தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

thirukkural meaning விளக்கம் குறள் 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்
குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
உய்தி - ஈடேற்றம், உயிர்வாழ்தல், தப்பிப்பிழைத்தல், நீங்குகை
உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

உய்மை - உயிர்வாழ்தல்

என்பது - என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

மற்று -  ஓர்அசைநிலை; மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி
வாய்மை - உண்மை ; மெய்ப்பொருள்

வேண்ட - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
தூ என்றால் தூய்மை அதாவது மனத்தூய்மை என்று பொருள். மனத்தூய்மை என்பது ஆசையில்லாமல் இருப்பதால் வரும். ஆசையில்லாமல் இருப்பது உண்மைப்பொருளாம் மெய்ப்பொருளை வேண்டுவதால் வரும். பொருள் அல்லாதவற்றை விரும்பாது பொருளுள்ள மெய்ப்பொருளை வேண்டினால் மனத்தூய்மை வரும்.  வாழும்போது தூய்மையும், உயர் மெய்ப்பொருளைத் தேடி அடைவதும், மீண்டும் பிறவாது வீடுபேறினை அடைவதற்கான வழிகள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.