குறள் 896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]
பொருள்
எரியால் - எரி - நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை
சுடப்படினும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.
உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்
உண்டாம் - உண்டு - உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;
உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்
உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது
பெரியார்ப் -மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.
பிழைத்து - பிழைத்தல்- குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.
ஒழுகுவார் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
முழுப்பொருள்
தீ என்பது ஒரு காட்டையே முற்றிலும் அழிக்கும் தன்மை வாய்ந்தது. ஆதலால் தீ ஒருவர் உடலை மிக எளிதாக அழித்துவிடும். அத்தகைய தீ ஒருவரை சுட்டால் அவர் உயிர் பிழைப்பது மிக மிக அரிது/கடினம். நெருப்பு சுட்டும் ஒருவர் பிழைக்க கூடும் ஆனால் சான்றோர் பெரியோரிடம் தவறாக நடந்துகொண்டால் அக்குற்றத்தின் விளைவான அழிவில் இருந்து தப்பிக்கவே முடியாது.
ஏனெனில் பெரியோரின் சினம் நம்மை அழிக்கும் தன்மை வாய்ந்தது. நம்மை பற்றி முழுவதுமாக அறிந்து இருப்பர். நம்முடைய பலகீனங்கள் பெரியோர்களுக்கு தெரியும். ஆதலால் நம்மை வீழ்த்துவது அவர்களுக்கு மிக எளிது.
தரையில் சேதம் என்றால் எல்லோருக்கும் உடனடியாக தெரிந்துவிடாது. மூடி மறைத்துவிடலாம். ஆனால் கோபுரத்தில் சேதம் என்றால் மூடிமறைக்க முடியாது. செய்தி மிக வேகமாய் பரவி விடும். ஆதலால் பெரியோரிடம் தவறாக நடந்துகொண்டால் இந்த சமூகம் அமைதியாக வேடிக்கை பார்க்காது. பெரியோரின் பகையை அஞ்சி தன் பங்கிற்கு நம்மை அவர்களிடம் இருந்து விலக்கி விடும். ஆதரவு அற்று பலம் குறையும். தனிமை படுத்தப்படுவோம். அழிவு உண்டாகும்.
இன்னா நாற்பது , “இன்னா, பெரியார்க்குத் தீய செயல்” (இன்னா.27) என்றும் “பெருமையுடையாரைப் பீடழித்தல் இன்னா” (இன்னா.28) என்றும் கூறும். பழமொழி நானூற்றுப் பாடலொன்று, இக்குறளின் கருத்தை இவ்வாறு கூறுகிறது:
ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு. (பழமொழி.233)
இப்பாடல் சொல்லும் கருத்து. பெரியோர்களை வெகு குறைவாக மதிப்பிட்டு, இவர்கள் எம்மோடு மாறுபடுதல் கூடுமோ என்று ஆணவத்தால் நினைத்து, அறிவிற் சிறியார் தாமாக வன்மையானவும், முறையற்றனவும் செய்வதும் சாகப்போவது அறியாமல் விலங்குகள் அவை செல்லும் வழியினை அறியாதவாறு, அறிவு மயங்கலால், ஊரினுள் புகுந்து தம்முடைய உயிரையே இழந்து வருந்துவது போலாகும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.).
மணக்குடவர் உரை
தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார். இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.
மு.வரதராசனார் உரை
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை
தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.
No comments:
Post a Comment