குறள் 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]
பொருள்
பொருள்
பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு
குழுவும் - மக்கட்கூட்டம்; மகளிர்கூட்டம்; ஆடுமாடுமுதலியவற்றின்கூட்டம்; தந்திரம்; சாதுரியச்சொல்; தொகுதி.
பாழ் - அழிவு; இழப்பு; கெடுதி; இழிவு; அந்தக்கேடு; வீண்; வெறுமை; இன்மை; ஒன்றுமில்லாதஇடம்; தரிசுநிலம்; குற்றம்; வானம்; மூலப்பகுதி; புருடன்.
செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
உட்பகையும் - நட்புப்பாராட்டிக்கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு.
வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்
அலைக்கும் - அலைத்தல் - அசைத்தல்; அலையச்செய்தல்; நீரைக்கலக்குதல்; வருத்துதல் அடித்தல் நிலைகெடுத்தல்; உருட்டுதல் அலைமோதுதல்.
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
குறும்பும் - பாலைநிலத்தூர்; ஊர்; குறுநிலமன்னர்; பகைவர்:சிறியதுணுக்கு; அரண்; வலிமை; குறும்பர்சாதி; குறும்புத்தனம்; போர்
இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.
நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
முழுப்பொருள்
ஒரு நாடு கொள்ளக்கூடாதவை எவை ?
1. பல்குழு - மக்களை பல பெயர்களில் பிரிக்கும் பல குழுக்களை ஒரு நாடு கொள்ள கூடாது. ஏனெனில் அது ஒற்றுமையை வளர்க்காது
2. பாழ் செய்தல் - நாட்டையும் நாட்டு மக்களையும் அழிக்கும் எத்தகைய செயலும், பூசல்களும் ஒரு நாட்டில் இருக்க கூடாது
3. உட்பகை - உடம்பினுள் உள்ளிருந்து அழிக்கும் நோய் போன்ற உட்பகை ஒரு நாட்டில் மக்களுக்குள்ளும், அமைச்சர்களுக்குள்ளும், நிர்வாகத்திற்குள்ளும் இருக்க கூடாது
4. வேந்தலைக்கும் - மன்னரை அலைக்கழிக்கும் வருத்தும் எத்தகைய குற்றங்களும், சமூக சீர்கேடுகளும் ஒரு நாட்டில் இருக்க கூடாது
5. கொல்குறும்பும் - கொலை தொழில் புரிவோரும், பகைவரும், நம்மை அழிக்கக்கூடிய குறுநில மன்னர்களும் ஒரு நாட்டிற்கு இருக்க கூடாது.
மேற் சொன்னவை இல்லாத நாடே நாடு.
துரியோதனனுக்கு பல நல்ல குணங்கள் இருந்தன. அவன் மனைவி பானுமதி மீதும், தன் தாய் தந்தையர் மீதும், தம்பிமார்கள் மீதும், தன் மக்கள் மீதும் கர்ணன் மீதும் கொண்ட அன்பு எல்லையற்றது. ஆனால் அவன் அவனுக்கு நிகரான பகையை என்றும் தேடிக்கொண்டு இருந்தான். அவன் அரசை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தாமல் போர் செய்வதிலும் பகைவரை கொள்வதிலும் தான் நாட்டம் அதிகம் கொண்டான். அதனாலேயே அழிவை கண்டடைந்தான்.
பரிமேலழகர் உரை
பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.).
மணக்குடவர் உரை
பலபலவாய்த் திரளுந் திரட்சியும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தனை யலைக்கின்ற கொலைத் தொழிலினையுடைய குறும்பரும் இல்லாதது நாடு.
மு.வரதராசனார் உரை
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
சாலமன் பாப்பையா உரை
சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.
No comments:
Post a Comment