மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

thirukkural meaning விளக்கம் குறள் 857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் பொருட்பால், நட்பியல், இகல்
குறள் 857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
மிகல் - மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை

மேவல் - சார்தல்; ஆசை; கலக்கை

மெய்ப்பொருள்  - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று; உண்மையானசெல்வம்; உண்மை; கடவுள்; நாயனார்அறுபத்துமூவருள்ஒருவர்.

காணார் - குருடர்; பகைவர்.

இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

மேவல் - சார்தல்; ஆசை; கலக்கை

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

அறிவினவர் - அறிய மாட்டார்கள் 

முழுப்பொருள்
எத்தகைய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஆக்கத்தையும் செல்வத்தையும் தராத அழிவையும் மனநோயினையும் இழப்பையும் தரக்கூடிய பகை துன்பம் இகழ்ச்சி வெறுப்பு ஆகியவற்றை விரும்புபவர்கள் அறிவில்லாதவர்கள். அத்தகையவர்கள் பெருமையும் வெற்றியும் தரக்கூடிய மெய்ப்பொருளை உண்மையை ஒருபொழுதும் காண மாட்டார்கள். கண்முன்னே எத்தனை நீதி நூல்கள் எத்தனை மெய்ப்பொருளை உரைத்தாலும் அதை காண மறுக்கின்ற குருடர்கள் இந்த அறிவில்லாதவர்கள்.

கல்வி அதிகாரத்தின் கண் கற்ற, “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என்ற குறளை நினைவு கூறலாம். கண்முன் இருக்கும் அறிவைக் கல்லாதவனை கண்கள் இருக்குமிடத்தில் இரண்டு புண்களே கொண்டவன் என்று இழித்துரைத்தது இங்கும் பொருந்தும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். (இன்னா அறிவு -தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழிநின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்¢ததாகலின், 'மெய்ந்நூல'¢ எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார். இவை இரண்டு பாட்டானும்இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப் பொருளைக் காணமாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறிவுடையார். இது மாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது.

மு.வரதராசனார் உரை
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain