அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

thirukkural meaning விளக்கம் குறள் 795 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல் பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்
குறள் 795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
அழச் - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

சொல்லி - சொல்(லு)-தல் - col-   5 v. tr. [K. sol,M. colluka.] 1. To say, speak, tell, mention,utter, express; பேசுதல் சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்(குறள், 664). 2. To recite, repeat, relate, quote;திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை 3. [M. colluka.] To dictate, command; கட்டளையிடுதல் மூத்தோர் சொல்லியதைமீறாதே. 4. To advise; புத்திகூறல். 5. To inform; அறிவித்தல் யாருக்கென் சொல்லுகே னன்னைமீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 6. To praise;புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா.மாரீச. 73).  

அல்லது - தீவினை; தவிர

இடித்து - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

அறிய - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

வல்லார்  - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

முழுப்பொருள்
நாம் தவறு செய்தாலோ அல்லது தவறு செய்ய எண்ணினாலோ அத்தவறுக்காக நம்மை மனம் வருந்த செய்து அல்லது அழச்செய்து நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய உலக நெறிகளையும் இயல்பையும் ஒழுங்கையும் அறிந்துணர்ந்த திறமை உள்ளவரை ஆராய்ந்து நட்பாக/ உறவாக கொள்ள வேண்டும். 

ஒரு நட்பு நல்ல நட்பாக இருக்குமாயின் அது நாம் அழுதாலும் பரவாயில்லை என்று, வருந்தும்படியாக நேரடியாக நம் தவறைச் சொல்லும்; எப்போது தட்டிக் கேட்டு, இடித்துரைக்க வேண்டுமோ, உரிமையோடு அவ்வாறும் செய்யும். 

இது ஒரு முக்கியமான ஒரு குறள். பலர் நமக்கு எதுக்குடா வம்பு, அவன் சொன்னாலும் கேட்க மாட்டான் அல்லது அவனே கஷ்டப்படுகிறான் அல்லது அவனே கற்றுக்கொள்வான் அல்லது காலம் கற்றுத்தரும் அல்லது எனக்கு பல வேலைகள் இருக்கிறது அல்லது நாம் என்ன சொன்னாலும் அவன்தான் செய்ய வேண்டும் அல்லது எவ்வளவுதான் ஒருவனுக்கு சொல்வது அவன் செய்யவில்லையே அல்லது அவன் நம்மை கேட்காமல் எப்படி அவனிடம் இதைப்பற்றி உரையாடுவது என்று சப்பை கட்டுக்கட்டாமல் தன்  நண்பன் தவறு செய்தால் அறச்சீற்றம் கொண்டு நண்பன் அழுதாலும் பரவாயில்லை என்று உரிமையாக கண்டிக்கும் நண்பனே நண்பன். 

“அழஅழச் சொல்லுவார் தமர், சிரிக்கச்சிரிக்கச் சொல்லுவார் பிறர்” என்ற பழமொழியொன்றுண்டு. 

”உளைய உரைத்து விடினும்” (பழமொழி 2999)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.).

மணக்குடவர் உரை
குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க. இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain