எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால் இல்லறவியல் செய்ந்நன்றி அறிதல் குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு
குறள் 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
எழுமை - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு.

எழு - ஏழு 
எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல்.

பிறப்பும் - பிறப்பு -  தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்

உள்ளுவர் -  உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

தம் - தன்னுடைய - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்.

துடைத்தவர் - துடைத்தல் - தடவிப்போக்குதல்; பெருக்கித்தள்ளுதல்; அழித்தல்; துவட்டுதல்; கொல்லுதல்; தீற்றுதல்; காலியாக்குதல்; நீக்குதல்; கைவிடுதல்; ஒப்பமிடுதல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
உயர்ந்தோர் பிறரிடம் இருந்து உதவியை பெற்றால் அதனை அவர் பின்பு தோன்றுகின்ற ஒவ்வொருப்பிறவியிலும் அந்நட்பினையும் நினைத்துப்பார்ப்பர் ஏனெனில் அந்நண்பர் இவருடைய துன்பத்தை நீக்கியவர் ஆவார். உதவி பெறுவது அரியது. செய்ந்நன்றியுடன் இருப்பது மேன்மையான ஒன்று.

தோன்றுகின்ற ஒவ்வொரு பிறவியிலும் நமது நன்றியை நினைக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். அப்படியானால் 
1) நமது இயல்பு, எண்ணங்கள், வினை, வினைப்பயன் ஆகியவை நமது அணுக்களில் பதிவாகி அடுத்த சந்ததியனுருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆதலால் நமது இயல்பு, எண்ணங்கள்,  வினை ஆகியவற்றில் கவனம் தேவை 

2) மறுபிறவியில்க்கூட நினைப்போம் என்றால் இப்பிறவியில் செய்ந்நன்றியை எவ்வளவு போற்றுவோம் (போற்றவேண்டும்) நாம். 

எழுமை என்ற சொல்லுக்கு உயர்ச்சி என்ற பொருளை எடுத்துக்கொண்டால் அது இங்கே உயர்ந்தோரை குறிக்கிறது என்று பொருள். நட்பினை மறக்காதவர் உயர்ந்தோர் என்று மறைமுகமாக கூறுகிறார் திருவள்ளுவர். 

எழுபிறப்பு என்பதை ஏழு பிறப்பு என்று கூறியுள்ளனர். அது உண்மையாக இருக்கலாம். எழு என்றால் எழுதல் அதாவது தோன்றுதல் என்று பொருள். ஆதலால் தோன்றுகின்ற ஒவ்வொரு பிறவியிலும் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். மேலும் மனிதனுக்கு ஏழு பிறப்பு என்பது நம்பிக்கை மட்டும் தான்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
குறள் 126, 398, 62

பரிமேலழகர் உரை
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். ('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,).

மணக்குடவர் உரை
தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

மு.வரதராசனார் உரை
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

சாலமன் பாப்பையா உரை
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உதவியோர் நட்பை உயிருள்ளவரை மறக்காதே.