உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

thirukkural meaning விளக்கம் குறள் 425 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு.பொருட்பால், அரசியல், அறிவுடைமை
குறள் 425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

தழீ  - ஓர்ஒலிக்குறிப்பு (clamoming, rattling, roar, as of a drum)

து - இயைவு -  இணக்கம்; பொருத்தம் சேர்க்கை
இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்

ஒட்பம் - அறிவு; அழகு; நன்மை; மேன்மை

மலர்தலும் - மலர்தல் - பூவின்மொட்டவிழ்தல்; பரத்தல்; மனமகிழ்தல்; தோன்றல்; எதிர்தல்; அகலுதல்; மிகுதல்

கூம்பல் - குமிழமரம்
கூம்பலும் - கூம்புதல் குவிதல்; ஒடுங்குதல்; ஊக்கம்குறைதல்.

இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
இவ்வுலகம் (உயர்ந்தோர்) அறிவினை (அறிவுடையோரை) நட்பாக இனைத்துக்கொள்ளும். அதுவே அறிவின் பெருமையாகும். உயர்ந்தோர்தம் உறவே ஒருவரை உயர்வில் சேர்ப்பதாகும். அதுவே அறிவுடையோர்தம் செய்கையுமாம். அவ்வறிவினால் ஏற்பட்ட நட்பு மலரினை போன்று துவக்கத்தில் மலர்ந்து மகிழ்ச்சியை தந்து பின்பு வாடி வருத்தத்தை தருவது அன்று. நேரத்திற்கு ஏற்றார்போல் மாறாதது. இவ்வறிவு என்றும் சீராகவே சமநிலையுடன் இருக்கும். 

ஔவையின் மூதுரைப் பாடல்.
நல்லோரைக் காண்பதுவும் நன்றே
நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உலகத்தோ டொட்ட ஒழுகல்” (குறள் 140)
“தேசத்தோ டொத்துவாழி” 
“நாடொப்பனசெய்” (ஆத்திசூடி)

இளமையில் அறியாமையே களிப்பும் துயரும். வளர்தல் என்பது அறிதல். பின்னர் அறிதலே களிப்பும் துயரும். அறியாமையும் அறிவும் அறிபவனுடன் விளையாடுகின்றன. அறிதலும், அறியாமையை கண்டடைதலும், மீண்டும் அறிதலும், அறிதொறும் அறியாமை காண்டலும் என நிகழும் அந்த விளையாட்டே வாழ்வின் கொண்டாட்டம். வலியும் துயரும் கொண்டாட்டமே என்று அறிக! ஊசல் பின்னகராவிடில் முன்னெழ இயலாது. ” என்றது.

இளம்குரங்குகள் அதை நோக்கின. கும்போதரன் “முதிர்ந்தபின் அறிபவை அனைத்தும் மலைகளைப்போல் மாறாது நிலைகொள்ளும் மெய்மைகள். பெருமெய்மைகள் அனைத்தும் அறிபவனுக்கு வெறுமையை மட்டும் அளிக்கின்றன” என்றது. “ஏன்?” என்று சிறுவனாகிய புஷ்பகர்ணி அதை நோக்கி தாவிச் சென்று அருகே நின்று தலைசரித்து இமைமூடி விழிமின்னி கேட்டது. “ஏனெனில் இங்கு மகிழ்ச்சியென்று நாம் அறிவது அனைத்தும் ஆணவத்தின் பிறிதொரு வடிவையே. வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அழிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

புஷ்பகர்ணி கிளைபற்றி மேலேறி அதன் தலையருகே வந்து சிறு கிளையில் அமர்ந்து “மெய்மையை அறிவது துயரென்றீர்கள். அது மகிழ்வென்றல்லவா சொல்லப்பட்டுள்ளது என்று அவர் கேட்டார்” என்றது. “ஆம், மெய்யறிந்து அதை சென்றடைந்தவர்கள் கூறிய சொற்கள் அவை. அது மகிழ்வென்றே உரைக்கின்றன நம் உடலில் எழும் மூதாதையர் குரல்களும். மானுடரின் நூல்களில் பதிந்துள்ள சொற்களும் மற்றொன்று கூறவில்லை. ஆயினும் நாம் அறியும் மெய்மையின் கணத்தோற்றங்கள் அனைத்தும் நாம் கொண்டுள்ள அனைத்தையும் பொருளற்றவையாக்கி சோர்வையும் சலிப்பையும் வெறுமையையும் மட்டுமே அளிக்கின்றன” என்றது கும்போதரன்.

சற்று நேரங்கழிந்து பீதகர்ணி “ஆம், நான் இவ்வாழ்வில் பொருட்படுத்தக்கூடிய எதையேனும் அறிந்திருக்கிறேன் என்றால் அதன்பின் நெடுநாட்கள் வெறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவ்வெறுமையிலிருந்து என்னை பிடுங்கி அகற்றிக்கொண்டு பொருளற்றவை என்று நன்கறிந்த சிறு செயல்களில் ஈடுபட்டு, சிறு பூசல்களில் ஊடாடி, சிறு விழைவுகளை துரத்திச்சென்று, அவ்வெறுமையிலிருந்து மீண்டு வந்தேன். இங்கு நான் வைத்திருப்பவை அனைத்தும் அதன் பின்னர் நான் திரட்டி என் மேல் அணிந்துகொண்டிருப்பவைதான்” என்றது.

மற்ற குரங்குகள் ஒன்றும் சொல்லவில்லை. சில குரங்குகள் எண்ணம்கூர சலிப்புற்றவை என தலையை சொறிந்துகொண்டன. பீதகர்ணி தொடர்ந்தது “அவ்வப்போது தனிமையில் அவ்வெறுமையை சென்று தொடுகையில் என் உள்ளம் திடுக்கிட்டு குளிர்ந்து உறைகிறது. அக்கணமே அதை உதறி மீண்டு வந்து இவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன்” என்றது. சௌவர்ணன் “ஏன் நீ அறிந்தவற்றில் சென்று நிலைகொள்ள முடியவில்லை?” என்றது. “அங்கு செல்ல நான் இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிடவேண்டும். நான் அறிந்து திளைத்து அறிதல்களாகவும் நினைவுகளாகவும் சேர்த்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றையும். எண்ணவே அச்சம் கொள்கிறேன்” என்றது பீதகர்ணி.

“ஒவ்வொரு அறிதலும் ஒரு சிறு இறப்பு” என்றது கும்போதரன் எங்கிருந்தோ என. அக்குரல் அதன் வாயிலிருந்துதான் எழுந்ததா என்னும் ஐயம் பிற குரங்குகளுக்கு ஏற்பட அவை மெய்ப்பு கொண்டன. “ஆனால் மெய்மை விடுதலை செய்கிறது என்கிறார்கள். நீ இப்போது கையில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் உன்னை இங்கு கட்டிப்போடுவன. இவை உன்னால் தாள முடியாத துயரை எப்போதுமே அளிக்குமெனில் அக்கணமே அவற்றை உதறிவிட்டு நீ உள்ளே வைத்திருக்கும் அந்த மெய்மையை சென்று தொட்டுவிடுவாய். அதை பற்றிக்கொண்டு இவையனைத்தையும் துறக்க முயல்வாய்” என்றது தூமவர்ணி.

கும்போதரன் “மெய்மை விடுதலை செய்கிறது” என்று தானிருந்த மாற்றுலகிலிருந்து தனக்கே என சொன்னது. “விடுதலை என்பது இழப்பும் கூடத்தான். இழப்பவற்றின் ஏக்கம் விடுதலை கொண்ட எவருக்கும் சற்று நாள் இருக்கும். பெருநோய் கொண்டு வலி சூடித் துடிப்பவர்கள்கூட அதிலிருந்து விடுதலை கொண்டதும் அவ்வலியை நினைத்து சற்று ஏங்குவதை பார்த்திருக்கிறேன். தன்னிடம் இருந்த நன்றோ தீதோ விலகிச்சென்றால் மானுடன் ஏக்கம் கொள்கிறான். ஏனெனில் அதை தன்னுடையதென்றே அவன் உணர்கிறான். எதுவாயினும் அது தன் ஆணவத்தின் ஒரு பகுதியே என ஆழத்தில் அறிந்திருக்கிறான்.”

“அந்த ஏக்கத்தையும் கடந்துவிட்டால்தான் மெய்மை அளிக்கும் விடுதலை உவகையை அளிக்கத்தொடங்கும். அது பிறிதொன்றால் மறுநிகர் செய்யப்படாத உவகை என்பதனால் கணந்தோறும் பெருகும். பெருகுந்தோறும் பெறுபவனையும் பெருகவைப்பதனால் திகட்டுவதில்லை. மூதாதையர் சொல்லைக்கொண்டு நோக்கினால் பெறுபவன் பெறுபொருளாகவே மாறுவதனால் பெறுவதென்பதே நிகழாமலாகி பெருவெளியென்று விரிந்து இருப்பும் இன்மையும் அகன்று பரம் என நின்றிருக்கும் நிலை அது.”

சீற்றத்துடன் பெண்குரங்கான விருக்ஷநந்தினி கேட்டது “பிரம்மம் மானுடனுடன் ஏன் அவ்வாறு விளையாட வேண்டும்?” பீதகர்ணி “எனக்கு புரியவில்லை. என்ன விளையாட்டு?” என்று கேட்டது. “இங்கு இத்தனை இனிய காட்டை, இன்கனிகளை, அழகிய சுனைகளை, காற்றை, ஒளியைப் படைத்து நம்மை சூழ வைத்திருக்கிறது. நாம் அதில் ஆடிக் களிக்கிறோம். உடன் நோயையும் இறப்பையும் பின்னி அனைத்தையும் மறுநிகர் செய்திருக்கிறது. மகிழ்கையில் துயரையும் நலம்கொள்கையில் நோயையும் வாழ்வில் சாவையும் எண்ணி எண்ணி நாம் நிலையழிகிறோம்.”

அதன் குரல் ஓங்கியது. “இவையனைத்திற்கும் அப்பால் இவையனைத்தும் பொருளற்றவை என்று காட்டும் ஒன்றை நிறுவி அதன் ஒரு துளி சுவை அனைவருக்கும் ஒருகணமேனும் அமையும்படி வகுத்துள்ளது. இங்கிருக்கும் நன்மை தீமைகளில் ஊசலாடி எங்கோ இருக்கும் இவைகடந்த ஒன்றை சற்றே அறிந்து முழுதடைய ஏங்கி எத்திசையும் தேடி இங்கிருந்து அங்கென முடிவிலா ஊசலாட்டத்தை அடைந்து ஒருகணமும் நிலைபெறாமல் அழியும் பொருட்டே உலகிலுள்ள உயிர்களனைத்தும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.”

“அறிவென்பது பிரம்மம் அளித்துள்ள ஒரு கொடை. அதனூடாக அறிவுகொண்டோர் தன்னை வந்தடையவேண்டுமென்று அது எண்ணுகிறது” என்றது கும்போதரன். “நீ அறியமாட்டாய், இங்குள உயிர்கள் ஒவ்வொன்றும் முற்பிறவியில் நன்மை செய்தவை. நலம் பேணி, வீரம் விளைவித்து, அறம் நின்று, தவமியற்றி, மேலும் மேலும் பிறவியெடுத்து அறிவடைந்து அகம் கூர்கொண்டு மெய்மையை சென்றடைகின்றன. பிரம்மம் பல்லாயிரம்கோடித் துளிகளாக தன்னை சிதறடித்து ஒவ்வொரு துளியையும் தன்னை நோக்கி ஈர்த்து தானென இணைத்து முடிவிலாது தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”

“இச்சொற்கள் இங்கு நின்றுவிடுவதே நல்லது. இவற்றை நாம் மீளமீளப் பேசுவதனால் பொருளொன்றுமில்லை. முதியோர் எப்போதும் இவற்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இளையோர் அவற்றை முற்றறியக் கூடுவதுமில்லை. எங்கேனும் ஒரு தலைமுறையில் முதியோர் இவற்றைக் கூறுவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றால் நம்மைப்போன்ற மரமானுடர்களும் அவர்களைப் போன்ற நிலமானுடர்களும் விடுதலைபெறுவோம்” என்றது பீதகர்ணி.

பரிமேலழகர் உரை
உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.
('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது

மு.வரதராசனார் உரை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

சாலமன் பாப்பையா உரை
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain