விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

thirukkural meaning விளக்கம் குறள் 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து பொருட்பால், படையில், படைச்செருக்கு
குறள் 776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
விழுப்புண் - போரில்முகத்திலும்மார்பிலும்பட்டபுண்; இடும்பைதரும்புண்.

படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

படாத - உண்டாகாத , நிகழாத

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.; யாவும்

வழுக்கினுள் - வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

வைக்கும் - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

நாளை - அடுத்ததினத்தில்; நாளுக்குரிய.

எடுத்து - சுமை, பொதி.

முழுப்பொருள்
ஒரு வீரருக்கு நெறிப்படி ஒரு நாள் என்றால் அது விழுப்புண்கள் பட்ட நாள்  மட்டும் தானாம். அதாவது போர்க்களத்திலும் பயிற்சிகளத்திலும் மார்பிலும் முகத்திலும் பட்ட புண்கள் அவனுடைய நாட்களை அடையாள படத்துகின்றன. மற்ற நாட்களையெல்லாம் வீணாய் கழிந்த பயனற்ற நாட்களாகவே கருதுகிறான்.

இது போர் புரிந்தவனுக்கு என்று மட்டும் கருதாமல் எல்லோருக்கும் பொதுவாக கருதினாலும் பொருத்தமாக இருக்கும். செயலாற்றாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று கருதலாம். செயலாற்றிய நாள் என்றால் முட்டிமோதி கற்றுணர்ந்த நாட்களும் செயல் புரிந்து ஆக்கம் விளைவித்த நாட்களுமாகும்.

பேராசிரியர் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்த வரலாற்று நாவலாம் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும், ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில், விஜயாலயச் சோழர் தொண்ணுற்றாறு விழுப்புண்களைத் தாங்கியவராகவும் குறிப்பிடப்படுகின்றனர்.

இலக்கியங்களில் விழுப்புண் பெருமையப் பாடிய புலவர்கள் பலர். ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் வாகையப்பற்றிய பாடிய புறநானூற்றுப்பாடலில் 
“அருஞ்சமம் ததைய நூறி நீ 
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே!” (புறநா.93:15) 
”இரும்புசுவைக் கோண்ட விழுப்புண்” (புறநா.180.4)
”போரடு தானை எவ்வி மார்பின்” 
எஃகுறு விழுப்புண் பலவென” (புறநா.233:6-7)
என்பார்.

”ஒளிறுவாள் விழுப்புண் காணிய” (நெடுநல்.172)

இசை விழுப்புண்ணாற்றும் மருந்தானதை மலைப்படுகடாம் இவ்வாறு சொல்கிறது:

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்க் காப்பென

அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்’
                                           – மலைபடுகடாம்-302-304

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain