குறள் 765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை
[பொருட்பால், படையில், படைமாட்சி]
பொருள்
பொருள்
கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்
உடன்று - வெகுண்டு, கோபித்து, சினந்து
மேல்வரினும் - எதிரே / மேலே வந்தாலும்
கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை.
எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.
நிற்கும் - நிலைக்கும்
நிற்பது - niṟpatu n. நில்-. The immoveables, as the vegetable kingdom; தாவரம் நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).
ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்
அதுவே - அதுவே ; அத்தன்மை வாய்ந்ததே
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை
முழுப்பொருள்
ஒரு சிறந்த படைக்கு ஆற்றல் எவ்வாறு இருக்கும் தெரியுமா? எப்படையானாலும் அதையழிக்க வல்ல ஆற்றல் மட்டும் அல்லாது உயிர்களை கொல்வதை தன்னுடைய கருமமாக கொண்டவன் யமன். அத்தகைய யமன் சினந்து எழுந்து வந்தால் உயிர் இழப்பு நிச்சயம். ஆனால் யமன் சினந்து வந்தாலும் அதற்கு சற்றும் வருந்தாமல் சலனம்கொள்ளாமல் யமனை எதிர் நோக்கும் வல்லமையும் திறனும் மனவலிமையும் அர்ப்பணிப்பும் கொண்ட படையே சிறந்த படை.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“கூற்றுவெகுண்டு வரினும் மாற்றுமாற் றலையே” (பதிற்.11:10)
“கூற்றம் வரினும் தொலையான்” (கலி.43.10)
“அருநவை நமனு மாற்றான்” (சீவக.1114)
“மறலியஞ் சுறுவிறலர்” (கம்ப.மராமரப்.10)
“கூற்றுவன் தன்னொடிவ் வுலகம் கூடிவந்
தேற்றன வென்னினும் வெல்ல வேற்றுள
மாற்றவன் தம்பி” (கம்ப.விபீடணன்.68)
“கூற்றையும் கட்பொறி குறுகக் காண்பரேல்
ஊற்றுறு குருதியோ டுயிரும் உண்பரால்” (கம்ப.இலங்கை கேள்வி.22)
“கூற்றம் உன்னெதிர் வந்துயிர் கொள்வதோர்
ஊற்றம் தானுடைத் தன்று” (கம்ப.இராவணன் சோகப்.22)
“கூற்றின்வாய் உற்றால் வீரங் குறைவரே இறைமை கொண்டார்” (கம்ப.மூலபல.46)
“கூற்றும் இவருடன் பகைக்க வற்றோ” (கம்ப.மூலபல.51)
பரிமேலழகர் உரை
கூற்று உடன்று மேல் வரினும் - கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும ஆற்றலதுவே படை- நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது. ('மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.).
மணக்குடவர் உரை
கூற்றமானது வெகுண்டு தன்மேல்வரினும், சிதறுதல் இன்றியே எதிர் நிற்கவல்ல வலியுடையதே படையாவது. இது மாற்றான் மேல்வந்தால் பொறுக்கவேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
சாலமன் பாப்பையா உரை
எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.
No comments:
Post a Comment