உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல் குறள் 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது
குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
உள்ளினும்உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

தீராப் - முற்றுப்பெறாமல்

பெரு - peru   VI. v. i. grow thick, stout, numerous etc., see பரு.

பெரிய - periya   adj. id. [T. M. peru,K. piriya, Tu. pēr.] 1. Large, great; பெரிதான.பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9). 2. Elder; மூத்த. பெரிய தாயார். 3.Important; great; முக்கியமான. பெரிய காரியம்.

மகிழ் - இன்பம்; குடிவெறி; மது; மரவகை.

செய்தலால் - செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கள்ளினும் - கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள் 
கள் என்பது கள்ளு, மது, போன்றுவற்றை கூறலாம். இவை உடலிற்கு போதை தரும். ஒரு மயக்க நிலையில் வைத்துக்கொள்ளும். ஆதலால் இந்நிலையில் பலவற்றை மறந்து உறக்க நிலையில் இருப்பர். ஆனால் இந்த கள்ளினை நாம் உட்கொண்டால் மட்டுமே நமக்கு போதை ஏறும். கள்ளினை நினைத்தால் எவ்வித மயக்கம் நமக்கு ஏற்படாது. மேலும் கள் நமது உடம்பில் இருக்கும் நேரம் வரைக்கும் இந்த மயக்கம். கள் உடம்பில் தங்காது. மேலும் கள் என்பது அளவுக்கு அதிகமானால் உடம்புக்கு கேடுவிளைவிக்கும். மேலும் வயது ஆக ஆக கள் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது. ஆதலால் கள் உடம்பிற்கு கொடுக்கும் மயக்கம் ஒரு சிற்றின்பம் மட்டுமே.

ஆனால் காதல்/காமம் அப்படியல்ல.  காதலுருடன் (காதலியுடன்) இருக்கும் பொழுதும் மனதிற்கு இன்பம். கூடும் பொழுதும் இன்பம். அவர் இல்லாத பொழுது அவரைப்பற்றி நினைத்தால் கூட இன்பம். யார் சொல்லி கேட்டாலும் இன்பம். ஆதலால் காதல் உள்ளுக்குள் நிலைத்துவிடுகிறது. எவ்வளவு வயதானாலும் காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. வயது ஆக  ஆக அது இன்னும் அழகாக ஆழமாக ஆகிறது காதல். அது முற்றாத இன்பத்தை தந்துக்கொண்டே இருக்கிறது. ஆதலால் அது பேரின்பம்.

நிலைக்காத சிற்றின்பத்தை உண்டால் மட்டும் தருகிற கள்ளினை விட முற்றாத பேரின்பத்தை நினைத்தாலே தரும் காதல் மிக இனியது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , முன் கூடிய ஞான்றே இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம் . இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது படர் மிகுதி தன்கண்ணதாக நினைந்த தலைமகட்கும் உரித்தாகலின் அவ்வியைபுபற்றித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.]

(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து. (தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு).

மணக்குடவர் உரை
தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.

மு.வரதராசனார் உரை
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain