குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
தன்னைத் - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
காக்கின் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.
சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.
காக்க - காத்தல், பாதுகாத்தல், தடுத்தல்
காவாக்கால் - கட்டுப்படுத்தாவிட்டால்
தன்னையே - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
கொல்லும் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.
முழுப்பொருள்
தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒருவன் அவனுடைய சினத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒருவர் தன்னுடைய சினத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் அச்சினம் அவரையே வதைக்கும் / துன்பப்படுத்தும். ஏன் எனில் சினம் என்பது நெருப்பு. அது நம்முள் வெம்மையினை உமிழ்ந்துக்கொண்டே இருக்கும். அது நமது மன நலத்தை சீர் குலைக்கும் மகிழ்ச்சி சென்றுவிடும். நமது உடலுக்கும் கேடு விளைவிக்கும். கோபம் நம்மை ஒரு பதற்ற நிலையில் வைக்கும். அந்த நெருப்பு தனிவதும் கடினம். மேலும் கோபம் நம் முடிவு எடுக்கும் ஆற்றலை குலைத்து விடும். நாம் விளைவுகளை எண்ணாது தவறான முடிவுகளை எடுப்போம்.
மருத்துவ ரீதியில் பார்த்தல், இதயம், மூளை, தசைகள் உட்பட உடலின் பல பாகங்களை கோபம் தாக்கும். 2011 ஆண்டு ஆய்வின் படி கோபம் டெஸ்டோடீரோன் (testoterone) சுரப்பு அதிகரிக்க, கார்டிசோல் (cortisol ) அமிலம் குறைய காரணமாய் அமையும். கோபத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய துடிப்பு அதிகரிக்கும், அரிப்பு உண்டாகும் (tingling sensation), தசை பதைப்பு (muscle tension) அதிகமாகும். இவையெல்லாம் ஒருவரை அழிக்கும் நோய்கள்.
இல்லறத்திற்கான பொருள் :
கோபத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்தினால் பின்னாட்களில் பல நன்மைகள் விளையும். காலம் ஒன்று போல் எப்பொழுதும் இருக்காது. இன்று உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது (அல்லது பிறருக்கு இல்லை அல்லது பிறர் பலகீனமாக இருக்கிறார்) என்பதற்காக பிறரை தாக்காதே. அவரிடம் கோபப்படாதே. ஏனெனில் பிறர் பலசாலி ஆகும் பொழுது அவன் உன் மீது பாயக்கூடும்.
ராமன் கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு ஆட்சியை கொடுத்துவிட்டு பல புத்திமதிகளை (/உயர் தர்மங்களை) கூறுகிறான். அப்பொழுது ராமன் தான் செய்த தவறை வருந்தி ஒரு செய்தியை கூறுகிறான் "மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்; என்றல் சங்கையின்றி உணர்தி வாலி செய்கையால் சாலும்; இன்னும் அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் எங்களில் காண்டி அன்றே! இதனின் வேறு உறுதி உண்டோ?". ஒரு மங்கையர்க்கு செய்த தீதால் எவ்வளவு பெரிய துன்பங்கள் எல்லோருக்கும் வந்தது என்பது உட்பொருள். மேலும் "சிறியர் என்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றிங் நெறியிகந்து யானோர் தீமை இழைத்தலான் உணர்ச்சி நீண்டு குறியதாம் மேனி யாய கூனியால் குவவுத் தோளாய் வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்". பிறரை சின்னவன் என்று நினைத்து துன்பம் செய்யாதே. ஏனெனில் சிறியர் என நினைத்து நான்(நான்) ஒரு மங்கைக்கு செய்த துன்பத்தால் வந்த துன்பங்கள் அதிகம். அவள் பதிலுக்கு கொடுத்த துன்பம் நான் செய்த துன்பத்தை விட பல மடங்கு. ஆதலால் இப்படி பண்ணாதே என்கிறார் ராமன்.
கோபத்தை கடந்துவிட்டீர்கள் என்றால் நிம்மதி. இல்லையென்றால் நமக்கு நிம்மதி இருக்கவே இருக்காது. பிறருக்கு இரக்கப்பட்டு நீ கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். முதலில் நீ உனக்கு இரக்கப்படு என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் இக்கோபம் பிறரை தண்டிப்பதை விட உன்னை எதோ ஒரு நேரத்தில் தண்டித்துவிடும்.
ஔவையார் கூறுகிறார் "ஆறுவது சினம்". கோபம் வந்தால் ஆறப்பொடு. அதாவது கோபம் வந்த அதற்கு உடனே வினையாற்றாமல் ஒருவாரம் தள்ளிப்போடு. ஒரு வாரத்தில் மனம் சமநிலையை பெற்றுவிடும். நன்கு யோசித்து முடிவெடுப்பாய்.
துறவறத்திற்கான பொருள்:
துறவறத்தை ஒருவர் மேற்கொள்கிறார். அவர் வேண்டுவது வீடுபேறு. அவர் வேண்டுவது ஒரு சக்தி. அதை அவர் பலம் தவம் ஆற்றிப் பெறுகிறார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு துறவிக்கு கோபம் வந்தால் சாபம் கொடுக்கிறார். அது நிறைவேறுகிறது. விச்வாமித்ரர் பல தடவை தவம் செய்கிறார். பல தடவை கோபம் வந்து சாபம் கொடுகிறார். ஆதலால் அவர் தன் பலத்தை இழக்கிறார். ஆதலால் அவர் மறுபடியும் தவமும் செய்து அவர் ஆற்றலை நிறுவுகிறார்.
துறவறத்தில் சக்தி அடைய தன்னை வருத்தி விரதங்கள் பல இருந்து தவம் செய்ய வேண்டும். துறவியின் கோபத்தினால் இரண்டு தீமைகள் 1) சாபம் பலிக்கும் 2) ஆற்றல் குறையும். இதனால் துறவிக்கு பலனில்லை. மேலும் தீவினை செய்ததனால் அதற்கான வினைபயன் உன்னை வந்து சூழும். துறவு நிலையில் இருந்து மீண்டும் மனித நிலைக்கு வந்துவிடுவாய். ஆதலால் மனிதர்களுக்கு வரும் உலகியல் துன்பம் வரும். ஆதலால் கோபத்தை விட்டுவிடு என்கிறார் திருவள்ளுவர்.
கொல்வது என்றால் அழிவது மட்டும் பொருள் அல்ல. கடுமையாக துன்புறுத்தும், வதைக்கும் என்றும் பொருள் உண்டு.
காத்தல் என்ற சொல்லுக்கு எதிர்பார்த்தால் என்ற பொருளும் உண்டு. பிறர் சினம் கொள்ள கூடாது என்று எதிர்பார்த்தால் தானும் சினம் கொள்ள கூடாது என்ற பொருளையும் நாம் கொள்ளலாம்.
மேலும்: அஷோக் உரை
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்
”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் இப்படி ஒரு வருகிறது.
சிசுபாலனின் உள்ளம் எங்கு செயல்படுகிறது என இங்கிருந்து நாம் எண்ணி முடிவெடுக்க முடியாது என்றே நானும் உணர்கிறேன். இளைய யாதவனுக்கெதிரான சினமே அவனை இயக்குகிறது என்பது நாம் அறிந்தது. அதற்கான ஊற்றுமுகம் என்ன என்று அவனே அறிந்திருக்கமாட்டான்.
“அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.
பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது
சில கவிதைகள்
பெருமையும் கோபமும்
நேரம் தவறிக் கூவும் சேவல்கள் !
உங்கள் கல்லறை அழகுறுவது
கல்லாலும் மரத்தாலும் அல்ல!
சுயத்தைப் புதைப்பதாலேயே
- ஒரு சூஃபி கவிதை, மஸ்னவி
பொறுமை என்பது
இன்பத்தின் திறவுகோல் !
அறிவின் கையும் காலும்
அதுதான் !
இறைத்தூதர்களின்
பலமும் ஒளியும்
அதுதான் !
காற்றடித்தால் மலையாடுமா?
அடிக்கும் காற்றுக்கெல்லாம் ஆடினால்
அது வைக்கோல் !
- ஒரு சூஃபி கவிதை, மஸ்னவி
பரிமேலழகர் உரை
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.).
மணக்குடவர் உரை
ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சாலமன் பாப்பையா உரை
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
Thirukkural - Management - Managing Anger
There is a need to protect ourselves from anger. If you want to protect yourself from pain, suffering, disaster, and disappointment, contain your anger, guides Kural 305. If you do not contain your anger, your anger will contain you As a result, you will lose health, harmony, and happiness.
Keep wrath at buy if you would guard yourself;
Unchecked it kills.
There is no midway to certain actions in Me. Either you act or you do not act. But if you do not
act, you will be acted upon.
Similarly, either you control your anger or you will be controlled by your anger.
English Meaning - As I taught a kid - Rajesh
If one has to protect/save himself, then one should control his/her anger. controlling anger saves time which can be used on productive stuffs, reduces distractions, saves time, makes us stronger mentally, keeps us in harmony. Also controlling anger is essential to attain moksha
If one doesn't control his/her anger then that anger will give pain and kill him/her. Hatred/anger is a like a prison, it kills the equilibrium of happiness and harms us. Anger keeps one in a panic or anxious state. One would take decisions without thinking about consequences. Also medically speaking, anger triggers hormones responsible for stress, muscle tension which leads to diseases such as blood pressure, diabetes, etc
Questions that I ask to the kid
If you have to save/protect yourself, what should you do? What happens if one doesn't do that?
No comments:
Post a Comment