குறள் 587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
பொருள்
மறைந்தவை - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்
கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக
கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.
வற்று - கடல்நீர்வடிகை; கூடியது, ஒருசாரியை
ஆகி - ஆகுதல் - ஆதல்
அறிந்தவை - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்
ஐயப்பாடு - ஐயம், சந்தேகம்.
இல்லதே - இல்லை
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.
முழுப்பொருள்
பிறர் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாய் செய்யும் காரியங்கள் விவாதங்கள் பற்றியும் பலவாறு சேகரித்து அதனை ஐயமற அறிந்து கொண்டு கொள்வதே ஒற்றரின் வேலையாகும். இவ்வாறு தான் அறிந்துகொள்வதனால் பிறர் தன்மேல் ஐயம் கொள்ளாதவாறு இருப்பதும் ஒற்றரின் குணமாகும்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்” (திரி.85)
பரிமேலழகர் உரை
மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்.
இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.
மு.வரதராசனார் உரை
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
No comments:
Post a Comment