குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
பொருள்
சிறுமையுள் - சிறுமை - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.
நீங்கிய - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.
இன்சொல் - இனிமையான சொல்
மறுமையும் - மறுபிறவி; மறுவுலகம்.
இம்மையும் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
தரும் - கொடுக்கும்
முழுப்பொருள்
இழிவான பிறருக்கு துன்பம் தரக்கூடிய சொற்கள் சிறுமை வாய்ந்த சொற்கள். அத்தகைய சிறுமையான சொற்களை நேரடியாகவோ அல்லது சொற்களின் உள் அல்லது சொற்களை கூறும் முறையில் பொதிந்தோ வைக்காமல் சொற்களில் கூட சிறுமையை நீக்கி இனிய சொற்களை ஒருவர் பேசினால் அது அவருக்கு மறுபிறவியிலும் இப்பிறவியிலும் இன்பத்தை தரும்.
துன்பத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். இப்பிறவியில் துன்பத்தை அனுபவிப்பவர் மறுபிறவியிலாவது இன்பமான வாழ்க்கை அமையட்டும் என்று விரும்புவது இயல்பு. இப்பிறவியில் இன்பத்தை அனுபவிப்பவர் மறுபிறவியில் துன்பத்தை அனுபவிக்க தயாராக இருக்க மாட்டார் இன்பமே வேண்டும் என்பார். அதுவும் இயல்பு. ஆதலால் இன்பமே எல்லோருக்கும் வேண்டும். மேலும் மறுபிறவியில் முழுபிறவிக்கான காலம் இருக்கிறது. இப்பிறவியில் ஒரு குறிப்பிட்ட அளவு காலம் முடிந்துவிட்டது. இன்னும் சொச்சம்(மிச்சம்) காலம் தான் இருக்கிறது. இப்பிறவியில் நமது சுற்றம் சூழல் ஆகியவற்றை மாற்றுவது கடினம். இப்பிறவியில் பயனாக மறுபிறவி அமையும் என்றால் இப்பிறவியில் ஒழுங்காக இருக்க மக்கள் நினைப்பர். அதனால் தான் மறுமையை வரிசையில் முன்னே வைத்தார் திருவள்ளுவர் என்று நினைக்கிறேன்.
இம்மையில் அதாவது இப்பிறவியில் எப்படி இன்பம் ? இனியசொற்களை பேசினால் நம்மிடம் உறவாட மக்கள் தயங்கமாட்டார்கள் மாறாக விரும்புவார்கள். உறவுகளே செல்வம். நல்ல உறவுகள் இன்பம் பயக்கும். மேலும் கடுஞ்சொற்களை பேசினால் ஏன் நாம் அப்படி பேசினோம் என்று நாமே பின்பு வருந்தக்கூடும் (தன் நெஞ்சே தன்னைச்சுடும்). ஆதலால் குற்ற உணர்ச்சியால் துன்பத்தை அனுபவிப்போம். இனிய சொற்களை மட்டும் பேசினால் கவலையில்லாமல் இருக்கலாம். துன்பம் இல்லாத நிலையே ஷக்தி. அதுவே இன்பம் பயக்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.).
மணக்குடவர் உரை
புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.
மு.வரதராசனார் உரை
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உறுத்தாமல் பேசு. இறந்த பின்பும் வாழ்வாய்.
உறுத்தாமல் பேசு. இறந்த பின்பும் வாழ்வாய்.
No comments:
Post a Comment