முடியாத வறுமையான காலத்திலும் ஒப்புரவு (பிறருக்கு உதவி) செய்ய மனம் தளரமாட்டார்கள் உண்மையான ஒப்புரவாளார்கள். அவர்கள் வாழ்வின் முறையான கடன்களை அறிந்தவர்கள். ஆதலால் வறுமையிலும் பிறருக்கு உதவி செய்வது தனது கடமை என்று உணர்ந்தவர்கள். தன்னால் இயன்றதை கண்டிப்பாக உதவுவார்கள்.
செல்வம் இருக்கும் பொழுது உதவுவது நல்ல காரியம் தான். ஆயினும் கொடுத்து உதவ இல்லாத பொழுதும் உதவு முற்பட்டு உதவுவது மேலும் சிறப்பு. அப்பொழுது தான் ஒருவருடைய உண்மை பெருமை நமக்கு தெரியவருகிறது. ஒருவரின் கொடுத்து உதவும் இயல்பு தெரிகிறது.
“பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்”, என்பார் பரிமேலழகர். அவர் “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்ற வழக்குக்கு முற்பட்டவராய் இருந்திருக்க வேண்டும்.
இத்தகு பண்பினரைப் பற்றிய நாலடியார் பாடல்கள்:
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 91)
பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு, பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் பண்பினருக்கு வானோரில்லத்து கதவு அடைபடாது, திறந்தே இருக்கும்.
எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும். (நாலடியார் 150)
நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர்.
“உறைப்பருங் காலத்து மூற்றுநீர்க் கேணி
இறைத்துணினு மூராற்று மென்பர் - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியோர்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணு மரிது” (நாலடி184)
“உறுபுன றந்துல கூட்டி யறுமிடத்தும்
கல்லூற் றழியூறு மாறேபோற் செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)
இதேபோன்று பழமொழிப் பாடல்களும் இத்தகுப் பண்பினரைப் பற்றி இவ்வாறு கூறுகின்றன: “ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைபிறந்த சான்றவன்” (பழமொழி 217). “கூஉய்க் கொடுப்பதொன்று இல்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார்” (பழமொழி 162)
”செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு மெய்யினால்
அல்லல் நல்குர வான போதிலும் வல்லர்” (பெரிய.இளையான்குடி 6)
“வெள்ளநெடு வாரியற வீசியுள வேனும்
கிள்ள வெழு கின்ற புனல் கேளிரின் விரும்பித்
தெள்ளுபுன லாறுசிறி தேயுதவு கின்ற
உள்ளது மறாதுதவும் வள்ளலையு மொத்த” (கம்ப.வரைக் காட்சி 23)
“தாமுத லோடுங் கெட்டா லொழிவரோ வண்மை தக்கோர்” (கம்ப.சேதுபந்தனப் 18)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.).
மணக்குடவர் உரை
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது
மு.வரதராசனார் உரை
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment