குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
பொருள்
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செய்தார்க்கும் - செய்தவர்
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
இனியவே - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
செய்யாக்கால் - செய்யாது இருத்தல் ; இயற்றாமல் இருத்தல்
என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.
பயத்ததோ - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.
சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.
முழுப்பொருள்
வாழ்வில் நமக்கு துன்பங்களை தந்தவர்களுக்கும் வலிகளை தந்தவர்களுக்கும் த்ரோகங்களை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றே சராசரி மனது கூறும். ஆனால் திருவள்ளுவர் வான்மறை எழுதுகிறார் அல்லவா. துன்பத்தை தந்தவர்களுக்கும் இனியவற்றையும் நல்லவற்றையும் நன்மைகளையும் செய். அதுவே சான்றாண்மை, மேன்மை குணம் கொண்டோரின் பண்பாகும். மேன்மையான குணங்கள் கொண்டும் துன்பம் செய்தவர்க்கும் நன்மை செய்ய முடியவில்லையென்றால் தன்னுடைய குணத்தினால் என்ன பயன் ?
சால்பு என்ற சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. ஆதலால் கல்வியின் பயனே துன்பம் கொடுத்தவருக்கு உட்பட பிறருக்கு தீங்கு நினைக்காது நன்மை நினைப்பது ஆகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
குறிப்பு: துன்பம் செய்தவர்களுக்கு நன்மை செய் என்று தான் சொல்கிறார். அவர்களுடன் இயைந்து இரு என்றெல்லாம் திருவள்ளுவர் கூறவில்லை. இயைந்து இருக்க வேண்டும் என்றால் அவருடைய குணங்களிலும் நல்மாற்றங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும். இருவரும் இயைந்து நடக்க கூடிய சூழலும் இருக்க வேண்டும்.
நெல்சன் மண்டேலா (Nelson Mandela) அவர்கள் தென்னாபிரிக்க நாட்டின் தலைவராக பொறுப்பு ஏற்கும் பொழுது அவ்விழாவிற்கு அவர் சிறையில் இருந்த பொழுது அவரை தரக்குறைவாக நடத்திய காவலர்களை அழைக்கிறார். உங்களை தரக்குறைவாக நடத்தியவர்களை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நெல்சன் மண்டேலா கூறுகிறார் நான் அவர்களை மன்னிக்கவில்லை என்றால் நான் (பகை என்னும்) சிறையில் அகப்பட்டு கொள்கிறேன் என்று தான் அர்த்தம். அவர்களை மன்னித்து என் நண்பர்களாக ஏற்றால் தான் நான் அதை கடந்து மனதளவில் சுதந்திரம் பெற்று இருக்க முடியும் என்று கூறுகிறார்.
நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம்செய்வ தல்லால், தவற்றினால் தீங்கூக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல். (நாலடி 69)
தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும் அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல் உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.
அதாவது, தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.
இப்போது பாரதியின் அருமையான ஒரு பாடலை முழுமையாகப் பார்த்துவிடலாம்.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? – நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? – நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? – நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)
வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? – நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)
போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் – நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? – நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)
தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் – நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.
மு.வரதராசனார் உரை
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.
Thirukkural - Management - Not Hurting Others
Valluvar goes a step ahead to advice us on the importance of proactive action in turn to a destructive action, Kural 987.
What good is that good which does not return
Good for evil?
Even if someone hurts you, harms you, or damages you, you in turn do a good deed, a pleasant act, and a beneficial act to him. The intention of doing that is not to insult, humiliate, or make him feel ashamed of what he did but to show him that you are a person of humility.
Responding positively to an insulting act is to satisfy your own self and make the other person know that you are a humble and wise person.
No comments:
Post a Comment