Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

குறள் 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வேண்டிய - வேண்டுதல் -  விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டியாங்கு - விரும்பியவாறு

எய்தலான் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம்; இம்மை; விரைவு; புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது.

முயலப் - முயலுதல் - காரியம் முற்றுப்பெறும் பொருட்டு ஊக்கத்தோடு செய்தல்; வருந்துதல்; தொடங்குதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
முன் குறிப்பு: (@14:58 https://youtu.be/iQnyTQAmvs4?t=898) இன்று (16-feb-2023) எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் ஒரு நேர்காணல் காணொளியில் இன்றைய வாழ்வில் எப்படி தன்னை கண்டடையும் முன்பே 17 வயதில் பொறியில் கல்லூரியில் சேர்ந்து 21 வேலைக்கு சென்று 24 வயதில் EMI யில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பேசியிருப்பார். அப்பொழுது sense of accomplishment எனப்படும் எய்தும் நிறைவை பற்றி பேசியிருப்பார். ஒரு நிமிடம் என்னை நிமிரச் செய்தது நாம் எதை எய்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கண்டடைவது எவ்வளவு முக்கியம் என்பதை மேலும் ஒருமுறை வேறு ஒரு கண்ணோட்டத்தில் விளங்கிற்று.

துறவறத்தில் ஒருவர் வேண்டுவது  வீடுபேறு எனப்படும். அதனை வேண்டியவர் அதற்கு முயலவேண்டும். வெறுமென புறவயமாக துறவுக்கோலம் பூண்டால் போதாது. துறவுக்கோலம் பூணுவதால் ஒருவருக்கு துறவுக்கான தகுதி வந்துவிடாது. ஆதலால் வீடுபேறு வேண்டியவர் அதனை அடைய அதற்கு தேவையானவற்றை ஒரு தவம் போல் இடைவிடாது செய்து முயல வேண்டும்.

செயலாற்றும் பொழுது எய்து என்கிறார். அதாவது எய்யப்பட்ட அம்புபோல சென்றுகொண்டே இரு என்கிறார் திருவள்ளுவர். எய்யப்பட்ட அம்பு திரும்ப வராது. இலக்கை நோக்கி சென்றுக்கொண்டே இருக்கும். இலக்கை அடையும் வரை அம்பை எய்திக்கொண்டே இரு வில்லை தாழ்த்தாதே என்கிறார். 

உனக்கு ஒன்னு வேண்டியப்படி வேணுமா, செய்க தவம் என்று ஆணையிடுகிறார் திருவள்ளுவர். செயலில் ஈடுபடு. திட்டமிட்றேன், நாளைக்கு செய்யுறேன், காலம் வரும்போது பாத்துக்கலாம் என்று இல்லாமல், செய்க தவம் என்கிறார் திருவள்ளுவர். 

வேண்டிய வேண்டியாக என்பதையும் எய்தல் என்ற வார்த்தையையும் கீழ்க்காணும் குறளுடன் தொடர்பு படுத்திப்பார்த்தால் நாம் ஒன்றை அடையவேண்டும் என்றால் நமது குறிக்கொள்களில் எவ்வளவு தெளிவாகவும் திண்ணமாகவும் இருத்தல் அவசியம் என்பதை உணரலாம்

அடிப்படையில் தவம் என்பது குவிதல். தவம் எதில் குவிகிறதோ அது எல்லையற்ற விசை கொள்கிறது. அவ்வாறு தவத்தை செய்தால் நாம் வேண்டியவற்றை அடையலாம்.

தவம் என்பது இடைவிடாது செய்தல். ஒரு நாள் நோன்பு இருந்துவிட்டு மறுநாள் தவறுகள் செய்து மறுபடியும் அடுத்த நாள் நோன்பு என்ற சுழற்சியில் செய்வேதெல்லாம் தவமாகாது. தொடர்ந்து செய்வதே தவம். அதனால் தான் செய்தவம் ஈண்டு முயல வேண்டும் என்கிறார். இல்லையென்றால் வெறுமனே முயல வேண்டும் என்றிருக்கலாம்.

இக்குறள் இல்லறத்தில் உலகியலில் வாழ்ந்துகொண்டு இருப்போருக்கும் பொருந்தும். அவர்கள் வாழ்வில் விரும்பும் பண்புகள், புகழ், உயர்வு (ஏன் செல்வம் கூட) வேண்டி, அதற்கான தவத்தை (அதற்கு தேவையான செயல்களை) இடைவிடாது தொடர்ந்து செய்தல் வேண்டும்.

இக்குறள்களில் ஓர் உள்ளுரைப் பொருளும் இருக்கிறது. தவம் என்பது புலன்களை வெல்லும் சுயக்கட்டுப்பாடு, மற்றும் கூரிய குவிந்த ஒருமுக எண்ணம் நிறைந்த செயற்பாடு.  இவை இரண்டுமே இன்றியமையாத மூலக்கூறுகள், ஒருவரின் வாழ்க்கைச் சாதனைகளுக்கும், அவர் வேண்டியன கிடைக்கப்பெறுதற்கும்! கலைகள், அறிவியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் பலர் அடைந்துகொண்டிருக்கும் வெற்றிகளையும் சாதனைகளையும் நம் வாழ்நாளிலேயே நாம் பார்க்கிறோம். அவையெல்லாம் அத்தனிமனிதர்களின் ஆழ்ந்த தவங்களே, அவற்றின் பயன்களே. அவர்கள் ஓரிடத்தில் இருந்து, மூச்சையடக்கி, ஆழ்நிலை தியானம் செய்து அவற்றை சாதிக்கவில்லை. ஒருமுக மனத்தோடும், சிந்தனையோடும் தாம் எடுத்துக்கொண்ட துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாலேயே அவர்களால் உயரங்களைத் தொடமுடிகிறது. தவத்தின் பரிசாக அவர்கள் கருதுவதும் அவைதான்.

இலக்கியங்கள் பலவற்றிலும் தவம் வேண்டியதைத் தருவதையும், அதை அறிவுடையோர் முயன்று ஆற்றுவர் என்பதையும் காணலாம்.

செய்கதவம்!
செய்கதவம்! நெஞ்சே!
தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் 
வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை
அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு
--- மகாகவி பாரதி

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“தவம்செய் மாக்கள் தம்முடன் பிடாஅது
அதன்பயம் எய்திய அளவைமான...
வேண்டுவ முகந்துகொண்டு” (பொருந 91-128)

“அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சிபோல்” (கலி 30:1)

“நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி” (பழமொழி 150)
“முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ” (பழமொழி 312)

“பெருந்தவம் உள்வழி விரும்புபு செல்லும்
பொருளும் போகமும் புகழும் போல” (பெருங் 2.8:126-7)

“ஒருமுழமும் சேறலில ரேனும்பொரு ளூர்க்கே
வரும்வழி வினாயுழந்து வாழ்கதவம் மாதோ” (சீவக.2556)

“விழுப்பொருள் பரவை ஞாலம் நோற்பவர்க் குரிய வாகும்” (சீவக.2986)

“வேண்டிய விளைத்துக் கொள்ளும் விழுத்தவம் விளைத்து வந்தான்” (சூளா.சுயம் 113)

“தவமொக்கும் நலம்பயப்பில்” (கம்ப.அரசியல்.4)

“வேண்டின வேண்டினர்க் களிக்கும் மெய்த்தவம்” (கம்ப.அகத்திய 8)

“சொன்னான் நிருதர்க்கிறை அம்மொழி சொல்ல லோடும்
அந்நாளின் நிரம்பிய அம்மதி ஆண்டோர் வேலை
முந்நாளின் இளம்பிறை யாகி முளைத்த தென்றால்
எந்நாளும் அருந்தவ மன்றி இயற்ற லாமோ” (கம்ப.மாரீசன் 133)

“கூட்டமொத் திருந்த வீரர் குறித்ததோர் பொருட்கு முன்னாள்
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்த தொத்தார்” (கம்ப.மராமர 60)

“மரம டங்கலும் கற்பகம் மனையெலாம் கனகம்
அரம டந்தையர் சிலதிய அரக்கியர்க் கமரர்
உரம டங்கிவந் துழையரா யுழல்பவர் ஒருவர்
தரம டங்குவ தன்றிது தவம்செய்த தவமால்  (கம்ப.ஊர்தேடு 19)

“தவநெறி அருளெமக்கே” (சம்பந்தர்.புகலி 3)
“உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே” (சுந்தரர். துறையூர் 1-10)

அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!

வேண்டுதலே மானுடனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. வேண்டுதலினூடாக மானுடம் வளர்ந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் பல்லாயிரம் தலைமுறை துயர்களால், விழைவுகளால், தனிமையால் களிம்பு கொண்டிருக்கிறது. இளவரசே, வேதச்சொல்கூட மானுடக்களிம்பு கொண்டதே. சொல்லற்ற வேண்டுதல் ஒன்றால் மட்டுமே நம்மால் அத்தனை அருகில் செல்லமுடியும்.”

“அதை நீங்கள் உணர்ந்தால் இங்குள்ள ஒவ்வொரு உயிரும் தங்கள் இருப்பால் வேண்டிக்கொண்டிருப்பதை காண்பீர்கள். காலையொளியில் மரச்சில்லையில் அமர்ந்திருக்கும் குருவி, புல்நுனியில் ஆடும் விட்டில், முள்முனையில் திரண்டு வரும் பனித்துளி அனைத்தும் ஒற்றைப்பெரும் வேண்டுதல் ஒன்றை தாங்களும் கொண்டுள்ளன. அவ்வேண்டுதலின் ஒரு பகுதியென ஆவதே நாம் இயற்றவேண்டிய தவம். நமக்கென, குடிக்கென, குலத்திற்கென வேண்டுவது இழிவு. மானுடத்திற்கென, அறத்திற்கென வேண்டிக்கொள்வதும் இழிவே. வேண்டுதல் எதற்காகவும் நிகழலாகாது. அது ஒரு நிலையென நம்மில் கைகூடிவிடவேண்டும்” என்றார் கார்க்கியாயனர்.

“அரிதுதான். ஆனால் அதைப் பயில்வது எளிது. வேண்டிக்கொள்க! ஒவ்வொரு முறை வேண்டுகையிலும் உங்களில் எழும் சொற்களை உள்ளிருந்து விலக்குக! அச்சொற்கள் ஏந்திய விழைவும் துயரும் உடன்விலகுவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம்.” 



ஞானமருளப்பட வேண்டும் என்றால் அனைத்து வகையான பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும்.எளிய மந்திர சித்திக்கே மண் பொன் பெண் ஆகிய பரிசோதனைகளை சந்திக்க வேண்டும் என்று சித்த மரபு கூறும்.மகாலிங்கம் விரும்புவதோ இருப்பதிலேயே மிகப் பெரியது.அதற்கான பரிசோதனைகளை தான் தாங்க முடியுமா என்பதற்கான எந்த தொலைநோக்கும் இல்லாமல் வேண்டுதலை மட்டும் வைத்து விடுகிறான்.

இந்த விஷயத்தில் நானும் மகாலிங்கமாக இருந்திருக்கிறேன்.கடவுளிடம் எதையும் வேண்டுவதற்கு முன்பு அது கிடைப்பதால் நம் இயல்பு வாழ்க்கையென இருப்பது பாதிக்கப்படுமா என்றெல்லாம் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அப்போது பெரிதாக நம் ஆணவத்திற்குத் தோன்றுவதை வேண்டுதலாக வைப்பது.பின்னர் அந்த வேண்டுதலுக்குரிய பலன் நம்மை அடையும்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட அதற்காக இயல்பு வாழ்க்கையினைக் கொடு என்று மீண்டும் சென்று வேண்டுதல் வைப்பது.அதனால் முதலில் இருந்த நிலையினைக் காட்டிலும் மாறாகச் சென்றதற்கு தன் கோரிக்கையே காரணம் என்று அறியாமல் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே அலைபாய்வது.இத்தவறினை நான் செய்திருக்கிறேன்.ஆகவே மகாலிங்கத்தின் செயலினை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

நன்றாகத் தொழில் நடந்து கொண்டிருக்கும்போது மகாலிங்கம் வேண்டுவது குருவாக வந்து முருகன் ஞானம் அருள வேண்டும் என்பது.முருகன் அவனுக்குள் வந்து விட்டார்.யாருக்கு ஞானமருளப்பட வேண்டும் என்றால் அவன் இங்கு பெரிதென எண்ணும் அனைத்தையும் அவனே முழுமனதுடன் துறக்கவேண்டும் அல்லது அவைகள் இயல்பாக அவனை விட்டு விலகிச் செல்லும் சூழல் அமைய வேண்டும். மகாலிங்கம் வணிகம் செய்வதால் பெருஞ்செல்வனாக மாறி அதைத் துறக்க வேண்டும் அல்லது இழப்பின் மூலம் இங்கு அவனைப் பற்றி நிறுத்தியிருப்பவைகள் அனைத்தும் களையப்படவேண்டும். அதுதான் மகாலிங்கத்தின் வேண்டுதலின்படி நடக்கப்படவேண்டியது.கூடவே அவனுடைய அனைத்துப் பற்றின் மீதான சோதனைகளும் ஆரம்பிக்கப்படவேண்டியது.

அதன் முதல்படி ஆரம்பிக்கும்போதே மகாலிங்கத்தினால் தாங்க இயலாமல் அக்கொடுமையிலிருந்து என்னை மீட்டெடு என்ற அடுத்த கோரிக்கையை ஆரம்பித்துவிடுகிறான்.

பரிமேலழகர் உரை
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

சாலமன் பாப்பையா உரை
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செயபவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும். 

English Meaning - As I taught a kid - Rajesh
If you want a thing like the way you desired or targeted or thought, aim for 100% and DO THE WORK like a penance with single minded focus without any distractions. If you do the penance, you would yield your results

Questions that I ask to the kid
If you want something (if you want to achieve something), what to do? (Tapas)

No comments:

Post a Comment