Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

குறள் 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
புணர்ச்சி - சேர்க்கை; ஒரேநாட்டார்ஆதல்; கலவி; எழுத்துமுதலியவற்றின்சந்தி; முன்பின்தொடர்பு; அணிகலன்.

பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல்.

வேண்டா - வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not 

உணர்ச்சிதான் -உணர்ச்சி - உணர்வு; அறிவு மனம்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

ஆம் -  நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

கிழமை  - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை.

தரும் -  கொடுக்கும் 

முழுப்பொருள்
நட்பென்பது ஒருவரோடு ஒருவர் சேர்ந்து இருப்பதோ அல்லது நேரில் கூடி குலாவுவதோ அல்லது தொலைபேசிகளில் பல மணிநேரங்கள் அரட்டை அடிப்பதோ இல்லை.  உள்ளத்தால் ஒத்து இருப்பதே மெய்யான அடித்தளமாய் அமைந்து சிறந்த/அழகான நட்பாய் விளங்கும். இங்கே வள்ளுவர் மனதையே அடித்தளமாக கூறுகிறார். அறிவை அல்ல. 

ஏனெனில் அறிவு தனக்கு வரும் பயன்களை எண்ணியே உறவுகளை பேணும். உதாரணமாக வீட்டில் ஒருவர் செடிகளை வளர்க்கிறார் என்றால் அவர் பெரும்பாலும் அலங்காரத்திற்காக பூ வகை செடிகளையும் கொடிகளையும், சமையலுக்காக காய்கறிகளையும், கனிகளுக்காக மரங்களையும், நடப்பதற்காக புல் தரையையும் என்று ஏதோ ஒருவித பயனுக்காகவே செடிகளை வளர்ப்பார். ஆதலால் பயன் எண்ணி உறவுகளிடம் பழக வேண்டா. 

இக்குறள் நண்பர்களுக்கு மட்டும் அல்ல. நமது குருதிச்சுற்றத்திற்கும் (blood relation), அலுவல் நண்பர்களுக்கும், வணிக பங்குதாரர்களுக்கும் என்று உறவுகள் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். உதாரணமாக அலுவலிலும் வணிகத்திலும் லாப நஷ்டங்கள் சகஜம். ஆனால் ஒரு வர்த்தகத்தில் ஒருவருக்கு லாபம் இல்லையெனில் அல்லது நஷ்டம் ஏற்பட்டாலோ உறவை முறித்துக்கொள்வது தவறு. ஆங்கிலத்தில் ஒன்று கூறுவர் business (வணிகம்) என்ற ஒரு சொல்லுக்கு பிறகு ஒரு வார்த்தையை போடுவாய் என்றால் எதனை போடுவாய் ? அதற்கு பதில் relationship (உறவு)  profit (லாபம்) அல்ல. 

மேற்கு நாடுகளில் (இன்று இந்தியாவில் கூட) உள்ள dating நடைமுறையில் உள்ள சிக்கலே அடிப்படை வசதிகளை தாண்டி பயனை எதிர்பார்த்து அமையும் பல உறவுகளால் தான். ஆதலால் இக்குறள் காதலர்களுக்கும் கணவன் மனைவிக்கு கூட பொருந்தும் என்றே எனக்கு தோன்றுகிறது. 

புறநானூற்றுப் பாடலொன்றின் வரிகள் (216) அறிவாலும், பண்பாலும் உயர்ந்து ஒத்த கருத்துடையோரது நட்பை இவ்வாறு காட்டுகிறது. பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்று தன் அருகில் இருக்கும் சான்றோர்கள் சந்தேகப்படுவதை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், ”அவர் நிச்சயமாக வருவார்; அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று இப்பாடலில் குறிப்பிடுகிறான்.

“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
ஐயம் கொள்ளன்மின்; ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்கும் காலை ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே!” (புறநா.216:1-3)

கம்பராமாயணத்தில், விபீடணன் அடைக்கடலப் படலத்தில், அழகாக இரவும் (எல்லியும்) பகலும் ஒன்றையொன்றை தழுவி நின்றதைப் போன்று இராமனும் விபீடணனும் தழுவி நின்றதைக் கூறும் பாடல்.

தொல் பெருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்
புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின் தோளார். (கம்ப.விபீடணன் .123)

“செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்கழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்” (நாலடி154)

“காண்டகைமை இன்றியும்முன் கலந்தபெரும் கேண்மையினார்” (பெரிய.திருநா.203)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும். (புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புணர்ச்சி'(புறம்.58) என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்.(புற.நா.217) நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும். இவ்வுணர்வுடைமைதானே நட்பாகு மென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment