குறள் 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி]
பொருள்
துனியும் - துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம் (ஊடல்மிகுதி); பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.
புலவியும் - புலவி - ஊடல்; வெறுப்பு.
இல்லாயின் - இல்லையானால்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
கனியும் - கனி - பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம்.
கருக்காயும் - கருக்காய் - பிஞ்சு; பதர்நெல்; எள்ளுகொள்ளுமுதலியவற்றின்மாறு.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
முழுப்பொருள்
மிகுதியான ஊடலான துனியும், செல்லமான சிறிய ஊடலான புலவியும் காதலில் இல்லாமல் போனால் காமத்தில் (புணர்தலில் /கூடற்கின்பம்) அளவுக்கு மிகுதியாய் பழுத்து புளிக்கும் கனியை போன்றும் துவர்கும் பிஞ்சை (இளங்காய்) போன்றும் பயனற்றதாக இனிய/நற் சுவையற்றதாக ஆகிவிடும்.
ஒப்புமை
”இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்” (பரி 20.96)
“திருவே யனையாள் முகமே தெரியின்
கருவே கனியே விளைகா மவிதைக்
கெருவே” (கம்ப.கடிமணப் 14)
”முயங்காக்கால் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப
புல்லாப் புலப்ப தோர் ஆறு” (நாலடி:391)
எனக்கு ஒரு குறுந்தொகை பாடல் நினைவுக்கு வருகிறது. அதில் பெரும் பழம் பயனற்று போகும் என்று கூறப்பட்டு உள்ளது ஏனெனில் பழத்தின் கணம் அதிகமாகி கீழே விழுந்து சிதறிவிடும்.
18. குறிஞ்சி - தோழி கூற்று
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
-கபிலர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.).
மணக்குடவர் உரை
உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
சாலமன் பாப்பையா உரை
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
No comments:
Post a Comment