குறள் 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]
பொருள்
கொடுப்பதூஉம் - கொடுத்தல் - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.
துய்ப்பு - நுகர்ச்சி.
துய்ப்பதூஉம் - துய்த்தல் - துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.
இல்லார்க்கு - இல்லாதவர்
அடுக்கிய - அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு, வரிசை, அடுக்குச்சொல்.
அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல்.
கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.
உண்டாயினும் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்
இல் - இல்லை
முழுப்பொருள்
ஒருவருக்கு தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பிறருக்கு கொடுத்து உதவும் மனம் வேண்டும் அல்லது அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் நுகரும் மனம் வேண்டும். செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவ மனம் அல்லாதவரும் நல்வழியில் நுகராதவரும் உயிர்வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன? அத்தகையவர் உயிர்வாழ்வதாகவே கருதப்பட மாட்டார். அத்தகையவரிடம் எவ்வளவு பூர்வீக சொத்துக்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அதனால் பயன் என்ன?
மேலும் ஒரு விவசாயி தான் உழுது ஈண்ட உணவு பொருட்களையெல்லாம் தானே உண்டால் என்ன ஆகும்? வயிறு வெடித்தோ அல்லது அதீத உணவினால் நோய்வாய்ப்பட்டோ உயிர் இழப்பான். அவ்விவசாயி உழைத்ததனால் தான் உணவு விளைவிக்க முடிந்தது. ஆனால் இயற்கையும் உலகமும் அதற்கு உதவியது. ஆதலால் இவ்வுலகிற்கு தான் உழுது ஈட்டிய உணவில் தனக்கு தேவையானவற்றை நுகர்ந்து மீதம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். இல்லையேல் அவன் உயிர் வாழ்ந்தோ அல்லது சொத்து சேர்த்தோ என்ன பயன்?
செல்வம் ஈட்டுதலே பிறர்க்கு கொடுத்தலுக்கும் தான் நுகர்தலுக்கும் தான். சேமித்து சேமித்து பொருளற்றதாக ஆக்க அல்ல. செல்வம் நிலையில்லாதது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பழமொழி பாடல் இதை அழகாகச் சொல்லும்.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்
– பழமொழி 216
பொருள்
ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.).
மணக்குடவர் உரை
பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
மு.வரதராசனார் உரை
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.
No comments:
Post a Comment