குறள் 837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
பொருள்
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்
ஆர - ஓர்உவமச்சொல்; மிக
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.
பசி - உணவுவேட்கை; வறுமை; தீ
பசிப்பர் - பசித்திருப்பர்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்
பெருஞ் - பெரும் - பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.
முழுப்பொருள்
ஒரு அறிவிலி / பேதை / மடயரிடம் அதிகமான செல்வம் வந்து சேருமானால் அவருடைய மிக உற்றார் உறவினர்கள் அந்நியர்கள் அவரிடம் அதிக நெருக்கம் காண்பிப்பர். ஏனெனில் அவர்கள் அச்செல்வத்தை அனுபவிக்க பெரும்பசியுடன் காத்து இருப்பர். பிறர் செல்வதை அனுபவிக்க நினைப்போர் (பசித்து இருப்போர்) ஒரு வித வறுமையில் இருக்கிறார்கள் என்பதை குறிக்கவே வள்ளுவர் பசிப்பர் என்ற சொல்லை பயன் படுத்தி இருக்கக்கூடும்.
தான் ஈன்ற செல்வத்தை மட்டும் நம்பி இருப்பவர் பிறர் செல்வங்களுக்காக பசித்து இருக்க மாட்டார்கள். அவர்கள் செல்வந்தர்கள். பிறர் செல்வத்தின் மீது ஆசைகொண்டோர்களுக்கு எதுவும் எவ்வளவும் பத்தாது. அத்தகையோர் (மனதளவில்) வறுமையில் இருக்கிறார்கள். இதை அறியாத அவர்களே உண்மையில் பேதை.
இக்கருத்தைப் பழமொழி நானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.
விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து’ (பழமொழி 286)
இப்பாடலின் பொருள்:
பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தை உடையவனே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக்கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காதவர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங்காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினையுடைய கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும். அது அறிவீனர்களின் செயல்ன்றோ? இப்பாடலில் ஒருவனை விளித்துச் சொல்லுவதிலே ஒரு நையாண்டி இருப்பதை உணரலாம். அழகிய புருவம் உடையவனாய், புற அழகனாய் இருப்பவனே, ஆனால் அறிவிலாப் பேதையாக இருக்கிறாயே என்று பொருள்படுவதை உணர்க.
ஒப்புமை
“பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்
வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து” (நாலடி.269)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து. இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
No comments:
Post a Comment