அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

thirukkural meaning விளக்கம் குறள் 635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை பொருட்பால், அமைச்சியல், அமைச்சு
குறள் 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆன்று நிறைந்து:விரிந்து; நீங்கி.

அமைந்த  - அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

சொல்லான் - சொற்களை பயன்படுத்துபவனை 

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

திறன் - திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு, பசு, எருமை கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிந்தான் - அறிந்தவன்

தேர்ச்சித் - ஆராய்ச்சி; கல்வி; தெளிவு; பயிற்சி; தேர்வில்வெற்றிபெறுகை; ஆலோசனை.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள் 
ஒரு அமைச்சரை எப்படி தேர்வு செய்யவேண்டும்?
1. அறம் அறிந்துணர்ந்தவாக இருத்தல் வேண்டும். அறத்தின்படி நடப்பவராக இருத்தல் வேண்டும். அறத்தின் படி செயலாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

2. அறிவு நிறை பெற்று கூறுபவற்றை சரியான தெளிவான குறைவான சொற்களில் அடக்கமாக கூறுபவராக இருத்தல் வேண்டும் 

3. எல்லாக்காலங்களிலும் எந்த ஒரு சூழலிலும் செயலாற்றக்கூடிய திறமை, வலிமை, மேன்மை, இயல்பு, மனஉறுதி கொண்டவராய் இருத்தல் வேண்டும். 

இம்மூன்று குணமும் திறனும் இருக்கிறதா என்று ஆராய்ந்து ஒரு அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். 

பாரதி அன்னைப் பராசக்தியை வேண்டுகின்ற பாடல் ஒன்று, அமைச்சருக்குச் சொல்லப்படும் குணநலன்களுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.

“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ; தெளிந்தநல் லறிவு வேண்டும்;
………..
மனதி லுறுதி வேண்டும்; வாக்கினி லேனிமை வேண்டும்;”

உலகமக்களின் சார்பில் தனக்காக வேண்டுவது போல், ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியவற்றைப் பற்றி பாரதி பாடிய, பாடல், இவ்வதிகாரத்தில் அமைச்சருக்கு வேண்டிய குணநலன்களாக வள்ளுவர் சொல்லியிருப்பதை ஒத்திருக்கின்றன.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.

மு.வரதராசனார் உரை
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain