குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]
பொருள்
பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்.
என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.
ஆயின் - ஆனால்; ஆராயின்.
கனவினால் - கனவில்
கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.
காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.
நீங்கு - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.
அலர் - அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி.
நீங்கலர் - நீங்க மாட்டார்; பிரிந்து சென்ற பழிக்கு ஆளாக மாட்டார்
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள், என் தலைவன் என்னை பிரிந்து சென்றுவிட்டான். அவன் எப்பொழுது மறுபடியும் வருவான் என்று தெரியவில்லை. பிரிவின் துன்பத்தால் வாடுகிறேன். நான் உயிர் வாழ்வதே அவன் நினைவுகளால் தான். அவன் என் கனவுகளில் வந்து என்னுடன் இருந்தான். அதனால் அக்கனவுகளில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இந்த நனவு நிலை வந்து (அதாவது விழிப்பு வந்து) என் மகிழ்ச்சியை கெடுத்துவிட்டது. நனவு வந்து கனவு கலைந்ததால் கனவில் இருந்த தலைவனும் பிரிந்து விட்டான். இல்லையேல் என் தலைவன் கனவில் என்னை பிரிந்து சென்று இருக்க மாட்டான்.
என்னுடன் இருப்பதையே எப்பொழுதும் விரும்புவார். நானும் அதையே தான் விரும்புவேன். ஆனால் உலகியல் உலகில் என்னைவிட்டு பிரிந்து செல்ல நேரிடுவது தவிர்க்க இயலாது. கனவு நிலையில் எப்பொழுதும் இருப்பார். அவர் திரும்பி வரும் வரை கனவிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் பாழாய்ப்போன நனவு வந்து எல்லாவற்றையும் கெடுகிறதே. என் நேரம் அப்படி.
நேரிலும் அவர் என்னுடன் இருக்க வாய்க்கவில்லை. கனவில் அவர் என்னுடன் இருக்க வாய்க்கவில்லை. துன்பம் தாங்கவில்லையே. என் செய்வேன் நான்?
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.).
மணக்குடவர் உரை
நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
மு.வரதராசனார் உரை
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
No comments:
Post a Comment