குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]
பொருள்
காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை
அரும்பி - அரும்புதல் - சிறிதாகத்தோன்றுதல்; முகிழ்த்தல்
அரும்பித்தல் - தோன்றுதல்.
பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.
எல்லாம் - முழுதும்
போது - மலரும்பருவத்துஅரும்பு:மலர்; செவ்வி; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; பொழுது.
ஆகி - ஆகுதல் - ஆதல்.
ஆகி - ஆக்கம்
மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.
மலரும் - மலர்தல் - பூவின்மொட்டவிழ்தல்; பரத்தல்; மனமகிழ்தல்; தோன்றல்; எதிர்தல்; அகலுதல்; மிகுதல்.
இந் - இந்த - அண்மைப்பொருளைச்சுட்டுஞ்சொல்.
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று இருக்கிறான். அந்நாட்களில் இரவில் தலைவியின் கனவில் வந்து கூடுகிறான் தலைவன். ஆனால் காலையில் நனவு வந்து கனவை கலைப்பதனால் தலைவனும் பிரிந்து சென்றுவிடுகிறான்.
ஆதலால் தலைவன் பிரிந்த உடன் காலையில் பிரிவின் நோய் அரும்பாக தோன்றுகிறது. பகல் பொழுது வளர்வது போன்று இந்த காதல் நோயும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. முதிர்கிறது. மென்மையான மாலை பொழுதைப்போல மென்மையான மலர்களை போல இந்த நோயும் மலர்கிறது. ஆனால் இந்த பிரிவின் நோய் மாலையில் எனக்கு துன்பத்தை தருகிறது. வேதனையை கூட்டுகிறது. அதை ரசிக்க முடியவில்லை. பகல் முழுக்க நெடுங்நேரம் வளர்ந்து முதிர்ந்த இந்த இந்நோய் மாலை போன்ற குறுகிய காலத்தில் மொத்தமாய் காண்பிக்கிறதோ ?
எனக்கு ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது. ஆனால் கதாநாயகன் பாடுவது போன்று தான். சேது திரைப்படத்தில், அறிவுமதி வரிகளில், இளையராஜா இசையில், உன்னி கிருஷ்ணன் குரலில் வந்த "மாலை என் வேதனை கூட்டுதடி" பாடலின் பல்லவி வரிகள் கீழே
"மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே"
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.).
மணக்குடவர் உரை
இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.
மு.வரதராசனார் உரை
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா உரை
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
No comments:
Post a Comment