Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

உரவு - Strength, force, firmness, hardness, வலி
உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons)

இழுக்கத்தின் - இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

படு - (வி)படுத்துக்கொள்; விழு.

பாக்கு -  அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும்வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பாக்குக்குப்பதிலாகப்பயன்படும்பட்டையையுடையஒருசெடிவகை.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள் 
இக்குறளுக்கு எனக்கு முதலில் புரிந்துக்கொண்ட பொருள் ”முழுப்பொருள் 2” எழுதப்பட்டது தான். நான் பின்நாட்களில் மறுவாசிப்பு செய்யும் பொழுது எனக்கு ”முழுப்பொருள் 1” புலப்பட்டது. அது ஏன் என்று முழுப்பொருளில் விளக்குகிறேன்.

இரண்டு பொருள்களை கூறியுள்ளேன் என்றாலும், இரண்டு பொருள்களும் பொருந்தும். முழுப்பொருள் சற்று வேறுமாதிரியான பார்வை. 

முழுப்பொருள் 1)
வாழ்வின் விழுமியமாக கொண்டு ஒழுக்கதை நீங்காது பின்பற்றி வாழ்வோர் மனவலிமை அடைவார்கள். அந்த மனவலிமையே  / ஆத்மசக்தியே (inner strength) அவர்களை மேலும் மேலும் ஒழுக்கமாய் வாழச்செய்யும். அதுவே ஒழுக்கத்தை பேணாதவர்கள் துன்பத்தை அடைவர். 

ஒரு செயலில் /தொழிலில் ஒழுக்கமாய் இருப்பவர்கள் அதில் வலிமையடைகிறார்கள். பிற்காலத்தில் அதில் மேன்மையடைகிறார்கள். வலிமையானவர்கள் ஒழுக்கமாய் இருப்பது இரண்டாவது பட்சம் தான்.

மனவலிமை உள்ளவர்கள் தானே ஒழுக்கத்தை பின்பற்ற முடியும் என்று நாம் கேட்கலாம். ஆனால் யோசித்துப்பார்த்தால், மனவலிமை வளர்வதே சிறுவயது முதல் ஒருவர் பின்பற்றும் ஒழுக்கத்தால் வளர்வது என்பதை உணரலாம்.  மேலும் ”நன்றிக்கு (நன்மைக்கு) வித்தாகும் நல்லொழுக்கம்” என்று பின்னர் இவ்வதிகாரத்தில் ஒரு குறளிலும் கூறியுள்ளார் திருவள்ளுவர். மனவலிமை என்னும் நன்மைக்கு வித்தாக அமைவதே நல்லொழுக்கம் தான். 

மேலும் மனவலிமை என்பது எல்லோரும் பிறப்பிலேயே பெற்று வருவதா என்று தெரிவதில்லை. அறிவைப் போன்று அதுவும் வளர்த்தெடுக்ககூடிய ஒன்றே என்று எனக்கு தோன்றுகிறது. அந்த மனவலிமை வளர்க்கும் வழி ஒழுக்கம் என்று இக்குறள்வாயிலாக உணர்கிறேன்.

ஒருவரின் ஆத்மசக்தி என்பது பூஜை செய்வதாலும், உடலை பேணுவதாலும் மட்டும் வந்துவிடாது. ஒருவரின் ஆத்மசக்தி என்பது ஒருவர் பின்பற்றும் ஒழுக்கத்தில் இருந்து வருகிறது.  ஒருவர் ஆத்மசக்தி என்னும் வலிமையை தான் பின்பற்றும் ஒழுக்கத்தில் இருந்தே பின்பற்றுகிறார். 

எழுத்தாளர் க.நா.சுப்ரமணியன் அவர்கள் பொய்த்தேவு என்னும் நாவலில் மைய கதாபாத்திரமான சோமு மற்றும் துணை கதாபாத்திரமான சாம்பமூர்த்தி என்னும் இரண்டு கதாபத்திரங்கள் வரும். அவர்களை பற்றிய சிறு குறிப்பு இதோ

மிக அதிகமாக உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல.  சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

மேற்சொன்ன குறிப்புகளை படித்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒருவரின் ஆத்மபலம் ஒருவரை ஒழுக்கம் தவறும் பொழுது அதில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்தும். ஆனால் அந்த ஆதம்பலமே ஒருவர் பல காலம் கடைப்பிடித்த ஒழுக்கத்தில் இருந்து பெற்றதாகும். அதாவது நமது முதல் நமக்கு இலாபத்தை தரும். நாம் தோல்வியுரும் பொழுது அந்த இலாபமே நமக்கு தோள்கொடுத்து நம்மை தோல்வியில் இருந்து மீள உதவும். ஆனால் அதற்கு முதல் தேவை. அதாவது ஒழுக்கம் தேவை.

ஆதலால் எவ்வளவு இளமையில் ஒழுக்கத்தைப் பேணி ஆதம்பலத்தை வளர்க்கிறோமோ அவ்வளவு நல்லது நமக்கு. ஆனால் ஒருவர் எந்த ஒரு காலத்தில் ஒழுக்கத்தை பின்பற்ற தொடங்கினால் அதற்கான பலனை அவர் நிச்சயம் அறுவடை செய்யமுடியும். 

(ஒரு சிறிய உதாரணம்: பலர் ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால் சபரிமலைக்கு ஒரு மண்டலத்துக்கு விரதம் இருப்பர். சாதாரணமாக ஒரு பழக்கத்தை விடும்பொழுது மனதில் பல அல்லல்கள் இருக்கும். ஆனால் ஒரு சபரிமலை விரதம் என்னும் பொழுது நமக்கு ஒழுக்கம் இயற்கையாய் வந்துவிடுகிறது. அதுவும், சிறுவயது முதல் சபரிமலைக்கு சென்றுபவர்கள், தங்கள் வாழ்வில் எப்பொழுதாவது வழி தவறினால், ஐயப்பனுக்கு மாலைப்போட்டால், நாம் அந்த 42 நாட்களில் தங்களை மறுபடியும் நேர்வழியில் எளிதாக செலுத்துக்கொள்வதை காண முடியும். அதுவே ஒழுக்கத்தின் வலிமை. மனம் ஐம்புலன்களையும் அடக்கி நற்சிந்தனைகளில் கவனம் குவிவதின் பலன். அம்மீட்சி ஒழுக்கத்தை தவிர வேறு ஏதும் தர முடியாது)

ஒழுக்கமுடையார்க்கு 


ஒழுக்கமில்லாதவருக்கு


முழுப்பொருள் 2)

நம்மிடம் ஒழுக்கம் குறைந்தால் நமக்கு துன்பம் ஏற்படும் நமக்கு இழுக்கு வரும் நமக்கு தளர்வு உண்டாகும் என்பதனை மெய்யாக உணர்ந்தறிந்தோர் அதற்கான மனவலிமையையும் கொண்டார் என்றால் அவர் ஒழுக்கத்தில் இருந்து தவறாது இருக்க கடினமாக உழைப்பார். அவர் ஒழுக்கத்தில் இருந்து தவறமாட்டார். அதற்கான நற்பலனையும் அனுபவிப்பார்.

பொதுவாக மனிதன் நல்ல உடை அணிந்து பிறரைவிட உயர்வானவன் என்று நினைத்துக்கொள்வான். ஒரு பரிசு கொடுத்தால் கூட தான் தான் சிறந்த பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைப்பான். எதிலும் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் இல்லை என்று சொல்ல யாருமில்லை. அதுவே யதார்த்தம்.

ஒழுக்கம் குறைந்தால் இழிவான குலத்தை சேர்ந்தவனாய் கருதப்படுவர். ஆதலால் அந்த அவலம் வரக்கூடாது என்பதற்காக நெஞ்சில் உரம் இருப்பவர்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகமாட்டார்கள்.

எல்லோருக்கும் காலையில் எழுவதில் இருந்து ஒழுக்கமாக இருக்க விருப்பம் தான். ஆனால் பலருக்கு முடிவதில்லை. ஒருவனுடைய இயலாமையால் ஒழுக்கத்தில் இருந்து தவறுகிறான். ஏனெனில் அவனிடம் அதற்கு தேவையான பலம் இல்லை. ஆனால் மனவலிமை உள்ளோர் கஷ்டப்பட்டாவது தனது நிலையை பேணிக்கொள்வர்.

ஏன் கடுமையானது என்றால் அது செய்தற்கு அருமையான செயல். (ஒரு கண்ணோட்டத்தில் அது எளிதானாலும் அது அன்றாடம் செய்வதற்கு கடினமானது தான்). 

ஏன் செய்ய முடியவில்லையென்றால் மன உரம் இல்லை என்பதாகும். மன உரம் இல்லாதவன் ஒழுக்கத்தை பேண முடியாமல் படியிறங்கி செல்கிறான். ஒரு விரதத்தை கடைப்பிடிக்க மன உரம் வேண்டும். அதனால் தான் உரவோர் என்றார் திருவள்ளுவர்.

ஏன் சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்கள் செய்யாவிட்டால் வரும் துன்பத்தை கீழ்நிலையை அறிவர்.

அண்மையில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞர் வி.சீதாராமன் எழுதியிருப்பார்.
"மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் " 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து. இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
One who has mental/inner strength and perseverance will not move away from discipline because they understand that when one is not disciplined they will face lots of difficulties in life. At the same time, mental/inner strength is built right from young age by following a discipline. When a person has strong Mental/inner strength it protects a person and puts back a person in bath when they make mistakes or move away from discipline

Questions that I ask to the kid
What will people with mental strength do and don't do?
What to do when you want to build mental strength?

No comments:

Post a Comment