குறள் 1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]
பொருள்
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.
தொடியொடு - கைவளையல்களுடன்
தோள் - புயம்; கை; தொளை.
நெகிழ - நெகிழ்தல் - குழைதல்; மெலிதல்; பொசிதல்; பொடியாதல்; மலர்தல்; இளகல்; கட்டுத்தளர்தல்; மனமிரங்குதல்; நிலைகுலைதல்; நழுவல்; விட்டுநீங்குதல்.
நோவல் - நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.
அவரை - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
கொடிது - கொடியது. தீங்கு விளைவிப்பது.
கொடியர் - கொடுமை விளைவிப்பவர். கொடுமையானவர்
எனக் - என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.
கூறல் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.
நொந்து - நொந்துதல் - அழிதல்; தூண்டுதல்.
முழுப்பொருள்
பிரிந்து சென்றுள்ளான் தலைவன். அப்பொழுது பிரிவு தந்த காமநோயால் தலைவியின் தோள்கள் மெலிந்து அவள் பூண்டிருந்த தோள்வளையல்கள் கழன்று கீழே விழுந்துவிட்டன. வளையகள் அல்லாத மெலிந்த பொலிவற்ற தோள்களை காணும் உறவினர்களும் ஊராரும் இவளுக்கு இந்த அவநிலையை கொடுத்த தலைவனை கொடியவன் என்று பழிக்கின்றனர்.
தலைவன் தலைவியை பிரிந்துள்ள பொழுது தலைவிக்கு தலைவன் மேல் ஆயிரம் கோபங்களும் வருத்தங்களும் இருந்தாலும் பிறர் தலைவனை பழிப்பதை அவள் விரும்பவில்லை. அவள் காதல் அதை ஏற்கவில்லை. ஆனால் இத்தகைய இந்த வருத்தமும் அவளுக்கு மேலும் மனசுமையை தரும். நொந்துவிடுவாள். ஆதலால் மேலும் மெலிவாள்.
இது பிரிவுக்கு என்றில்லை, பொதுவாகவே தலைவன் தலைவி வருந்ததக்க வண்ணம் எது செய்தாலும் (உதாரணமாக கடன் அதிகம் வாங்குவது, உடலை பார்த்துக்கொள்ளாது உடலை கெடுத்துக்கொள்வது, வரவுக்கு மீறி செலவு செய்வது, கெட்ட / தீய பழக்கங்களும் கூடா நட்பு கொள்வது, விலைமகள் சகவாசம் கொள்வது, சூதாடுவது, குழந்தைகளை பேணி வளர்க்காதது என்று பல) அது அவள் உடலை பாதிக்கும். அவள் மெலிந்துவிடுவாள். ஆதலால் தலைவன் தலைவி வருந்தாத வண்ணம் நடந்துக்கொள்வது அவனுடைய அறம் / கடமை/ தருமம் ஆகும்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
1.” நெடுமென் பனைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந்து” (குறுந்.185:2)
2. “தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே” (குறுந் 239:1)
3. ஒந்தொடி நெகிழச் சாஅய்
மென்தொள் பசப்பது எவன்கொல் அன்னாய்” (ஐங்குறு 28:3-4)
4. திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்” (அகநா 387:1)
பரிமேலழகர் உரை
(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.).
மணக்குடவர் உரை
வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது
மு.வரதராசனார் உரை
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
சாலமன் பாப்பையா உரை
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
No comments:
Post a Comment