காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

thirukkural meaning விளக்கம் குறள் 866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும் பொருட்பால், நட்பியல், பகைமாட்சி
குறள் 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
காணுதல்- அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணாச் - சிறுபாம்பு, காணாமல்; அறிந்து ஆராயாமல்

சினத் - சினம் -  கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.
சினத்தல் - கோபித்தல்; புண்முதலியனசிவத்தல்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு.

பெருங் - பெரும்
பெரு - peru   VI. v. i. grow thick, stout, numerous etc., see பரு.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

காமத்தான் - விருப்பம் / ஆசை கொண்டவன் ; பெண்ணுடன் கூடிய புணர்ச்சியின்பத்தில் நாட்டம் உடையவன்

பேணாமை - பகைமை

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணப்படும் - விரும்பப்படும்

முழுப்பொருள்
விளைவுகளை அறிந்து ஆராயாமல் சினம் கொள்ளுபவனிடம், அளவிற்கு அதிகமாக மிகுதியான பொருளின் மீதும் பெண்ணின் (/ புணர்ச்சியின்பத்தின்) மீதும் ஆசை உடையவனிடம் பகைமையை பகைவர் விரும்புவர். ஏனெனில் அத்தகையவரை வீழ்த்துதல் மிக எளிது.

அறிந்து ஆராயாமல் சினம் கொள்ளுபவர் தவறான முடிவுகளை எடுப்பர். அது பகைவர்க்கு சாதகமாக இருக்கும். பெண்ணிடத்திலும் பொருளிலும் அதிகாரத்திலும் பதவியிலும் அதிக நாட்டம் (பேராசை) உடையவர் மெய்யான செயல்களில் செயலாற்ற கவனம் செலுத்தமாட்டார். அதனால் அத்தகையவரை வீழ்த்துதலும் பகைவருக்கு மிக எளிது.

மகாபாரதத்தின் துரியோதனனை நினைவுபடுத்தும் குறள். பாண்டவர்மேல் பொறாமையின் காரணமாக அவன் கொண்ட கோபமும், அதில் பாண்டவர் பக்கம் இருக்கும் துணை யாரென்றும் எண்ணிப்பாராது இருந்தமையும் தெரிந்ததுதான். மூத்தவனும், அரசுரிமைக்கு அதிகாரம் பெற்றவனுமான தருமன் இருக்கையிலே, ஊசிமுனையளவுக்குக் கூட நாட்டுரிமை பாண்டவர்க்குக் கூடாது, நாடு முழுவதும் தமக்கே வேண்டுமென்ற அவனது பேராசையும் அத்தகைய பகையை பாண்டவர் விரும்பி ஏற்றதற்கான காரணத்தை கூறி, அப்பகையை மாட்சிமை படுத்துகின்றன.

அடுத்தவன் மனைவி சீதை என்று தெரிந்தும் அவள் மீது கொண்ட பேராசையினால் இராவணன் மதிகெட்டு அழிந்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும். இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain