செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

thirukkural meaning விளக்கம் குறள் 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று பொருட்பால், நட்பியல், தீ நட்பு
குறள் 815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஏமம் -  இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

சாரா - பொருந்தாத

சிறியவர் - சிறியர், சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.
புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

எய்தலின் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தாமை - எய்தாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.


முழுப்பொருள்
பயன் எதிர்பாராமல் பிறருடன் கொள்வதே நட்பாகும். எல்லா உறவுகளிலும் நல்லவையும் தீயவையும் இருக்கும். தீயவற்றிற்கு எதிராக நாம் அறத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாவலாக  கொண்டாலும் நம்முடன் பொருந்தாத கீழ்மக்களிடம் நட்பு வைத்துக்கொள்வதை விட வைத்துக்கொள்ளாமல் இருப்பதே நமக்கு நன்மை செய்யும். 

ஏனெனில் கீழ்மக்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு துன்பத்தை தரும். நாம் அவர்களுக்கு உதவிகளையும் இன்பத்தையும் கொடுத்து  இருப்போம். ஆனால் கீழ்மக்கள் நமது அறத்தையும் ஒழுக்கத்தையும் கெடுக்கும் வண்ணம் தீயவற்றை நம்மில் பழக்கப்படுத்துவர். அதற்கு சப்பைக்கட்டு கட்டி  நியாயப்படுத்தவர். அதுஅழிவிற்கான துவக்கம். ஆதலால் தீ நட்பு வேண்டாம் என்கிறார்  திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று. (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தெலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதினும் பெறாமை நன்று. இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.

மு.வரதராசனார் உரை
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain