குறள் 764
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
[பொருட்பால், படையில், படைமாட்சி]பொருள்
அழிவு - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுகம்
வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.
வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
முழுப்பொருள்
பகைவரிடத்தில் போரில் தோல்வியடையாமலும், பகைவரின் வஞ்சனையான (வியூகங்களில்/) சூழ்ச்சிகளில் சென்று சிக்கிக்கொள்ளாமலும், வழிவழியாய் வந்த வீரத்தன்மை கொண்டதே ஒரு படைக்கு மாட்சியாகும்/சிறப்பாகும்.அதுவே படை.
கல்லிலே பொருந்தி நின்றான் என் தந்தை; என் கணவன் போர்களத்திலே பட்டான்; பகைவர்முன் நின்று போரிலே விழுந்தார் என்னுடைய தமையன்மார்; தன் சேனையே அழிந்தாலும், தான் அழியாது நின்று, அம்பைச் செலுத்த பகையரசன் மேல் பாய்ந்து பின்னர் முள்ளம்பன்றிபோலப் பட்டான் என்னுடைய புதல்வன் என்று உறுதிகுலையாத பண்டுதொட்டு வந்த வீரத்தைப் பேசும் தமிழ் மறப்பெண்ணைக் கொண்டாடும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று “வழிவந்த வன்கண்” என்பதைச் சொல்லுகிறப்பாடல் இதோ:
கன்னின்றா னெந்தைக்கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் -பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தானென் னேறு
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.).
மணக்குடவர் உரை
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.
மு.வரதராசனார் உரை
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
சாலமன் பாப்பையா உரை
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
No comments:
Post a Comment