அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

thirukkural meaning விளக்கம் குறள் 1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை பொருட்பால், குடியியல், நாணுடைமை
குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

அன்றோ - அதுவல்லவா 

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

உடைமை - சொத்து (சொந்தம்), உரிமை, மதிப்பு, செல்வம்

சான்றோர்க்கு சான்றோர் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இன்றேல் - இல்லை என்றால்

பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை

அன்றோஅதுவல்லவா 

பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.

நடை - காலாற்செல்லுகை; பயணம்; அடிவைக்குங்கதி; வாசல்; இடைகழி; ஒழுக்கம்; வழக்கம்; நீண்டநாள்; நடைகூடம்; இயல்பு; அடி; கூத்து; தொழில்; செல்வம்; ஒழுக்கநூல்; நித்தியபூசை; கோயில்; கோள்முதலியவற்றின்கதி; கப்பல்ஏறும்வழி; மொழியின்போக்கு; வாசிப்பின்நோட்டம்; தடவை.

முழுப்பொருள்
நாணுடைமை எனில் பழி பாவங்களுக்கு அஞ்சி வெட்கப்படுதல் என்பதாகும். நீதிநெறியையும் அறத்தையும் பற்றி பணிவுடன் இருத்தல் ஆகும்.

கற்றுணர்ந்த செயலாற்றிய சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும். அவர்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும். ஆனால் அந்த நாணுடைமையில்லையெனில் அவர்களிடம் கர்வத்தின் வெளிப்பாடாக இருக்கும் (பெரிய) நடை / போக்கு / செல்வம் / தொழில் எல்லாம் ஒரு நோயாகவே இவ்வுலகம் கருதும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.

மு.வரதராசனார் உரை
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

சாலமன் பாப்பையா உரை
நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain