Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அறத்திற்கே - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியார் - அறிய மாட்டார்கள்.; அறியாதவர்கள் 

மறத்திற்கும்  - மறம் - வீரம்; கோபம்; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம்.

அஃதே - அஃதாவது

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
அறத்திற்கு அன்பே துணை என்று மட்டும் சொல்லுவோர் அறியாதவர்கள். ஏனெனில் மறத்திற்கும் அன்பே துணையாக இருக்கும். மறம் என்றால் கோபம், பகை என்ற பொருள்களும் உண்டு. ஆதலால் உன்னிடம் ஒருவன் கோபமாக நடந்தாலோ அல்லது பகையோடு இருந்தாலோ அவரிடம் அன்பு செலுத்துவதே மருந்தாக அமையும். 

நோய் வராமல் எச்சரிக்கையை இருப்பது சாலச்சிறந்தது. ஆனால் நோய் வந்துவிட்டால், "நோயிற்கு மருந்தே துணை". "பித்தத்திற்கு இஞ்சி நல்லது" என்றால் பித்தம் நீங்க இஞ்சி நல்லது. நோய் நீங்க மருந்து உதவும். ஆதலால் மறம் (கோபம், பகை) நீங்க  அன்பு மருந்தாக உதவும்.

அன்பு செலுத்தினால் தான் பகை நீங்கும். அப்படியில்லையேல் பகை இருந்துக்கொண்டு முகத்தில் சிரிப்பும் மனதில் மகிழ்ச்சியும் நீங்கிவிடும். பகைக்கு பகை செய்தால் ஒன்றுக்கு ஒன்று என்று நீண்டுக்கொண்டுப்போகுமே தவிர முடியாது. பகையோட பிரச்சனை என்ன என்றால் எதிராளி மட்டுமல்ல தானும் நிம்மதியின்றி பகையுள்ளவறை வாழ நேரிடும்.

ஆதலால் ஒருவன் தவறு செய்தால் துவக்கத்தில் இறங்கிச்சென்று அன்பு செலுத்து. ஆனால் அவன் மாறவில்லையென்றால் அதற்கான நிவாரணம் வேறு. குறள் 469 "நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை" என்று திருவள்ளுவர் அதற்கு விடை கூறியிருக்கிறார். 

"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" என்பது ஆன்றோர் வாக்கு.  அன்பின் வழிநின்றலே அறச்செயல்கள் செய்வதற்கு துணையாகும் என்பது எல்லோரும் அறிவதே. ஆனால் அன்பின் வழிநிற்றல் அறச்செயல்களுக்கு மட்டுமே துணையென்பது அறியாதோரின் கூற்று.  அன்பினால் மறவழியோரையும் மாற்றி நல்வழியில் ஆற்றுபடுத்தக்கூடும் என்பதாலேயே, மறத்திற்கும் அன்பே துணை.

“வாய்மையே வெல்லும்”, என்ற கூற்று எல்லோரும் விரும்பும், சத்திய வாக்கு. ஆனால், எத்துணை பேர் நம்பும் வாக்கு? அதற்கு எத்தனைப் பொறுமை தேவைப்படுகிறது?  இக்கூற்றும், பகவத்கீதையில் காணும், “கடமையைச் செய் – பலனை எதிர்பாராதே”  என்பதும், அன்புக்கும் பொருந்தும். எதிர்வினை எதிர்பார்ப்போடு செய்யப்படும் எதுவும், பண்டமாற்று வணிகம்தான். அன்பைகூட எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் போதுதான், அதன் முழுவீச்சும் பிறரை சென்றடைகிறது; அதனால் பகைகொண்டோர், மற்றும் மறவாழ்வினர் மனங்களும் மாறுகிறது

‘அன்பாய் இரு ஆனால் ஏமாளியாய் இராதே’ என்ற சொல்வழக்கு ஒன்றுண்டு.  “ராமக்ருஷ்ண பரம ஹம்ஸரின்”, “ பாம்பும், துறவியும்” குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது



ஒரு வயல்வெளியில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த வழியாகப் போவோர் வருவோரை எல்லாம் அது கொத்தியது. அதனால் அந்த வழியாகச் செல்வதற்கே மக்கள் அஞ்சினர். ஒருநாள் துறவி ஒருவர் அந்த வழியில் சென்றார். அந்தப் பாம்பு அவரையும் கொத்துவதற்குச் சீறிக்கொண்டு வந்தது. அதைக் கண்டு வருந்திய துறவி இறைவனின் பெருமையை அதற்க்கு விளக்கி, "எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது" என்று அஹிம்சைத் தத்துவத்தைக் கூறி அதை நல்வழிப்படுத்தினார். பின் தன் வழியே சென்று விட்டார். 

சில வருடங்கள் சென்றன. துறவி மீண்டும் அந்த வழியாக வந்தார். தான் உபதேசித்த அந்தப் பாம்பு எப்படி இருக்கிறது என்பதைக் காண விரும்பினார். தன பற்றின் அருகே அந்தப் பாம்பு குற்றுயிரும் குலையிருமாகக் கிடந்தது. அதைப் பார்த்த துறவி மிகவும் வருந்தினார். "அடடா! ஏன் எப்படி ஆகிவிட்டாய்?" என்று அன்போடு அதனிடம் கேட்டார். அதற்கு அந்தப் பாம்பு, "நீங்கள் கூறியதையே நான் பின்பற்றினேன். யாருக்கும் துன்பம் தராமல் அமைதியாக வாழ்ந்தேன். அதனால் சிறுவர்கள் என்னைக் கல்லால் அடித்தனர். வாலைப் பிடித்துச் சுற்றித் தரையில் வீசினர். கம்பால் அடித்தனர்" என்று சொல்லி வருத்தப்பட்டது. 

பாம்பு சொன்னதைக் கேட்டதும் துறவி, "முட்டாள் பாம்பே, உன்னைக் கடிக்க வேண்டாம், யாருக்கும் துன்பம் தர வேண்டாம் என்றுதான் கூறினேன் ஒழிய, யாரிடமும் சீறக்கூடாது என்று கூறவில்லையே! நீ சீறியிருந்தால் அவர்கள் உன்னருகில் வந்திருப்பார்களா? யாரையும் கொல்லக் கூடாது. ஆனால் தற்காப்புக்காக அச்சுறுத்தலாம்" என்று கூறினார். பாம்பும் தன் தவறை உணர்ந்து கொண்டது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அற்பின் நின்றன அறங்கள்” (கம்ப.நாட்டுப் 59)


இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன.

நித்யா ஒருமுறை குருகுலம் வழியாக நடந்துகொண்டிருந்தார், கீழே சமையலறையில் யாரோ டீ போடும் வாசனை. ‘அங்கே டீ போடுகிறவன் முன்னரே தண்ணீரில் சீனியைப் போட்டுவிட்டான். டீ சுவை கெட்டுவிட்டது’ என்றார் நித்யா. சுவையறியும் மூக்கு. அவரது எல்லாப் புலன்களும் உலகச்சுவைக்காகத் திறந்திருந்தன. ஒரு நல்ல அவியல் வைக்கத்தெரியாதவனால் எப்படி அத்வைதத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று கேட்டவர் அவரது குரு.

இது ஓர் அன்றாட விஷயமாக இருக்கலாம். ஆனால் நித்யா தொடர்ந்துசென்றார்.  ‘அப்பா தன் பிள்ளைக்கு பொம்மையைக் கொடுத்து பத்திரமாக விளையாடு என்று சொல்வது போல இந்த உலகம் நமக்களிக்கப்பட்டிருக்கிறது. இதை நம் உச்சம் வரை சென்று அறிவதும் அடைவதும் நம் கடமை. இந்த உலகில் இருந்து மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் அடைவதென்பது மனிதனின் சலுகை அல்ல. மனிதனின் உரிமைகூட அல்ல. அது அவன் கடமை, பொறுப்பு.’

அடிப்படை விஷயங்களை அன்றாடவாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இருந்தும் தொடங்கலாம் என்று நித்யா சொல்வதுண்டு. எதை நாம் ஆழமாக வினவிக்கொண்டாலும் அது அடிப்படை வினாவாக ஆகும். ஓர் அடிப்படை வினாவை எழுப்பிக்கொள்வது எப்படி? நித்யா அதை எப்படிச்செய்வார்? அவரது அருகிருந்து அதை நான் கவனித்திருக்கிறேன். அதுவே நான் அவரிடம் பெற்ற கல்வி.

நித்யா அந்தச் சொல்லையே முதலில் கவனிப்பார். அதுதான் ஆணிவேர். நாம் சாதாரணமாக ஒன்றைச் சிந்திக்கும்போது அதன் சமகால, அன்றாடப் புழக்கத்தைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்வோம். அறம் என்ற சொல்லுக்கு இன்று இங்கே என்ன அர்த்தம் என்பதே நம் கேள்வியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப்போனால் அதன் வரலாற்றுப்புலம் சார்ந்து யோசிப்போம். வரலாறென்பது நம் கண்ணுக்கெட்டியதூரம் வரைதான். மொழி அதற்கும் அப்பால் செல்கிறது. அடிவேர் வரை செல்கிறது. ஆகவேதான் தத்துவத்தில் மொழியை எப்போதும் சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்கிறார்கள்.

அது ரஸ்ஸலின் வழி. இந்திய ஞானமரபில் நெடுங்காலமாக மீமாம்சகர்கள் அதையே கடைப்பிடித்தனர். அதற்கு வியாகரணம், சந்தஸ் என்னும் இரு முறைகளை வைத்திருந்தனர். இலக்கணம், ஒலியமைதி. ஒரு அறம் என்ற உருவகம் ஒரு ‘பேக்கேஜ்’. அதில் அறம் என்னும் சமூக அமைப்பு, சமூக ஆசாரம், சமூக நம்பிக்கை ஆகியவை உள்ளன. அவை எல்லாம் அச்சொல்லில் அடங்கியிருக்கின்றன. அச்சொல் அவற்றைக் கட்டும் பொட்டலமல்ல. அந்தக் கருதுகோள் ஒரு மரம் என்றால் அதன் விதை அது.

‘இவ்ளோ பெரிய விமானத்துக்கு எப்டிடா பெயிண்டடிப்பாங்க?’ என்று ஒரு பைத்தியம் கேட்டபோது ‘மேலே போறப்ப சின்னதாயிடும்ல. அப்ப அடிச்சிருவாங்க ‘ என இன்னொரு பைத்தியம் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். எதுவும் கொஞ்சம் மேலே, கொஞ்சம் தூரத்தில் சென்றால் சிறிதாகிவிடுகிறது. எளிமையாகக் கையாளக்கூடியதாக ஆகிவிடுகிறது. காலத்தில் பின்னகரும்போது விடைகள் கைக்கடக்கமாக ஆகிவிடுகின்றன. காலத்தில் பின்னகர சொல் ஒன்றே சுட்டுவழி.

சொல் என்பது சிலை, பொருள் என்பது தெய்வம். அளவிடமுடியாத ஒன்று அளவிடக்கூடியதாக நம்முன் அமர்ந்திருக்கிறது. காளிதாசன் சொன்னார் ‘சொல்லும்பொருளும் போல அமைந்தவர்கள் பார்வதிபரமேஸ்வரர்’ என. பிரிக்கமுடியாதவர்கள். ஒருவருக்கொருவர் ஊக்கவிசையானவர்கள்.

நித்யாவின் வழிமுறைப்படி நானும் அறம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்கிறேன். எந்தக் காலத்தில் இச்சொல் தமிழில் புழக்கத்தில் வந்தது? மொழியாராய்ச்சியில் அச்சொல்லை நோக்கிக் கேட்கவேண்டிய முதல்வினா அது காரணப்பெயரா இடுகுறிப்பெயரா என்பதே. காரணப்பெயர் என்றால் அது பின்னாளில் இங்கே வந்தது.

உதாரணமாக, புரட்சி. பாரதி உருவாக்கிய சொல்லாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல் கிளர்ச்சிகளில் இருந்து பிறந்தது. முழுமையான மாற்றம், ஒட்டுமொத்தமான மாற்றம், தலைகீழான மாற்றம் என்பதைச் சுட்டுகிறது. புரள்வது என்ற சொல்லின் நீட்சியாக வந்தது. நாம் படிப்படியான மாற்றத்தையே அறிந்திருக்கிறோம். புரட்சி நமக்கு ஒரு புதிய செய்தியே.

இடுகுறிச்சொற்கள் அக்கருத்துக்கு இடப்பட்ட ஒலிக்குறிப்புகள் மட்டுமே. ஒரு குழந்தை உடலும் உயிருமாகப் பிறப்பதுபோலக் கருத்து சொல்லும் பொருளுமாகவே மானுட மனதில் உருவாகிறது. அதற்கு சொல்லால் பெயரிடப்படுவதில்லை. அந்தச் சொல்லே அதைக் கொண்டு செல்கிறது, விரியச்செய்கிறது.

இடுகுறிச்சொற்களை ஆராயும்போது சிறந்த வழி என்பது அச்சொல்லின் அருகே உள்ள சொற்களை கவனிப்பது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி அதற்கு மிகச்சிறந்த சாதனம். அதன் அகரவரிசை நமக்கு ஒரு சொல் கூடவே கொண்டுவரும் பிற சொற்களை சுட்டிக்காட்டி அபாரமான மனவெளிச்சங்களை அளிக்கிறது.

அறம் என்ற சொல்லின் அருகே அமர்ந்த சொல் அறுதல். அதுவே அதன் மொழிமூலமாக இருக்கலாம். அற்றம் என்றால் இறுதி. அற்றுபடி என்றால் திட்டவட்டம். அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறைசெய்து சொல்லுதல், கடைசியாகச் சொல்லுதல் என்ற தொனியில் இச்சொல் பிறந்திருக்கலாம்.

அறம்பாடுதல் என்கிறோம். பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்று நம் தொன்ம மரபு சொல்கிறது. அங்கே வரும் அறம் என்பது தர்மம் அல்ல. எதிக்ஸ் அல்ல. அது இறுதிதான். அறப்பாடுதல், அறும்படி பாடுதல். அற்றம் வரும்படி பாடுதலே அங்கே அறமாக சொல்லப்படுகிறது.

அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.

நாம் நம் மொழிமரபில் அறம் என்ற சொல்லின் பிறப்புச்சூழலைப் பார்க்கையில் சங்க காலம் கண்ணுக்கு முன்விரிகிறது. புறநானூற்றுக்காலம் என்பது பெருங்குடி மன்னர்களான மூவேந்தர் சிறுகுடிமன்னர்களான வேளிர்களை, கடல்சேர்ப்பர்களை, குறவமன்னர்களை அழித்தொழித்துப் பேரரசுகளை உருவாக்கும் போர்ச்சூழல் என்பதுதான் வரலாறு. சங்கம் மருவியகாலத்தில் முடியுடை மூவேந்தர் மட்டுமே எஞ்சுகிறார்கள். அந்தப்போர்ச்சூழல் எல்லாவகை வன்முறையையும் அனுமதிக்கிறது.

எரிபரந்தெடுத்தல் என்று சங்க இலக்கியம் பேசும் போரழிவுகள் கொடூரமானவை. எதிரிநாட்டுப்பெண்கள் அறுத்தெறிந்த தாலிகள் சாலைகளில் மலையாகக் குவிகின்றன. புகை நகரை மூட பெண்களின் கண்ணீரில் யானைக்கால் வழுக்குகிறது. எதிரிநாட்டு ஊருணிகளை யானை வைத்து அழிக்கிறார்கள். வீடுகளை எரிக்கிறார்கள். எதிரி மன்னனின் பல்லைக்கொண்டுவந்து சுவரில் பதிக்கிறார்கள்.எல்லாமே அறம்தான்.

இன்றைய நம் அறவுணர்ச்சி கூசுகிறது. ஆனால் அறம் என்பது மெல்லமெல்ல சமூகத்தால் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு கருத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அறம் என்ற கருத்து ஒரு சிறு மக்கள் குழுவில் உருவாகிறது. அது அவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒரு குடும்பத்துக்குள் உருவாகும்போது அது குடும்ப அறம். குடும்பம் குலமாக ஆகும்போது அது குல அறம். குலம் நாடாக ஆகும்போது அது அரசியல் அறம். நாடுகள் மானுடமாகும்போது மானுட அறம்.

சங்ககாலத்தில் நாம் காண்பது குல அறங்கள் அரசியலறங்களாகத் திரளும் ஒரு பெருநிகழ்வை. போர்வெறியைக் கொண்டாடக்கூடிய, கொலையை கொள்ளையை அனுமதிக்கக் கூடிய, சங்ககாலத் தமிழ்ச்சமூகம் கொஞ்சம்கூட அனுமதிக்காத ஒன்றுண்டு. நன்னன் என்பவன் செய்த பெண்கொலை. ஒரே ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன் என்ற குறுநில மன்னனைப் புலவர்கள் மீண்டும் மீண்டும் சாபமிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம். தன் மக்களாலேயே நன்னன் ஒதுக்கப்பட்டான். ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே வரலாற்றில் அறியப்பட்டான்.

அது மானுட அறம். என்னதான் இருந்தாலும் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயம் அது என தமிழ்ச்சமூகம் நினைத்தது. அவ்வாறு ஒரு சமூகம் நினைப்பவற்றின் அளவு பெருகப்பெருக அச்சமூகம் மானுட அறம்நோக்கி நகர்கிறது. கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்.சங்கப்பாடல்களில் பொருண்மொழிக்காஞ்சியில் மானுட அறம் நோக்கிய தேடலை, விவாதத்தைக் காண்கிறோம். ஆனால் சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அந்த அறத்தை வந்தடைந்திருப்பதைக் காணலாம் . அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே.

அந்த அறம் ஒரு பலிவாங்கும் போர்க்கடவுளாக உருவாகி வந்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரக் காலகட்டத்தில் பெருமன்னர்கள் உருவாகிவிட்டிருந்தனர். அவர்கள் கட்டற்ற அதிகாரமுள்ளவர்கள். குறுங்குடிமன்னர்கள் குல அறத்தால், ஆசாரமரியாதைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் பெருங்குடிமன்னனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவன் தவறுசெய்தால் தட்டிக்கேட்பது எது? அதுவே அறம். மானுட அறம். கூற்றாக அது வந்து வாசலில் நிற்கும் என்கிறார் இளங்கோ.

அதையே வள்ளுவர் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றார். அந்த அறம் நோக்கி நம் சமூகம் நகர்ந்ததை நாம் வள்ளுவர் வழியாகப் பார்க்கிறோம். அறன் வலியுறுத்தல் என்று வள்ளுவர் சொல்வது மானுட அறத்தையே. இல்லறம் துறவறம் என்னும் சிறிய அறங்களுக்கு அப்பால் கோபுர உச்சிபோல மானுட அறம் எழுகிறது.

அறத்துக்கு மாற்றாக மறத்தைக் கூறும் ஒரு வழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால் சங்ககாலத்தில் மறம் உயர்ந்த விழுமியமாகவே இருந்தது. அது அறத்தின் எதிர்மறைச்சொல் அல்ல. மறுத்தல், மறுத்து நிற்றல் என்பதே மறம். அது வன்முறை என்றும் ஆகவே அறத்துக்கு எதிரானது என்றும் கண்டவர் வள்ளுவர். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை என அந்த எதிரீட்டை அவர்தான் உருவாக்கினார். அது அவரது சமண அறம்.

அந்தத் தேடலின் உச்சியில் கம்பராமாயணம் நிகழ்ந்தது. அறத்தின் மூர்த்தியான் என கம்பன் ராமனைச் சொல்கிறான். ராமனின் குணம் அல்ல அறம். ராமன் அறத்தின் உடல்வடிவம். அறம் ராமனைவிட மேலானது. தருமம் பின் இரங்கி ஏக என்று சொல்லும்போது கம்பன் அதை ஒரு தனி இருப்பாக, தனி ஆளுமையாக உருவகிக்கிறான். அதுவே நம் மரபின் உச்சகட்ட அறத்தரிசனம்.

நாம் நினைப்பதுபோல நம் மன்னர்கள் முற்றதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் சான்றோர் அவைகள் இருந்தன. சிற்றரசர்சபைகள் இருந்தன. தமிழகத்தின் மாபெரும் முடிமன்னனாகிய ராஜராஜனே சிற்றரசர் சபைக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நீங்கள் பொன்னியின் செல்வனிலேயே வாசிக்கலாம். கொடும்பாளூர் வேளார்கள், பழுவேட்டரையர்கள் என அந்த சபையில் பல சிற்றரசர்கள் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து மன்னனைத் தலைவனாக அங்கீகரிக்கவேண்டும்.அவ்வாறு அங்கீகாரம் பெற்றவனே மன்னன்.ஆகவேதான் அவனுக்குக் குலசேகரன் — குலங்களைத் தொகுத்தவன்– என்ற அடைமொழி உள்ளது. குல அறத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பழைய மன்னன் மானுட அறத்தால் ஆளப்படுபவனாக ஆவதையே நாம் இலக்கியங்களில் காண்கிறோம்.

என் அண்ணா பொதுவாகக் குடும்பத்திற்குள் உதவிகள் செய்யக்கூடியவனாக இருந்தார். என் அம்மாவுக்குத் தோழியாக இருந்த ஒரு பெண்மணிக்கு அவர் உதவிகள் செய்வதுண்டு. படுகிழவி. ஒருமுறை அண்ணா சென்றபோது அவள் பழைய சாக்கைப் போர்த்திக்கொண்டு இருப்பதைக் கண்டார். உடனே ஒரு கம்பிளியை வாங்கிக்கொடுத்தார். அடுத்தமுறை போனபோது கிழவி அதே சாக்கைப் போர்த்திக்கொண்டிருந்தாள். ‘என் மூத்தமகனின் பிள்ளை தரையிலே கிடக்கிறது. அதற்குக் கொடுத்துவிட்டேன்’ என்றாளாம்.

அண்ணா இன்னொரு கம்பிளி வாங்கிக்கொடுத்தார். ஆனால் மறுமுறை செல்லும்போது அதுவும் இல்லை. ‘மகளுக்குக் கம்பிளி இல்லை. அவளுக்குக் கொடுத்தேன்’ மூன்றாம் முறையும் கம்பிளி வாங்கிக்கொடுத்தார். அதுவும் ஒரே வாரத்தில் ஒரு பேரனுக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா சொன்னார் ‘ஆயிரம் முறை வாங்கிக்கொடுத்தாலும் இப்படித்தான் நடக்கும்…பிறந்தநாள் முதல் தனக்கென எதையும் தேடாத வாழ்க்கை…குழந்தையாக இருக்கும்போதே குழந்தை வளர்க்க ஆரம்பித்திருப்பாள்…அந்த நாள் முதல் அன்னைதான். கொடுத்துத்தான் பழக்கம்.’

அது குல அறம். தன் குலத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை. அதற்குமேல் ஓர் அறம் உண்டு. அதுவே மானுட அறம். என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.

அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ் வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில் தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில் வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப் பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.

நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். ‘எப்டி நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?’ என்றார் அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்.

நண்பர்களே, மானுட வரலாறென்பது அறத்தின் பரிணாம வளர்ச்சிதான்.

பரிமேலழகர் உரை
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

மு.வரதராசனார் உரை
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்: ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அறமும் வீரமும் அன்பின் விளைவே.

No comments:

Post a Comment