இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

thirukkural meaning விளக்கம் குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் பொருட்பால், குடியியல், நல்குரவு
குறள் 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
இற்பிறப்பு - நல்லகுடியிற்பிறத்தல்; உயர்குடிப்பிறப்பு

இற்பிறந்தார் - நல்ல குடியில் ; உயர்குடியில் பிறந்தவர்கள் 

கண்ணேயும் - இடத்தே

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

சொற் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பிறக்கும் - பிறத்தல் - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்

தரும் - கொடுக்கும் 

தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள்
நற்குடியில் பிறந்தவர்கள் அல்லது தன்குடியை மேன்மையாக்கிக் கொண்டோர் இழிவான சொற்களையும் தீய சொற்களையும் பிற வாடக்கூடிய சொற்களையும் பேச மாட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட நற்குடியில் இருந்தாலும் வறுமை என்னும் நோய் /துன்பம் வந்துவிட்டால் அவர்களுக்கு சோர்வு/ தளர்ச்சி வந்துவிடும். அந்த தளர்ச்சி அவர்களை இழிவான சொற்களை பேசச்செய்யும்.

ஆதலால் சோர்வின் இயல்பையும் வறுமையின் கேடுகளையும் உள்ளுணர்ந்து வறுமை வரவிடாமல் ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேப்போல் நம் நண்பர் அல்லது உற்றார் வறுமையில் இழிவான சொற்களை கூறிவிட்டால் அதனை பெரிதாக பொருட்படுத்தாது அவரை மன்னித்து அவருக்கு உதவ வேண்டும். 

வறுமை ஒரு கொடிய வியாதி. அது, உடம்பையும், மனதையும், ஆத்மாவையும் நலிந்து போகச் செய்துவிடுகிறது” என்று வைக்கம் முகம்மது பஷீர் கூறுகிறார்.

ஔவையார் நல்வழிப் பாடலில் பத்து சிறந்த குணங்களைச் சுட்டி, ஏழ்மையும், அதன் காரணமாகப் பசியும் வந்திட நற்குடிப் பிறப்பாளராயிருப்பினும் அவையெல்லாம் நில்லாமல் பறந்துவிடும் என்கிறார். இப்பத்துப் பண்புகளும் அழிதலாலே ஒருவரிடமிருந்து இழிசொற்களால் இரந்து வேண்டுதலும் பிறக்கின்றன. ஈயென இரத்தல் இழிது என்று முன்பே படித்திருக்கிறோம். இனி, அப்பாடலானது:

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.).

மணக்குடவர் உரை
நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.

மு.வரதராசனார் உரை
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain