வேட்ட பொழுதின் அவையவை போலுமே

குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வேட்ட - வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம்

பொழுதின் - பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

போலுமேபோலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

தோட்டுணை - கணவன்

தோள் தாழ் (தோட்டார்) – கலந்தகாலத்து தோள்வரைத் தளர்ந்து தழைந்த

கதுப்பு - கன்னம், தாடை; தலைமயிர், கூந்தல்; பழத்தின்நடுவேயுள்ளகொட்டையைநீக்கிஅறுத்ததுண்டம்; பசுக்கூட்டம்.

கதுப்பினாள் - கூந்தல் உடையவள்

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
நாம் விரும்பும் பொருட்கள் எல்லாம் நாம் விரும்பிய பொழுதெல்லாம் நமக்கு பயன் தருகின்றன. அதுபோல பூக்களைச் சூடி தோள்வரை தழையதழைய கூந்தலை உடைய என் காதலியுடன் நான் விரும்பும் பொழுதெல்லாம் முயங்கினால் (கூடினால்) எனக்கு இன்பமே தருகிறாள் அவள். 

“தோட்டார் குழலியொடு” என்று சிலம்பிலும் (15:198, “தோட்டார் கதுப்பின் என்தோழி” என்று கலித்தொகையிலும் (117:10) வரும் எடுத்துக்காட்டுகள் தோட்டார் என்ற சொல்லை தோள் வரைத் தாழ்ந்த கூந்தலாகவே காட்டுகின்றன. தோட்டார் என்ற சொல் அகராதிகளில் காணப்படாத சொல்.

“வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்தோள்
பூட்டார் சிலைநுதலாட் புல்லாத் தொழியேனே”  (சீவக..1042)


என்ற சீவக சிந்தாமணி வரிகள் கூறுவது இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலின் யுடையாள் தோள்கள். (தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.).

மணக்குடவர் உரை
காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும், தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள். தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.


மு.வரதராசனார் உரை
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

No comments:

Post a Comment