பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
thirukkural meaning விளக்கம் குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான் காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி
குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]
பொருள்
பருவரலும் - பருவரல் - துன்பம்; பொழுது.
பருவருதல் - வருந்துதல்; துன்புறுத்தல்; அருவருத்தல்.
பைதலும் - பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம்
பைதல் - paital v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணான் - காணாதவன் , அறியாதவன்
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
காமன் - மன்மதன்; பௌத்தமதத்திற்கூறப்படும்தீமைவிளைக்குந்தெய்வம்; ஒருவகைவரிக்கூத்து; இந்திரன்; வண்டு; திப்பிலி.
ஒருவர் - ஓராள்; ஒருவன்; அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல்.
நில்-தல் - [நிற்றல்] 3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; tobe left, as matter in a boil, as disease in thesystem; to be due, as a debt; எஞ்சுதல் நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை 3). 8.To wait, delay; தாமதித்தல் தெய்வம் நின்றுகேட்கும். -
ஒழுகுவான் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் இருவருக்கும் காதலை தந்த இந்த காமனுக்கு தெரியுமா நான் மட்டும் மனவருத்தத்திலும் மேனியில் படர்ந்த பசலை நோயினாலும் வாடுகிறேன் என்று ? ஆதலால் இவன் இருவருக்கும் காதலை தந்தானா? இல்லை எனக்கும் மட்டும் தான் காதலை தந்தானா? பிரிந்து சென்ற தலைவனிடம் சண்டையிடமால் பழியை காமன் மீது போடுகிறாள் தலைவி.
ஏனெனில் தலைவன் அருகில் இல்லை. ஒருவேளை கண்ணுக்கு தெரியாத காமன், அருகில் இருந்து இதை கேட்டு, அது தன் தவறு என்று உணர்ந்து, தலைவனுக்கு பிரிவின் துன்பத்தை கொடுத்து, அதன் மூலம் தலைவனுக்கு நான் படும் வேதனையை உணர்த்தி, தலைவனை என்னிடம் சேர்த்துவைப்பானோ என்று நப்பாசையில் இப்படியெல்லாம் சொல்கிறாளோ தலைவி என்று நினைக்க தோன்றுகிறது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
மு.வரதராசனார் உரை
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?.
சாலமன் பாப்பையா உரை
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?.
Join the conversation