Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சமன் - ஏற்றத்தாழ்வின்மை; இசைநூலில்வரும்தானநிலைமூன்றனுள்ஒன்று; ஆண்மை; யமன்; நீதிமன்றஅதிகாரியின்அழைப்புக்கட்டளை.

செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு

தூக்கும் -  தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல்.

சீர்தூக்கும் - சீர்தூக்குதல் -ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; வரையறுத்தல்

கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கோல்போல் - துலாக்கோலை, தராசினைப் போல

அமைந்து - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

ஒருபால் - ஒரு பக்க சார்பாக

கோடாமை - நடுவுநிலைமை; நீதி; மத்தியநிலைமை; நியாயம்; சைவத்திற்குயோகபூசைவகை

சான்றோர்க்கு  சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

முழுப்பொருள்
துலாக்கோல் 

ஒரு பொருளை எடை இடுவதற்கு முன்பு தராசு கோலின் (துலாக்கோல்) இருபுறமும் சமன் செய்துவிடுவார்கள். ஏனெனில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்பதற்காக. பிறகு எடைக்கல்லை ஒருபக்கமும் இன்னொரு பக்கம் பொருளையும் வைத்து எந்த பக்கம் உள்ள பொருள் அதிக எடை உள்ளது என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் முடிவு எடுப்பார்கள். 

ஒரு இடத்தில நீதி சொல்லும் ஒருவர் (நீதிமான்கள்) அந்தத் தராசு கோல் போல தன் மனதை சமன் செய்து பின்பு இரு பக்கத்தில் இருந்து கூறுவோரின் சாட்சியங்களை ஆராய்ந்து தக்க கேள்விகளை கேட்டறிந்து உண்மையின் அடிப்படையில் எந்த பக்கமும் வளையாமல் (சார்பு இல்லாமல்) விருப்பு வெறுப்பு இன்றி நடுவுநிலைமையுடன் தீர்ப்பு அளித்தல் வேண்டும். அதுவே சான்றோர்க்கு அணிகலன்(அழகு) ஆகும். மேலும், தான் வகுத்துக்கொண்ட நடுவுநிலையில் பிறழாமை என்பது தனக்கு நலம் பயக்கும் செயல்களைத் துச்சமாக மதிப்பதிலிருந்து தொடங்குகிறது. 

சமன் செய்தல் என்பது முன் முடிவுகள் கூடாது என்பதையும் உள்ளடங்கும். குறிப்பாக ஒருவரின் குணங்களை கொண்டும் இயல்புகளை கொண்டும் எடுக்கப்படும் முடிவுகள். உதாரணமாக ஒருவர் உரக்க பேசுகிறார் என்பதனால் அவர் கடுமையானவர் என்றோ அல்லது மென்மையாக பேசுவதால் அவர் நல்லவர் என்றோ ஆகிவிடாது. ஒருவர் ஊருக்கு நல்லது செய்யும் வள்ளல் என்பதால் அவர் தவறு செய்து இருக்கமாட்டார் என்பது இல்லை. 

மேலும் இது நீதி சொல்வதற்கு/அளிப்பதற்கு என்றில்லை. ஒருவரை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதற்கும் பொருந்தும். கீழே மஹாபாரத ஒப்பீட்டில் விளக்கப்பட்டு உள்ளது. 

துலாக்கோலை சங்க இலக்கியம் நேர்க்கோல், தெரிகோல் என்று சொல்லும். இதே கருத்தைக்கூறும் பாடல்கள் இவை. “ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்?” என்கிறது கலித்தொகை (42:145). “விரிசீர்த் தெரிகோல் ஞமன் போல ஒரு திறம் பற்றல் இலியரோ” என்கிறது புறநானூறு (6:9.10). “ஞமன்” என்ற சொல் துலாக்கோலுக்கான பழந்தமிழ்ச் சொல். இதை மதுரைக்காஞ்சியிலும் காணலாம், “செற்றமு முவகையும் செய்யாது காத்து ஞெமன் கோலன்ன செம்மைத்தாகி” என்ற வரியினில்.  முனைப்பாடியார் என்பார் பாடிய அறநெறிச்சாரத்தில் நடுவுநிலைமைப் பற்றிய பாடல் இது.
“காய்த லுவத்த லின்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையார்க் கண்ணதே – காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”

ஒப்புமை
”சீலம் அல்லன் நீக்கிச்செம் பொற்றுலைத் 
தாலம் அன்ன தனிநிலை தாங்கிய 
ஞால மன்னற்கு” (கம்ப. மந்தரை சூழ்ச்சிப் 19)

“செற்றமு முவகையுஞ் செய்யாது காத்து
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகி” (மதுரைக் 490-91)

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115)

ஓர்வுற் றொருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி நெஞ்சத் தவன் (கலித் 42:14-5)

தெரிகோல் -ஞமன் போல ஒருதிறம்
பற்றல் இல்யரோ (புறநா 6:9-10)

“காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ந்தே - காய்வதன்கண்
உற்ற குணம்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றா கெடும்” (அறநெறி 22)

மஹாபாரதம் ஒப்பீடு
கர்ணன் தேரோட்டியின் மைந்தன் தான் யுதிஷ்ட்ரணனும் பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் பாண்டுவின் மைந்தர்கள் தான். ஆனால் அன்று இவ்வுலகம் மனதை சமன் செய்யாமல் கர்ணனை இழிவு செய்தது. காரணம் தேரோட்டியின் மைந்தன்.

அதேப்போல் பின்பு கர்ணன் தேரோட்டியின் மகன் அல்ல என்றபோதும் (கர்ணன் வெய்யோன் மகன் என்று உணராத நாட்களிலும்) பாண்டவர்கள் பாண்டுவின் மைந்தர்கள் தான். ஆனால் அன்றும் இவ்வுலகம் மனதை சமன் செய்யாமல் கர்ணனை இழிவு செய்தது. காரணம் தந்தையின் பெயர் அறியாதவன். 

இவ்வுலகம் மனம் என்னும் துலாக்கோலில் சமன் செய்துக்கொள்ளாமல் அப்பேரறத்தானை இழிவு செய்தது. கர்ணன் செய்த தவறுகளை மிகைப்படுத்தியது. அதுவே அர்ஜுனன் செய்த தவறுகளை சிறிது படுத்தியது. கர்ணன் மனம் எவ்வளவு புண்பட்டு இருக்கும். அதுவும் கர்ணன் செய்யாத தவறுக்காக அவன் சந்தித்த அவமானங்கள் ஏராளம். 






மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை(கடை) விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.).

மணக்குடவர் உரை
சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது. இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நடுவு நிலைமை என்றொரு சொற்றொடர் நம் காலத்தில் பிரபலம். ஒன்றைப் பற்றிய வழக்கில் இருதரப்பையும் கூர்ந்து கவனித்துத் தம் தரப்பை அறிவிக்கும் நிலைப்பாடு. நடுவு நிலைமை பிறழாதவர்களுக்கு இந்தச் சமூகம் தருகின்ற மதிப்பு நிரந்தரமானது. நடுவு நிலைமைக்குப் பயின்றவர்கள், அதன் வழியே பயணிப்பவர்கள் ‘என்ன சொல்கிறார்கள்’ என்று உலகம் உற்றுக் கவனிக்கிறது. 

ஜனநாயகத்தில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நடுவுநிலைமை தவறாத தூண்கள் என்று கருதப்பட்டன. ஆனால், நிகழ்வுப் போக்குகள் நடுவு நிலையினரையே குலைக்கும் வண்ணம் சென்றுகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடுவாந்திர வர்க்கம் எதன்மீதும் நம்பிக்கையற்று நிற்கிறது. 

அந்தக் காலங்களில் சகோதரர்களுக்கிடையே பாகப் பிரிவினைகள் நடக்கும். நிலபுலன்களையும் கால்நடைகளையும் குச்சு வீடுகளையும் கொட்டாய்களையும் மர இனங்களையும் சரிசமமாகப் பிரித்துத் தர நியாயவான்களை நாடுவார்கள். அவர்கள் முடிவு கேள்விக்கு அப்பாற்பட்டதாக அதிகாலைப் பனித்துளியின் தூய்மையோடு இருக்கும்.

ஆறு தென்னைகள் அண்ணன் பங்குக்கெனில் பன்னிரண்டு பனைகள் தம்பிக்குப் போகும். ஏரும் எருதுகளும் தம்பிக்கு எனில் அண்ணன் வேண்டும்போது உழவுக்கு அவற்றை அனுப்பித் தரவேண்டியது. புஞ்சைப் புளிகளை உலுக்கினால் ஒரு மூட்டை தந்தனுப்ப வேண்டியது. இருவர் வாழ்க்கைக்கும் பாசத்திற்கும் பழுதில்லாத பாகப் பிரிவினையாக அது இருக்கும். அந்த நடுவு நிலைமை அருகிவிட்டதால் உரிமையியல் நீதிமன்றங்கள் தூசுக்கட்டுகளால் நிறைந்துவிட்டன. 

இணையத்தில் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படும்முன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று கட்டுவது வழக்காக இருந்தது. மின் கட்டணம் கட்டுவதற்கு நம்மனம் கடைசி நாளில்தானே தயாராகும் ? அந்நாளில் மின்கட்டணப் பெறுகூண்டு அருகே ஊரே வரிசையாக நின்றுகொண்டிருக்கும். 

எங்கள் பகுதியிலுள்ள மின்வாரிய அலுலகத்தில் ஒரே ஒரு கூண்டுதான். ஆண்கள் ஒரு வரிசையாகவும் பெண்கள் ஒரு வரிசையாகவும் நிற்போம். ஆண் ஒருவர், பெண் ஒருவர் என்று மாறி மாறிச் செலுத்துவோம். பெண்ணொருவர் செலுத்தி முடிந்ததும் அட்டையையும் பணத்தையும் அடுத்த ஆளாகக் கூண்டுக்குள் செலுத்த வேண்டிய பெரியவர், தம் மஞ்சள் பைக்குள் கைவிட்டுத் துழாவியபடி தடுமாறிக்கொண்டிருந்தார்.

பெண் வரிசையில் பாந்தமான பாட்டியம்மா ஒருவர் அடுத்துச் செலுத்த நின்றுகொண்டிருந்தார். பெரியவர் தடவிக்கொண்டிருந்ததைப் பார்த்த மின் கட்டணப் பெறுநர் தமக்கு வந்த அலைபேசி அழைப்பில் ஆழ்ந்துவிட்டார். பெண்டிர் வரிசையில் நின்ற பெண்ணொருவர் முன்னின்ற பாட்டியிடம் ‘அவர் எடுப்பதற்குள் நீங்கள் முந்திச் செலுத்துங்கள். கொடுங்கள்’ என்று பாட்டியை வற்புறுத்தினார். 

பாட்டியார் அப்படிச் செய்வார் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், மறுத்துவிட்டார். ‘நாம் மாண்டேன். அய்யன் எடுக்கறதுக்குள்ளாற என்னெயே நீட்டச் சொல்றியே... என்ன நாயம்னு வேண்டா ? செத்த நின்னா என்ன...’ என்று கூற எல்லாருக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதன்பின் பெரியவர் செலுத்திய பின்பே அந்தப் பெரியம்மா செலுத்தினார். 

தான் வகுத்துக்கொண்ட நடுவுநிலையில் பிறழாமை என்பது தனக்கு நலம் பயக்கும் செயல்களைத் துச்சமாக மதிப்பதிலிருந்து தொடங்குகிறது. 

தராசுக்கோல் பார்த்திருக்கிறோம். அது பொருள்களின் எடையை நிறுத்துப் பார்க்கையில் துல்லியமாக அளவு காட்டுகிறது. அந்தத் துலாக்கோலின் முதல் தகுதி என்ன ? பொருள் எதுவும் இல்லாத நிலையிலும் அது தன் இரு தட்டுகளையும் ஒன்றாகக் கருதும். எப்பக்கமும் சாயாமல் சமன் பேணும். அந்தத் தகுதியால்தான் அதன் நடுவு நிலையை நம்பிப் பொருள்களின் எடை காண்கிறோம். அது எடை காட்டுகிறது. அதில் எந்தத் தவறும் இருப்பதில்லை. 
 நடுவு நிலைமை பேணுகின்றவர்கள் அத்தகையவர்கள். அவர்கள் தம்மளவில் நிலை பிறழாத விழுமியங்களைக் காக்கின்றவர்கள். தனக்கொன்று என்றாலும் தடுமாறாதவர்கள். அந்தச் சமநிலையிலிருந்தே பிற எவ்வொன்றையும் சீர்தூக்கி ஆராய்ந்து தெற்றெனச் சொல்கின்றவர்கள். அவர்கள் சான்றோர்கள். அவர்களுக்கு அழகும் அதுவே.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கணி.
தன்னை இருதரப்புக்கும் சமனாகச் செய்துகொண்டு எடை காட்டும் துலாக்கோல்போல் எவ்வொரு தரப்பையும் சாராதிருப்பதுதான் பெரியவர்களின் அழகு.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒருபாடல்...

பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால், அப்பருக்கு
நல்ல படிக்காசு நல்குமால், --- எல்லாம்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

பிள்ளை --- திருஞானசம்பந்தப் பெருமான்.

அவம்பெருக்கும் புல்அறிவின்
         அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
         பாழ்படநல் ஊழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
         தாஇல்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
         திருஅவதா ரஞ்செய்தார்.

யாவருக்குந் தந்தைதாய்
         எனும் இவர் இப்படி அளித்தார்,
ஆவதனால் ஆளுடைய
         பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவருக்கும்
         தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
         சம்பந்தர் ஆயினார்.

எனவரும் பெரியபுராணப் பாடல்களின்படி, திருஞானசம்பந்தப் பெருமானை, "பிள்ளையார்" என்றும் "ஆளுடைய பிள்ளையார்" என்றும் வழங்குவது சைவமரபு.

கைத்தொண்டு ---  கையினால் செய்யும் உழவாரப்பணி. அப்பர் பெருமான் உழவாரப் படை கொண்டு திருத்தொண்டு புரிந்தார்.

திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு பெருமானும் திருவீழிமிழலையில் இருந்தபொழுது, பஞ்சகாலம் வர, இருபெருமக்களும் சிவபிரானிடம் பொற்காசு பெற்று அடியார்களை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார்கள்.  அப்போது, சிலநாள் திருஞானசம்பந்தப் பெருமானார் மாற்றுக் குறைந்த காசு பெற்று வந்தார். அதனால் அதனை மாற்றி உணவுப் பொருள்களை வாங்குவதில் நேரம் வீணாயிற்று.  அதற்குள் அடியவர்கள் அப்பர் பெருமானாரின் திருமடத்திலேயே உணவு அருந்திச் சென்றனர். "வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தப் பெருமானார் வாசியில்லாக் காசு பெற்றார்.  திருஞானசம்பந்தப் பெருமானைத் தம் புதல்வர் என்று எண்ணி, சிவபெருமான் நடுவுநிலை பிறழாமை இங்கே கருதத் தக்கது.

அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வேதியன் ஆள்ஆமோஎன்று எள்ளாது வெண்ணெய்நல்லூர்ச்
சோதி வழக்கே புகழ்ந்தார், சோமேசா! --- ஓதில்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

நடுவு நிலைமையாவது பகை அயல் நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை.

இதன் பதவுரை ---

சோமேசா!

ஓதில் --- சொல்லுமிடத்து,  சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் --- முன்னே தான் சமனாக நின்று, பின்பு தன்னிடத்து வைத்த பாரத்தைத் தெளிவாக வரையறை செய்யும் துலாக்கோல் போல, அமைந்து --- நல்லிலக்கணங்களால் அமையப் பெற்று, ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி --- ஒருபக்கத்துச் சாயாமை கல்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்த பெரியோர்கட்கு அழகாகும், 

வேதியன் ஆள் அமோ என்று எள்ளாது --- அந்தணன் (பிறருக்கு) அடிமை ஆவானோ என்று இகழ்ந்து கூறாது, வெண்ணெய் நல்லூர்ச் சோதி --- திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானது, வழக்கே புகழ்ந்தார் --- வழக்கினையே திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அவையத்து அந்தணர் புகழ்ந்து பேசினர் ஆகலான் என்றவாறு.

உவமை அடையாகிய சமன் செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருள் அடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும்,  ஒருபால் கோடாமையாவது அவ் உள்ளவாற்றை மறையாது பகை அயல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க.  இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.

திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில், ஆதிசைவ மரபில் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் திருக்குமாரராய் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார், நரசிங்கமுனையர் என்னும் அரசற்குக் காதல் பிள்ளையாய் அந்தணர் ஒழுக்கமும் அரசர் திருவும் பொருந்தி யௌவனப் பருவம் அடைந்தார். அது நோக்கிப் பெற்றோரும் மற்றோரும் புத்தூர்ச் சடங்கவி என்னும் ஆதிசைவர் மகளை மணம் பேசி முடித்து, மூகூர்த்த நாளில் நாயனாரைக் குதிரை மீது ஏற்றி மிக்க ஆடம்பரத்துடன் புத்தூர் அழைத்துச் சென்றார்கள். நாயனார் சடங்கவி மனை புகுந்து மணப்பந்தரின் எழுந்தருளினவுடன் சிவபெருமான் திருக்கயிலையில் திருவாக்கு அளித்தபடி அவரைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டி ஒரு கிழவேதியராகத் திருவுருக்கொண்டு வந்து மணப்பந்தர் புகுந்து, "ஒரு வழக்குண்டு; அதை முடித்தே மணம் புரிதல் வேண்டும்; மணச் சடங்குகளை நிறுத்துக" என்றார்.  நாயனார் யாது கூறுவாரோ என்று விநயமாய், "அப்படியே, தங்கள் வழக்கைத் தீர்த்தன்றி மணம் புரியேன்" என, கிழவேதியர் சபையோரை நோக்கி, "அந்தணீர்! இந்த மணமகன் எனக்கு வழியடிமை" என்றார். அது கேட்ட நாயனார் நகைக்கவே, கிழவர் வெகுண்டு "உன் பாட்டன் எழுதித் தந்த அடிமையோலை இது.  நகைத்தது என்?" என்றார். நாயனார் நகை ஒழிந்து, "ஐயரே! அந்தணர் அடிமையாதல் உண்டோ? நீர் பித்தரோ? அடிமை ஓலை உளதாயில் காட்டுக" என்றார், கிழவர், "நீ அடிமை, அதைக் காணுதற்கு நீ அருகன் அல்லன்" என்று கூறிச் சபையோர்களுக்கு அதைக் காட்டவே, நாயனார் வெகுண்டு சீறி அவ் ஓலையைப் பற்றிக் கிழித்து எறிந்தார். கிழவர் நாயனாருடைய கையை இறுகப் பற்றி விடாது இழுத்து, "இது தகுமோ? இது முறையோ? இது தருமந்தானோ?" என்று அந்தணர்களை நோக்கிக் கூச்சல் இடவே, அவ் அந்தணர், "நீர் எங்குளீர்" என வினவ, "யான் திருவெண்ணெய்நல்லூர் உளன்" என இறுக்க, "அங்ஙனமாயின் உமது வழக்கை அங்குச் சென்று தீர்த்துக் கொள்க" என்று யாவரும் உரைப்ப, கிழவர் அதற்கு இசைந்து நாயனாரைப் பற்றிக் கொண்டு திருவெண்ணெய் நல்லூர் சென்று அங்கு அந்தணர் அவையத்தார் முன்பு நாயனாரை விட்டுத் தமது வழக்கைத் தெரிவிக்க, அவ் அவையத்தார், அந்தணர் அடிமையாதல் இல்லை என அறிந்து வைத்தும் கிழவர் தம்மிடத்து உண்டு எனத் தந்த மூல ஓலையைக் கொண்டு நாயனார் பாட்டன் கையெழுத்தோடு ஒப்பு நோக்கிச் சிறிதும் வேறுபாடு இன்மை கண்டு "நீர் அவ் அந்தணருக்கு அடிமையே" என்று தீர்ப்பு அளித்தனர்.  இது திருத்தொண்டர் புராணத்து உள்ளது.

அடுத்து, குமார பாரதி என்பார் தாம் பாடிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், பெரியபுராணத்துள் வரும் அமர்நீதி நாயனாரின் வரலாற்றினை வைத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடிய பாடல் ஒன்று..

நிரம்புபொருள் சேயொடமர் நீதிமனை யாளோடு
அரன்கோ வணத்தட்டு அதன்நேர் - இருந்தார்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

இதன் பொருள் ---  

அடியார்களுடைய பெருமையை உலகத்துக்கு அறிவித்து ஆன்மாக்களை உய்விக்கும்படி திருவுளம் கொண்டு, திருநல்லூரிலே சிவனடியார்களுக்கு அமுதூட்டிக் கோவணம் முதலியவற்றைக் கொடுத்தலாகிய அருமையான சிவப்பணியை வழுவாமல் கடைப்பிடித்து வந்த அமர்நீதி நாயனார்பால், சிவபெருமான் அடியார்போல் வேடம்கொண்டு சென்று ஓர் கோவணத்தை வைத்திருக்கும்படி கொடுத்து, அதனை மறைத்து, அதற்கு ஈடாக அவருடைய நிறைந்த செல்வத்தையும் மக்களையும் மனைவியாரையும் வைத்தும் தட்டு நேர்படாமல் தாமே ஏறியிருக்கத் தட்டு நேர்பட்டவுடன் இறைவர் காட்சியளித்துத் திருவடியில் சேர்த்து அருளினார். 

முன்னே தாம் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல் போல இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கொடாமை சான்றோர்க்கு அழகாம் என்றவாறு.

அடுத்து, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடிய பாடல்....

நங்கைஉமை சொல்லால் நடுவுஇகந்த மால்வெருவு
செங்கண்அரவு ஆனான், சிவசிவா! - எங்கும்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க் குஅணி.      

பார்வதி பரமேசுரன் ஆடிய சூதாட்டத்தில் திருமால் நடுவு நிலைமை தவறினான். பார்வதி திருமாலைப் பாம்பாகுக எனச் சீறி அருளினாள். இவ்வாறு கந்தபுராணம் கூறும். நடுவு நிலைமை தவறியவர் இழிந்த பிறப்பெடுப்பர். சான்றோர்க்கு அழகு நடுவுநிலை மாறாமல் இருத்தலே ஆகும்.       

அடுத்து, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமாள் மீது, பெரியார் ஒருவரால் பாடப்பட்டுள்ள, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல் ஒன்று...

தேடாது புல்லையில் வந்தாய்என் சிந்தையில் சேர்ந்துவிளை
யாடாய், சமன்செய்து சீர்தூக்குங்கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி எனலான், நடுக் கூறி நின் தாள்
வாடா மலரின்கண் நீடூழி யான் புக்கு வாழ்வதற்கே.

இதன் பொருள் ---
முன்னே தான் சமனாக நின்று, பின் தன்னிடத்து வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல் போல இலக்கணங்களால் அமைந்து, ஒருபக்கத்துக் கொடாமை சான்றோர்க்கு அழகு என்று சொல்லப்பட்டு இருத்தலால், யாரும் வருந்தி அலையமல் படிக்கு, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில், ஆதி ஜெகந்நாதப் பெருமாளாக எழுந்தருளியவனே! உனது திருவடியாகிய வாடாமலரின்கண் நான் சேர்ந்து, நெடுங்காலம் என்னை வாழச் செய்ய, எனது சிந்தையில் எழுந்தருளி வந்து விளையாடுவாயாக.

தேடாது - வருந்தி அலையாமல். நின்றாள் வாடா மலரின்கண் - நினது திருவடியாகிய வாடா மலரிடத்தே.  நீடூழி - நீண்ட காலம்.  யான் புக்கு - யான் புகுந்து.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

 
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட் கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதாகும், உவப்பதன்கட்
குற்றமும் தோன்றா கெடும்.   
                     --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாதாகும் --- வெறுப்புத் தோன்றும் போது பொருளில் உள்ள குணம் ஆராய்வானுக்குத் தோன்றாது;

உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும் --- விருப்பம் உண்டாகும் போது, பொருளில் உள்ள குற்றமும் தோன்றாது மறையும் (ஆதலால்);

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் - வெறுப்பு விருப்பு இல்லாமல் ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்து அறிதல்,

அறிவுடையோர் கண்ணதே --- அறிவுடையார் செயலாகும்.


ஆவலித்து அழுத கள்வர்
     வஞ்சரை வெகுண்டு நோக்கிக்
காவலன் செங்கோல் நுண்ணூல்
     கட்டிய தருமத் தட்டில்
நாஎனும் துலைநா இட்டுஎம்
     வழக்கையும் நமராய் வந்த
மேவலர் வழக்கும் தூக்கித்
     தெரிக என விதந்து சொன்னார்.   
                    --- தி.வி.புராணம். மாமனாக வந்து....

இதன் பதவுரை ---

ஆவலித்து அழுத கள்வர் --- இங்ஙனம் அவலங் கொட்டி அழுத பொய் வேடமுடைய இறைவர், வஞ்சரை வெகுண்டு நோக்கி --- கொடியராகிய ஞாதிகளைச் சினந்து பார்த்து(ப்பின்), காவலன் செங்கோல் நுண்நூல் கட்டிய தருமத் தட்டில் --- புரவலனது செங்கோலாகிய நுண்ணிய நூலினால் யாத்த அறமாகிய தட்டின்கண், நா எனும் துலைநா இட்டு --- உங்கள் நாவாகிய துலைநாவை இட்டு, எம் வழக்கையும் --- எமது
வழக்கையும், நமராய் வந்த மேவலர் வழக்கும் --- எமது பங்காளிகளாய் வந்த இப்பகைவர்களின் வழக்கையும், தூக்கித் தெரிக என --- தூக்கி அறிவீர் என்று, விதந்து சொன்னார் --- (நூலோரை நோக்கித்) தெளிவுபடக் கூறியருளினார்.

ஆவலித்தல் --- வாய் புடைத்து ஆர்த்தல். அரசன் செங்கோலுக்கும் அறத்திற்கும் பழுது உண்டாகாமல் நடுவு நிலையுடன் ஆராய்ந்து கூறுக என்பார், இங்ஙனம் உருவகப்படுத்திக் கூறினார்;

தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்க, மனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.   
                 ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

தத்தமக்குக் கொண்ட குறி தவம் அல்ல --- தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவம் ஆகா; செத்துக --- வாளாற் செத்துக, சாந்து படுக்க --- அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக, மனன் ஒத்து --- மனம் பொருந்தி, நுகத்துப் பகல் ஆணி போன்று --- நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப, சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பே தவம் --- ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

காய்தல் உவத்தல் இன்றி ஒழுகும் அமைதியே தவமாம்.
'தத்தமக்குக் கொண்ட குறி' என்றது மழித்தல், நீட்டல், மயிற்பீலி கொள்ளல் முதலியனவாம்.

முறைதெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்
இறைதிரியான், நேர் ஒக்க வேண்டும், - முறைதிரிந்து
நேர் ஒழுகான் ஆயின் அதுவாம் ஒருபக்கம்
நீர் ஒழுகிப் பால்ஒழுகு மாறு.  
                       ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

முறை தெரிந்து --- கூறும் முறைமையை ஆராய்ந்து அறிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் --- செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும், இறை --- அரசன், திரியான் --- செல்வம் வறுமை நோக்கி நடுநிலையினின்றும் திரியாதவனாய், நேர் ஒக்க வேண்டும் --- இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும், முறை திரிந்து --- கூறும் முறையினின்றும் வழுவி, நேர் ஒழுகானாயின் --- நடுவுநிலையாக ஒழுகாது ஒழிவானாயின், அது --- அங்ஙனம் ஒழுகாத தன்மை, ஒரு பக்கம் நீரொழுகி --- தாயின் தனங்களை உண்ணுங் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீரொழுகி; பால் ஒழுகும் ஆறு --- மற்றொரு பக்கம் பாலும் ஒழுகுமாற்றை ஒக்கும்.

அரசன் செல்வம், நல்குரவு நோக்காது முறையறிந்து நீதி கூறுதல் வேண்டும்.

தாய் தன் குழந்தைகளுக்குள், நல்ல குழந்தை இது, தீய குழந்தை இது என்று அறிந்து பாலும் நீரும் அளித்தல் இல்லாமைபோல் அரசனும் செல்வம், வறுமை நோக்கி ஒருவற்கு நன்மையும் மற்றவற்குத் தீமையும் வர நீதி கூறலாகாது என்பதாம்.

தாய் தனது குழந்தைகளுக்குப் பால் தரும்போது, ஒரு பக்கம் பாலும், ஒரு பக்கம் நீரும் வருவது இல்லை. தாய் ஒன்றாய் மதித்தல் போல வேறுபாடின்றி நீதி கூறல் வேண்டும். வழக்குற்றார் இருவருள் வென்றவர் மகிழ்தல் இயல்பே. தோற்றார் வருந்துதல் இயல்பே. இருவர்க்கும் ஒப்ப ஒழுகுமாறு என்னை எனின் தோற்றார்க்குத், தான் 'நடுவு நிலைமையை உடையான் என்பதும்' தோற்றதால் வருந் துன்பத்தினை 'யாவர்க்கும் தோல்வி வெற்றி உண்டு அதற்காக வருந்தாது ஒத்தல் வேண்டுமென்றும்' இழந்த பொருள்மேல் அவர் கொண்ட விருப்பத்தைப் 'பொருளின் இயல்பு மாறி வருதலே ஆதலின் அதனிடம் பற்று வையாது ஒழிதல் வேண்டும் என்றும்' அரசன் விரித்துக் கூறவே அவரும் அவரை ஒப்ப மகிழ்வெய்துவர். இது இருவருக்கும் ஒப்ப நடந்தவாறாம். 'நேர் ஒக்க வேண்டும்' என்பதும் இது. 'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி' என்பதே இது.

Thirukkural - Management - Leadership
Leaders in educational institutions, business organizations, and nations make all the differences to the growth of institutions, the achievements of organizations, and the development of nations. A family, an institution, a society or a nation is the result of  a leader. The influence of a leader on others is unfathomable. “Leadership is the process of directing and influencing the task related activities of group members,” (Stoner, 1995). “Organizationsneed strong leadership and strong management for optimum effectiveness,” (Robbins, 2001).

Kurals brings out the significance of leadership and the desired qualities of an influential leader as described by Valluvar. Kurals provide us insights into family, business, social, and national leadership. One of the universally known qualities of a leader is impartiality. Valluvar uses a simile in Kural 
118 to explain the quality of being impartial.

Like a just balance are the great
poised truly and unbiased

A leader must be impartial in his dealings like an objective physical balance that does not take sides. A physical balance, before things are placed in its pans, is balanced.  When things are placed in the pans, the pans change positions to indicate the differences in weight of the objects kept. The change happens according to the weight of the things placed in its pans. The pans of a balance are not influenced by the things that were kept in them previously. They move depending on the things kept in them at present. Similarly, a leader must not be influenced by the past actions or inactions, especially when he deals with people. He has to look at every incident as fresh and look into the merits of that to take objective decisions. 

English Meaning - As I taught a kid - Rajesh
When judging someone you should be fair. Whatever happened in the past should not matter and should not influence the judgement. Even when judging your friend you should not be biased. Integrity is a jewel for nobel person.

Questions that I ask to the kid
How should you pass judgement?

1 comment:

  1. One of the best written blogs. No one has treated a thirukkural to this depth. Through this blog one can learn not just the main couplet, but also a whole heap of peripheral stuff. I am still unraveling more and more through this blog. Well done author. 👌👍🙏

    ReplyDelete